அழுகிப்போகும் உணவுப் பொருட்களைக் குப்பையில் கொட்டுவோமே தவிர, ஏழைகளுக்கு வழங்க மாட்டோம் என அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம்?
அடகு வைக்கப்பட்டு விட்டதா நம் நாடு – நம் அனுமதியில்லாமல்? சக மனிதனுக்கு உணவு தர முடியாது என்று எவன் சொல்வான், அதை எவன் விடுவான்? இதோ இங்கே நம் தாய்த்திருநாட்டின் தலைமைக் குடிமகன், முதன்மை அரசியல் தலைவன் சொல்கிறான்- வீணாகட்டும் உணவு அதை ஏழைகளுக்குத் தர முடியாது என்று. பசிக்கு உணவில்லை என்றால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்? எப்படி வீணாக்காது அழிப்பது என்று யோசிப்பார்களாம்! வெட்கக்கேடு!
இன்று நேற்றல்ல இந்தத்திமிர். இதே பிரதமர் நிதியமைச்சராக இருக்கும் போதே ஆரம்பமாகியது இது. அப்போது குரல்கள் ஒலிக்காமல் இல்லை, ஆனால் செவிகள் தான் தயாராகவில்லை. யாருக்காக இந்தச் சவடால்? எதற்காக இந்த நாடகம்? யார் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இந்த வசனம்?
காலையில் பத்திரிக்கை படித்த உடனே என் காஃபி கசந்தது. ஆனால் நான் என் வேலை பார்க்கப் போய் விட்டேன். வேலை முடித்து வந்தவுடன் மாதவராஜ் எழுதியதைப் படித்தேன். வயிறு மீண்டும் எரிந்தது, எழுத ஆரம்பித்தேன். வசதியாக சௌகரியமாகச் சத்தமிடுவது அல்ல புரட்சி; அப்படி மெத்தனத்தோடு வருவதல்ல கோபம்.
என்ன செய்வது நான் ஒரு நடுத்தரம் என் நாளைக்காக என் இன்றைச் செலவிடும் சாதாரணம். நம் நாளைக்காக இன்று வெகுண்டெழுவோருடன் சேர்ந்து விட்டால் இன்றைய என் அற்ப சந்தோஷங்கள் என்னாவது? அதனால் இணையவெளியில் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, தாமிரபரணியை மறந்து விட்டு, கோக் குடிக்கலாமா என்று யோசிக்கிறேன், வெட்கமில்லாமல்.
உங்கள் அப்பன் வீட்டு சொத்தை ஒன்றும் கேட்கவில்லை, பிரதமர் மன்மோகன் சிங்!
இந்திய உணவு தானிய கிடங்குகளில், வருடக்கணக்கில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் அழுகி வீணாகிப் போயிருக்கின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும், அறிஞர்களும் தங்கள் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த தேசத்தில் பல கோடி மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும் வழியின்றி அவதிப்படும்போது, இப்படி உணவுப் பொருட்கள் வீணாவதை யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். நல்ல சத்துணவு இன்றி எத்தனையோ குழந்தைகள் பாதிக்கப்படுகிற ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் யாருக்கும் உபயோகமின்றி புழுங்கிப் போவதை யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?
கண் திறந்து பார்த்த உச்ச நீதிமன்றமும், கடைசியாக சொல்லி விட்டது. “அழுகி வீணாய்ப் போவதற்குப் பதிலாக, இந்த உணவு தானியங்களை வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு கொடுக்கலாமே” என அரசுக்கு பரிந்துரையும் செய்துவிட்டது. நீதி இன்னும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது!
இதோ, இந்தியப் பிரதமர், பொருளாதார மேதை, அப்பழுக்கற்ற அரசியல்வாதி, டாக்டர் மன்மோகன்சிங் தெளிவாகச் சொல்லிவிட்டார். “வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு இந்த உணவுதானியங்களைக் கொடுக்க முடியாது”. அத்தோடு மட்டுமல்ல உச்சநீதிமன்றத்துக்கும் சில செய்திகளை உணர்த்திவிட்டார். “அரசின் கொள்கைகளில் தலையிட வேண்டாம்” என்பதே அது. “உச்சநீதிமன்றத்தின் செண்டிமெண்ட்களை புரிந்துகொள்ள முடிகிறது. உணவுப் பொருட்கள் அழுகிப் போகாமல் இருப்பதற்கு மாற்று வழிகளை ஆராய்வோம்” என்று நக்கல் வேறு அவரிடமிருந்து.
எப்பேர்ப்பட்ட தர்ம சிந்தனை! அழுகி வீணாகப் போகும் உணவு தானியங்களை, இந்த நாட்டின் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க முடியாது என்பது எப்பேர்ப்பட்ட பொருளாதாரக் கொள்கை! அதற்கு என்னவெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். நெஞ்சில் ஈரத்தைத் துடைத்து விட்டு எப்படியெல்லாம் பேச முடிகிறது!
கொள்கை, கோட்பாடு, பொருளாதாரம், ஆட்சி, அரசு என எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை மனிதாபிமானம்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அதெல்லாம் சுத்தமாக இல்லை. முதலாளிகளின் கண்ணில் துரும்பு விழுந்தால் சதையெல்லாம் ஆட, பரிதவித்துப் போவார்கள் அவர்கள். எளிய மக்களின் வாழ்வில் இடியே விழுந்தாலும், குளிர்பதன அறையில் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டே ‘அப்படியா’ என்று காலாட்டிக்கொண்டு இருப்பார்கள். பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால் நடுங்கிப்போகும் இவர்களுக்கு பசியின் குரல்கள் ஒருபோதும் எட்டுவதேயில்லை. உணவு தானியங்கள் நாசமானால் என்ன, எளிய மக்கள் செத்துத் தொலைந்தால் என்ன?
மிஸ்டர் பிரதமர் மன்மோகன்சிங்! அழுகிப் போகும் அந்த உணவு தானியங்கள் எங்கள் வரி. எங்கள் உழைப்பு. எங்கள் உதிரம். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தை கேட்கவில்லை.
பிரதமர் அவர்களே! எம்.பி.க்களுக்கு 140000 ஊதியம் கூடப் போதாது. சும்மா ஒரு பத்து லட்சம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.
மந்திரிகளுக்கு சும்மா ஒரு ஐம்பது லட்சம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்ஒரு கேள்வி கேட்க ரூபாய் பத்து லட்சம் வரை லஞ்சம் பெறலாம் என்று கொள்கை முடிவு எடுங்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோல் இருநூறு ரூபாய் என்று கொள்கை முடிவு எடுங்கள்.
தேர்தலில் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வாக்களர்களுக்குத் தருவது குற்றமில்லை என்று கொள்கைமுடிவு எடுங்கள்.
அதிகாரிகள் கேதான் தேசாய் மாதிரி ஊழலில் ஈடுபடுவது ஒன்றும் பெரிய தவறில்லை என்று கொள்கை முடிவு எடுங்கள்.ஏழை மக்களும் பணக்காரர்களைப் போல நாளொன்றுக்கு மூன்று முறை ஏதாவது சாப்பிடவேண்டும் என்று நினைக்கவே கூடாது என்று கொள்கை முடிவு எடுங்கள்.
அப்புறம் இதைப் பற்றில்லாம் ஊடகங்களோ,மக்களோ, நீதிமன்றங்களோ குறை கூறக் கூடாது என்றும் கொள்கை முடிவு எடுத்து விடுங்கள்
பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளுக்கு ஐந்து லட்சம் கோடி அளவிற்கு வரிச்சலுகை அளிக்க நம்மிடம் பணம் இருக்கு, ஆனா பசியால் வாடுகிறவனுக்கு சோறு போட மனசில்லை, அத சொல்லுவதற்கு பொருளாதார மேதை பட்டம் பெற்ற மன்மோகன் சிங். நிச்சயமாக எல்லோருக்கும் இவர் பிரதமர் கிடையாது.
இந்தியாவில் கார்ப்பரேடுகள் தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
பொருளாதார மேதையாக இருந்து என்ன பயன்? பொதுமக்களைப் பற்றி கவலைப் படாமல் யாருக்கோ விசுவாசமாக இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத ஒருவரை இரண்டாவது முறையும் பிரதமராக்கி அழகு பார்க்கும் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் நம்முடையது. பெருச்சாளிகளின் தேசத்தில் எலிகள் வாழ்வாங்கு வாழ்கின்றன.
source: http://mathavaraj.blogspot.com/2010/09/blog-post_1538.html