தயம்மும் செய்வது எப்படி?
மவ்லவீ, ஜமீலுத்தீன் மிஸ்பாஹி, கோட்டக்குப்பம்
”முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹ் செய்து) கொள்ளுங்கள்;.
உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;.
தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை – ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.”(அல்குர்ஆன்: 5:6.)
”…. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி ”தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்). நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:43)
மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் வகுத்துத் தந்திருக்கும் கோட்பாடுகள் மிக மிக இலகுவானவை. எல்லோராலும், எக்காலத்திலும் போற்றத்தக்கவை, செயலாற்றத்தக்கவை. அதில் ‘தயம்மும்’ ஒன்றாகும்.
ஹைள் – நிஃபாஸிலிருந்து விடுபெற்றோ, கனவில் ஸ்கலிதம் ஆகியோ, உடலுறவு கொண்டதாலோ எப்படியோ ஒருவகையில் குளிப்பு உங்கள் மீது கடமையாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஏதோ வியாதியின் காரணமாக குளிக்க முடியவில்லை. அப்படி குளித்தால் பீடித்திருக்கும் நோய் இன்னும் அதிகரித்துவிடும் என்று உறுதியாகிவிட்டது. இந்நிலையில் குளிக்க வேண்டாம். எனினும் ‘தயம்மும்’ செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறே உளூவுச் செய்வதால் பாதிக்கப்பட்டிருக்கும் உடல் நிலைக்கு இன்னும் சிரமம் அதிகரித்து விடும் என்றோ, உடல்நலக்குறைவு மீண்டும் ஏற்பட்டுவிடும் என்றோ உறுதியான எண்ணம் இருக்குமானால், ‘தயம்மும்’ செய்து கொள்ள வேண்டும்.
உளூவு – குளிப்புக்குப் பகரமாக செய்திடும் தயம்மும்மினால் தொழுகை, நோன்பு நோற்றல், திருக்குர்ஆன் ஓதுதல் போன்ற அனைத்து செயல்களும் ஆகும்.
தயம்மும் செய்யும் முறை:
முதன் முதலில் ‘அசுத்தத்திலிருந்து தூய்மையை நாடுகிறேன்’ என்று நிய்யத் செய்து ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ கூறி விரல்களை விரித்தவண்ணம் இருகைகளையும் சுத்தமான பூமியில் அடித்து முன்னும் பின்னும் விரித்தவாறே அப்படியே இலேசாக இரு கைகளையும் இழுக்க வேண்டும். இழுத்த பின்னர் எடுத்து கைகளின் முதுகுப் புறமாக இருகைகளையும் இலேசாக தட்டிக்கொண்டு முதன்முதலில் உளூவுச்செய்யும் தருணம் எங்கிருந்து எதுவரை முகத்தைக் கழுவுதல் ஃபர்ள் – கட்டாயமோ அதுவரை முகத்தை நன்றாகத் தடவுதல் வேண்டும்.
பின்னர், மறுமுறையும் அப்படியே கைகளை பூமியில் அடித்து இடது கையின் நான்கு விரல்களால் (கட்டைவிரல், உள்ளங்கை நீங்கலாக) வலது கையின் நான்கு விரல்களின் அடிப்பாகத்தின் நுனியிலிருந்து ஆரம்பித்து, கையின் வெளி பாகத்திலிருந்து தடவியவண்ணம் முட்டுக்கை முனையுள்பட கொண்டுவர வேண்டும்.
உளூவின் சமயம் கைகளை எதுவரை கழுவுவது ஃபர்ளு – கடமையோ அதுவரை முட்டுக்கையை விரல்களால் தடவியவாறு இப்பொழுது வலதுகையின் உட்பகுதியிலிருந்து தடவியவாறு மணிக்கட்டுவரை கொண்டுவர வேண்டும். இதற்கிடையில் கட்டைவிரலும், உள்ளங்கையும் எங்கும் படாமலிருக்க வேண்டும்.
மணிக்கட்டுவரை கையை கொண்டுவந்தபின் இதுவரை படாமலிருக்கும் கட்டைவிரலால் வலது கையின் கட்டைவிரலின் வெளிபாகத்தின் நுனிவரை அதன் இடைவழி உள்பட நன்றாக மஸஹ் (தடவ) செய்ய வேண்டும். இப்பொழுது ஐந்து விரல்களும், வலது கையின் மஸஹும் முடிந்து விட்டது.
பின்னர் இடது கையை வலது கையால் மஸஹ் செய்த வண்ணமே தடவுதல் வேண்டும். அதாவது வலதுகையின் நான்கு விரல்களால் இடது கையின் கீழ் பாகத்தின் நுனியில் இருந்து தொடங்கி, முட்டுக்கை முனையுள்பட இழுத்துவந்து, முட்டுக்கையைத் தடவியவாறு இடது கையின் உள்பகுதியை உள்ளங்கையால் மஸஹ் செய்தவாறு மணிக்கட்டுவரை கொண்டுவந்து வலது கட்டைவிரலால் இடதுகையின் கட்டைவிரலின் அடிபாகம், உள்பகுதியெல்லாம் மஸஹ் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் மஸஹ் சரிவர நிறைவேறும் பொருட்டு ஒரு கையின் விரல்களை மறுகையின் விரல்களால் விரல்களின் இடைவழியில் தடவ வேண்டும். உளூவு செய்யும்போதும், குளிக்கும்போதும் எவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் தண்ணீர் செலுத்துவது கடமையோ, அவ்வாறே தயம்மும் செய்யும்போதும் அதற்குரிய ஒவ்வொரு இடத்தையும் கவனத்தில் நிறுத்தி மஸஹ் செய்ய வேண்டும்.
மஸஹ் செய்யும் சமயம், இடது கைவிரல்களால் வலதுகையின் கீழ்பாகத்தைத் தடவிக்கொண்டு வரும்போது இடதுகையின் உள்ளங்கை படாமலிருக்க வேண்டும். வலதுகையின் உள்பகுதியைத் தடவும்போதுதான் அவ்வுள்ளங்கையால் மஸஹ் செய்ய வேண்டும். இதனை கவனித்தில் கொள்க.
அடுத்து கொஞ்ச இடமேனும் முகம்-கைகளில் தடவாமல் விடுபட்டிருந்தால் தயம்மும் நிறைவேறாது. எப்படி உளூவுச் செய்யும்போது முகம்-கைகளில் தண்ணீர் படாமல் சிறிது இடம் விடுபட்டிருந்தாலும் உ@வு கூடாதோ அதே சட்டம்தான் தயம்முமிற்கும்.
குளிப்புக்கும் உளூவிற்குமுள்ள தயம்முமின் முறை ஒரேவிதம்தான் என்பதை நன்கறிக.
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால்
தயம்மும் செய்து தொழுதபின் தண்ணீர் கிடைத்து விட்டால் உளூச் செய்து மீண்டும் அத்தொழுகையை தொழ வேண்டியதில்லை.
இரண்டு நபர்கள் பிரயாணத்தில் சென்றார்கள். தொழுகை நேரம் வந்தது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இல்லை. எனவே, அந்த இருவரும் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து தொழுதனர். பின்பு, அத்தொழுகையின் நேரத்திலேயே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்து விட்டது. அப்போது அந்த இருவரில் ஒருவர் உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுதார். இன்னொருவர் தொழவில்லை.
பிரயாணத்திலிருந்து ஊர் திரும்பியதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இதனை அவ்விருவரும் கூறினர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மீண்டும் தொழாத நபரை நோக்கி, “நீர் எனது வழிமுறையைக் கடைபிடித்தீர். (தயம்மும் செய்து நீர் தொழுத) உமது தொழுகையையே உமக்கு போதும்” என்றும், உளூச் செய்து விட்டு மீண்டும் தொழுத நபரை நோக்கி “உமக்கு இரு கூலிகள் உள்ளது” என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: நஸயீ, அபூதாவூத்)
கடுங்குளிரின் கேடு காரணமாகவும் தயம்மும் செய்யலாம்
கடுங்குளிரின் கேடு காரணமாக தயம்மும் செய்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கீகரித்துள்ளார்கள்
“தாதுஸ்ஸலாஸில்” எனும் போருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அனுப்பி வைத்தார்கள். கடுங்குளிரான ஓர் இரவில் எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டு விட்டது. குளித்தால் எனக்குக் கேடு ஏற்படும் எனக் கருதிய நான் தயம்மும் செய்து என் தோழர்களுக்கு ஸுப்ஹு (அதிகாலை தொழுகை) தொழுவித்தேன்.
மதீனாவிற்கு நாங்கள் திரும்பியதும் என் செயல் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் என் தோழர்கள் கூறினர். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அம்ரே! குளிப்பு கடமையான நிலையில் உம் தோழர்களுக்குத் தொழுவித்தீராமே” என்று என்னிடம் கேட்டார்கள். “உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்ற இறை வசனம் என் நினைவுக்கு வந்ததால் தான் தயம்மும் செய்து தொழுதேன்” என்றேன்.
இதனை கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்களே தவிர குறை காணவில்லை. (அறிவிப்பவர்: அம்ர்பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்)
மேற்கண்ட ஹதீஸிலிருந்து குளிரின் காரணமாகத் தயம்மும் செய்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
எவ்வாறு உளூவை அழகாக, முறையாகச் செய்கிறோமோ அதுபோல தயம்மும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது அதனையும் அழகாக, முறையாகச் செய்வோமாக. அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
குறிப்பு:மண் சுவர் மீதோ அல்லது புழுதி படிந்துள்ள சுத்தமான பொருள் மீதோ தயம்மும் செய்வது கூடும். பெயின்ட் போன்ற மண் சாராத பொருளால் சுவர் பூசப்பட்டிருந்தால் அதன் மீது புழுதி படிந்திருந்தால் மட்டும் தயம்மும் செய்யலாம்.