[ “சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம்” என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் அல்லது “சுதந்திரமாக வாழ்கிறோம்” என்று நாம் நினைத்துக் கொண்டாலும் உண்மையில் ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் ஆளும் அரசுகளால் நாம் “அடிமைப்படுத்தப்பட்டு வருகிறோம்” என்ற அதிர்ச்சியான உண்மைகள் புலப்படும்.]
சுதந்திரம் என்றால் என்ன? நம்மை அந்நியன் ஆண்டுகொண்டிருந்தான், இப்போது நம்மை நாமே ஆள்கிறோம் இது தான் சுதந்திரம். விரும்பியவாறு வாழலாம், விரும்பிய தொழில் செய்யலாம், விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம் என்று அது மேலும் விரிக்கப்படுகிறது. என்றால் நீங்கள் 1947 க்கு முன்னர் விரும்பிய இடங்களுக்கு சென்றிருக்க முடியாதா? விரும்பிய தொழிலை செய்திருக்க முடியாதா? விரும்பியபடி வாழ்ந்திருக்க முடியாதா? என்றால் சுதந்திரம் என்பது என்ன பொருளில் ஆளப்படுகிறது. மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி மக்களாட்சி. இப்போது மக்களாட்சி நடை பெறுகிறது என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால்,
மக்கள் என்பது யார்? கோடிகளில் குளிக்கும் அம்பானி சகோதரர்களும் ஒரு வேளை உணவுக்கும் வக்கின்றி திக்கற்று நிற்கும் குப்பனும் சுப்பனும், ஒரே தரத்தில் மக்களா? எந்த மக்களால் எந்த மக்களுக்காக எந்த மக்கள் ஆளும் ஆட்சி இது? என்பது தான் இப்போது முன்நிற்கும் மிகப்பெரும் கேள்வி. அன்று ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள், இன்று நாமே நம்மை ஆள்கிறோம் என்பது ஒன்றே சுதந்திரத்தின் பொருளை முழுமைப்படுத்த போதுமானதாகுமா?
அன்றைய ஆங்கிலேயனின் ஆட்சியின் செயல்பாடு எந்த விதத்தில் இருந்ததோ அந்த விதத்திலிருந்து சற்றும் மாறாமல், தெளிவாகச் சொன்னால் அந்தவிதத்தின் உச்சத்தில் தான் இன்றைய ஆட்சியின் செயல்பாடும் இருக்கிறது. என்றால் எது அந்நிய ஆட்சி? எது நம்முடைய ஆட்சி?
இது தவறு? இது தீமை? என்று சொல்லும் அரசுகள் அந்த தவறையும் அந்த தீமைகளையும் மக்களுக்கு உருவாக்கித் தருபவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் அதற்கு காரணமே நாங்கள் தான் என்ற உண்மையை மூடி மறைத்து புதிய,புதிய சட்டங்கள் மூலமும், புதிய புதிய தண்டனைகள் மூலமும் ஆளும் அரசுகளை தங்களை நம்பியிருக்கும் நாட்டு மக்களை அடிமைகள் போல நடத்தி வருகிறது.
“ஜனநாயக ஆட்சி” உள்ள நாட்டில் இருக்கிறோம்,நாங்கள் சுதந்திர நாட்டில் வாழ்ந்து வருகிறோம் என்று கொஞ்சம் கூட வெட்கப்படாமல் சொல்லிக்கொண்டு நாமும் அடிமை வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறோம். இதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.
இன்னும் அடிமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை பட்டியலிட்டே சொல்லலாம்
1. புகைப்பிடித்தல் ஒரு மனிதனின் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று அறிவியலும், அரசாங்கமும் சொல்கிறது.புகைப்பிடிப்பவர்களை விட அந்த புகை கலந்து வரும் காற்றை சுவாசிப்பவர்களுக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்குகிறது என்று ஆளும் அரசு பொது இடங்களில் புகைப் பிடிக்கும் தடை சட்டத்தைக் கொண்டு வந்து பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் என்று மக்களின் பொது இட சுதந்திரத்தை தடை செய்தது.
அதே நேரம் அந்த புகைபிடிப்புக்கு காரணமான அதை தயாரித்து விற்பனை செய்பவர்களை அரசு என்ன செய்தது? அந்த தயாரிப்புகளை தடை செய்ததா? ஒன்றுமே செய்யவில்லை, முதலில் தயாரித்து விற்பதை தடை செய்யாமல் அதை வாங்கி பயன்படுத்துபவர்களை துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்?
“புகைப்பிடிப்பது கேடு” என்று வரும் போது மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்த தயாரிப்பை அல்லவா நிறுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்யவில்லையே அரசு. மாறாக நாங்கள் தயாரித்து விற்போம் அதை நீங்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தினால் அபராதம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடும் இந்த செயல்தான் ஜனநாயக ஆட்சி முறையா?
2. மது குடித்தல் தீமை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால்,மது குடித்தல் “நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு” என்ற வாசகத்துடன் அரசே அந்த மதுவை மக்களுக்கு விற்பனை செய்யும் கேவலமான செயலை என்னவென்று சொல்வது? மக்களின் நலம் பேணும் அரசு என்று வாய் கூசாமல் பொய்களை பேசி மக்களை ஒரு போதைக்குள் வைத்துக் கொண்டு அவர்களுடைய உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் இந்த பாவச்செயலுக்கு என்ன பரிகாரம் தேடப் போகிறது ஆளும் அரசுகள்.
3. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் அது நம்மை தாங்கி நிற்கும் பூமித்தாய்க்கு தீமை, அதனால் இந்த பூமியில் வாழும் நமக்கும் தீமை என்று வாய் கிழிய வக்கனையாக பேசும் அரசு அந்த பிளாஸ்டிக் பொருட்களில் தயாரிப்பை நிறுத்துவதை விட்டு விட்டு அதை வாங்கி பயன்படுத்தும் மக்களை மட்டும் தண்டிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
4. “ஹெல்மெட்” என்று சொல்லப்படும் தலைக்கவசம் போடுவது வாகன ஓட்டிகளுக்கு நல்லது தான் என்று சொல்கிறது இந்த அரசு, நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது என்றும் அதை தவிர்க்க தலைக்கவசம் அணிந்து கொள்வதை கட்டாயமாக்கி மக்களின் சுதந்திரத்தை பிடுங்கிக் கொள்ளும் இந்த அரசு வாகன விபத்துக்கு மிக மிக முக்கிய காரணம் அந்த வாகனங்கள் செல்லும் சரி இல்லாத சாலைகள் தான் என்ற தனது தவறை மட்டும் என் ஒத்துக் கொள்ள மறுக்கிறது?எத்தனை விபத்துகள் சாலைகள் சரி இல்லாத காரணங்களினால் நடக்கிறது?இந்த தவறை மூடி மறைத்து விட்டு தலைக்கவசம் போடாமால் போவதால் தான் அதிக விபத்துகள் நடக்கிறது என்று சொல்வது எதில் சேர்த்தி?
5. பலச்சாறுகளே கலக்காத வெளிநாட்டு குளிர்பானங்கள் நச்சுப் பொருட்கள் கலந்தது என்று அறிவியல் ஆய்வுகள் சொல்கிறது, அதை குடித்தால் மனித உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று அறிவியல் அதை நிரூபித்தும் விட்டது,ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் அந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்திருக்கிறதா? இல்லையே? மாறாக அதை காற்று புக முடியாத இடத்தில் கூட விற்பனை செய்ய வைத்து வேடிக்கை பார்த்து விட்டு அந்த நிறுவனங்கள் தரும் வரிப்பணத்தில் ஆட்சி நடத்துகிறது.
6. ஆங்கிலேய ஆட்சியில் ‘இம்’ என்றால் சிறைவாசம் அடக்குமுறை. இப்போது மட்டும் என்ன? தடா, பொடா முதல் எத்தனை அடக்குமுறை கருப்புச் சட்டங்கள்? மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிராக அது தீங்கானது என்று மக்களிடம் சொன்னாலோ, அச்சடித்து நூலாக வெளியிட்டாலோ குற்றம் என சட்டமியற்றியிருக்கிறது இப்போதைய அரசு. இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?
7. ஆங்கிலேய ஆட்சியில் போராடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். இப்போது மட்டும் என்ன? தண்டகாரண்யாவில் தங்களின் வாழ் நிலங்களை பாதுகாக்கப் போராடும் பழங்குடியினர் மீது கொலை வெறியை கட்டவிழ்த்து விட்டுள்ளது அரசு. தீவிரவாதிகளுடன் சண்டை என்ற பெயரில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் போலி மோதல்களில் கொல்லப்படுகிறார்கள். செல்வாக்குப் பெற்ற தலைவர்கள், அறிவுத்துறையினர் பொய்வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?
8. ஆங்கிலேய ஆட்சியில் கலைச் செல்வங்கள் உட்பட அனைத்தையும் தன் நாட்டுக்கு கடத்திச் சென்றனர். எத்தனை அரிசி ரகங்கள், எத்தனை மூலிகை மருத்துவ மரபுச் செல்வங்கள், எல்லாம் காப்புரிமை என்ற பெயரால் களவாடப்பட்டுச் செல்வதற்கு அரசு துணை நிற்கிறது. பாஸ்மதி அரிசியின் காப்புரிமையை திரும்பப்பெற மக்கள் போராடவேண்டியிருந்தது. வேம்புக்கும் ஆலங்குச்சிக்கும் கூட வெளிநாட்டில் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அரசு செய்தது என்ன? இதை நம்முடைய ஆட்சி என்று சொல்லமுடியுமா?
9. தண்ணீருக்காக மக்கள் காலிக்குடங்களுடன் பல கிலோமீட்டர் கால்கடுக்க நடந்து சொட்டுத்தண்ணீர் கிடைக்காத நேரத்தில் ஆறுகளையும் குளங்களையும் பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக்கொடுக்கும் அரசுகளை, நிலத்தடி நீரை கேள்வி கணக்கின்றி எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?
10. விளைந்த தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் தள்ளிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை ஏழைகளுக்கு முறையாக விநியோகம் செய்யாமல் புழுக்கச்செய்து எலிகளுக்கு உணவாக்கிவிட்டு, கொல்முதல் செய்யச் சொல்லி போராடும் விவசாயிகளுக்கு நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலையில் பன்னாட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?
11. மாணவர்களின் கல்விக்கு, சிறு குறுந்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு சீராக மின்சாரம் வழங்காமல் மின் பற்றாக்குறை காற்று வீசவில்லை என்று காரணம் கூறி மக்கள் தலையில் மின்வெட்டை சுமத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கும் அரசுகளை நமக்கான அரசு என்று எப்படிச் சொல்வது?
12. லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போனது குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாத அரசு அம்பானி சகோதரர்களுக்குள் சொத்துச் சண்டை வந்தபோது அவர்களை சமாதனப்படுத்துவதற்கு கவலைகொண்ட அரசை எப்படி அழைப்பது? இந்த கேவலத்தையும்,காட்டு மிராண்டித்தனத்தையும் எங்கு போய் சொல்வது? இப்படி பல தவறுகளை உதாரணங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.
“சுதந்திரமான நாட்டில் வாழ்கிறோம்” என்று நாம் சந்தோஷப்பட்டுக் கொண்டாலும் அல்லது “சுதந்திரமாக வாழ்கிறோம்” என்று நாம் நினைத்துக் கொண்டாலும் உண்மையில் ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் ஆளும் அரசுகளால் நாம் “அடிமைப்படுத்தப்பட்டு வருகிறோம்” என்ற அதிர்ச்சியான உண்மைகள் புலப்படும்.
மக்கள் தவறு செய்தால் அரசாங்கம் சட்டங்களைப் போட்டு தண்டிக்கிறது, ஆனால் அரசாங்கமே தவறு செய்தால்..?
posted by: Abu Safiyah