”கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு.” (2:228)
”உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!” (4:21)
”ஈமான் கொண்டவர்களே! மூஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை முன்னமேயே ‘தலாக்” செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை”. (33:49) என்ற வசனத்தையும் ஒப்பு நோக்கும் எவரும் மணந்து மனைவியுடன் வாழ்ந்தபின் அந்த மனைவி பிடிக்கவில்லை என்பதால் தவணைகளை புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறி அவளை மனைவி என்ற உறவிலிருந்து பிரித்து விட முடியாது. அது செல்லாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
எனவே ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தடவை அல்ல, முன்னூறு ‘தலாக்’ சொன்னாலும் அது ஒரே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியதாகவே பொருள்படும். இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றமாக ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே ‘தலாக்’ சொல்லி 3 தவனைகளுக்குறிய காலக்கெடு முடிந்து விட்டால் கணவன் மனைவி என்ற உறவு முறிந்துவிடத்தான் செய்கிறது.
காரணம் தவனைகள் முடிந்து விட்டன. அதே சமயம் அந்தப் பெண் வேறொரு கணவனை அடைந்துகொள்ள உரிமை இருப்பதுடன், இதே கணவனை விரும்பினால் மீண்டும் மணமுடித்துக்கொள்ளவும் முடியும். மூன்று தவணைகளில் மூன்று தலாக் சொல்லி பிரிந்து விட்டால் மட்டுமே, வேறு கணவனுக்கு மனைவியாகி வாழ்ந்து பின் அவரிடமிருந்து முறைப்படி தவணைகளில் ‘தலாக்’ பெற்ற பின்பே முன்னைய கணவன் அவளை மீண்டும் மனைவியாகக் கொள்ள முடியும்.
தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)
இந்த இறைவாக்கு சொல்வதென்ன? மனைவியுடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்தவரே உடனடியாக மனைவியை விரட்டிவிட முடியாது. நான்கு மாதம் பொறுக்கவேண்டும். அதற்குள் சேர்ந்து கொள்ளவும் அல்லாஹ் வாய்ப்புத் தருகிறான்.
இந்த நிலையில் தவணைகளைப் புறக்கணித்து ஒரே சமயத்தில் மூன்று ‘தலாக்’ சொன்னவுடன் மண முறிவு ஏற்பட்டு விடும் என்று சட்டம் வகுப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மதிப்பவர்களா? சொல்லுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மூன்று தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்ற ஹதீஸை பார்ப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலும், அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு காலத்திலும், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப இரண்டு ஆண்டுகளிலும் ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்பது ஒரு ‘தலாக்’காகவே (தவணை) கருதப்பட்டு வந்தது; நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுவதைக்கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவ்வாறு நாம் அதைச் சட்டமாக்குவோம் எனக்கூறி சட்டமாக்கினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடைமுறையை உமர் ரளியல்லாஹு அன்ஹு மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?
மஹ்மூது இப்னு லபீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் ஒருவர் தனது மனைவிக்கு ஒரே தவணையில் மூன்று ‘தலாக்’ கூறி விடுகிறார். இதனைக் கேள்வியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சினமுற்றவர்களாக எழுந்து விட்டனர். பின்னர், நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அவர் அல்லாஹ்வின் வேதத்தோடு விளையாடுகிறாரா? என்றார்கள் என்று காணப்படுகிறது. இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி, இங்கு மூன்று தலாக்கும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டு மணமுறிவு ஏற்பட்டதால் தானே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆத்திரப்பட்டார்கள். இருக்கையை விட்டு எழுந்து குர்ஆனோடு விளையாடுகிறாரா? என்று சுய விளக்கம் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் சுய விளக்கம் சரிதானா?
அல்லாஹ் மூன்று தவணை என்று வெவ்வேறு அவகாசத்தைக் குறிப்பிட்டிருக்க, மூன்று தலாக் ஒரே நேரத்தில் சொன்னவர் தவணை என்று இருப்பதை எண்ணிக்கையை கணக்கில் கொண்டது குர்ஆனோடு விளையாடுவதாக ஆகாதா? அதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபப்பட்டிருக்க முடியாதா? தலாக் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனத்தில் (பார்க்க 2:226-2:237)
2:231ல் “அல்லாஹ்வின் வசனங்களை கேலிகூத்தாக ஆக்காதீர்கள்” என எச்சரிக்கிறான். இந்த வசனத்தையும் இதர வசனங்களையும் ஆய்ந்து பார்க்கும்போது அல்லாஹ் மூன்று தவனை என்று சொல்லியிருப்பதை அந்த நபர் மூன்று எண்ணிக்கையாக ஆக்கி செயல்பட்டுள்ளதை அறிந்தே நபி(ஸல்) அவர்கள் வேகப்பட்டார்கள் என்று ஏன் கூற முடியாது? அவர்களின் சுய விளக்கத்தை விட இந்த விளக்கமே குர்ஆன் வசங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது.
ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் ஒரே தவணையாகவே கொள்ளப்படும்” என்ற இறை சட்டத்தை மாற்றி ஒரே சமயத்தில் சொல்லப்படும் மூன்று தலாக் மூன்று தவணைகளாகக் கொள்ளப்பட்டு மணமுறிவு ஏற்பட்டுவிடும், கணவன் மனைவி பிரிந்தேயாக வேண்டும் என்ற மனிதச் சட்டத்தை இறைச் சட்டமாகப் பிரகடனம் செய்யும் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டிய பல குடும்பங்களை தங்கள் மனித சட்டத்தால் பிரித்து அக்குடும்பங்களை சிதறடித்த மாபெரும் குற்றத்திற்கு ஆளாகி மறுமையில் அல்லாஹ்வின் பெரும் சாபத்திற்கும், தண்டணைக்கும் ஆளாக வேண்டி வரும் என அவர்களை எச்சரிப்பது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமையாகும்.
– அபூஅப்துல்லாஹ்
source: http://www.readislam.net/portal/archives/719