அப்துல்லாஹ் பின் உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “என் தந்தை உமர் பின் அல் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத் தலைமுடி உடைய ஒருவர் வந்தார். பயண அடையாளம் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் எவருக்கும் அவரை(யார் என)த் தெரியவில்லை.
அவர் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார்.
அவர் தம் கைகளைத் தம் தொடைகள் மீது வைத்துக் கொண்ட பிறகு, “முஹம்மதே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இஸ்லாம் என்பது, வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும் ஜகாத்தைச் செலுத்தி விடுவதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் உங்களுக்குச் சென்று வர இயலுமெனில் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அந்த மனிதர், “உண்மை உரைத்தீர்கள்” என்றார்.
கேள்வியும் கேட்டுவிட்டு பதிலை உறுதியும் படுத்துகிறாரே என்று அவரைக் குறித்து நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், “ஈமான்(இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்” என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் “உண்மை உரைத்தீர்கள்” என்றார்.
அடுத்து அவர், “இஹ்ஸான்(அழகிய அணுகுமுறை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் அவன் உங்களைப் பார்க்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
அவர், “எனக்குச் சொல்லுங்கள், யுக முடிவு எப்போது?” என்று மேலும் கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “வினவுபவரைவிட வினவப் படுபவர் அறிந்தவர் அல்லர் என்று விடையளித்தார்கள். மேலும் அவர், “மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார்.அதற்கு நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பதும் காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்திருந்த ஏழை ஆட்டு இடையர்கள், போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
பிறகு அவர் சென்று விட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உமரே! கேள்வி கேட்டவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்தாம் (வானவர்)’ஜிப்ரீல்’(அலைஹிஸ்ஸலாம்). உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்தார்” என்றுச் சொன்னார்கள்”. (அறிவிப்பாளர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
குறிப்பு: நபித் தோழர்களும் அவர்களுக்குப் பின்வந்தோரும் இந்த முதல் ஹதீஸில் இடம் பெற்றாலும் மூல நிகழ்வில் நேரடித் தொடர்புடையவரும் இந்த ஹதீஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்ற நபித் தோழருமான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸை அறிவிப்பதால் இதன் மூல அறிவிப்பாளரான உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் என இங்குக் குறிப்பிடப்படுகிறார்.