1. குழந்தைகள் மீதான வன்முறையைத் தவிர்க்க என்ன செய்யலாம்
2. பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்வோருக்கும் கட்டண சலுகை
3. சட்ட சீர்திருத்தம் அவசியம். அரசு சிந்திக்குமா?
குழந்தைகள் மீதான வன்முறையைத் தவிர்க்க:
குழந்தைகளிடம் மனஉறுதியை வளர்க்க வேண்டும். அவர்கள் ஆக்ரோஷமாக இருப்பதும் பிரச்னை; அஞ்சத்தக்கவர்களாக இருப்பதும் தவறு. சமூகத்தை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு வேண்டும். அண்டை வீட்டுக்குழந்தைகளுடன் விளையாட அனுமதியுங்கள். அப்போதுதான் வெளி உலகம் பற்றி தெரிந்து கொள்வர். சமூக தொடர்பு கொள்ளும் திறன் பற்றியும் தெரியமுடியும். ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வையும் அவர்களால் பெற முடியும்.
பெற்றோரிடம் குறுகிய மனப்பான்மை இருக்கக்கூடாது. அது, குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பிரச்னையை ஏற்படுத்தும். குழந்தைகளின் மீதான நம்பிக்கை என்பது வேறு, அவர்களை கண்காணிப்பது என்பது வேறு. கண்காணிப்பு அவசியம்; அதே சமயம் அது அடக்குமுறையாக மாறி விடக்கூடாது. குழந்தைகளுக்கு சுயசார்பைக் கற்றுக்கொடுங்கள்.
பள்ளி நிர்வாகத்தினர் குழந்தைகளோடு தொடர்புடையவர்களை கண்காணியுங்கள். பள்ளி வாகன டிரைவர்கள், தொழிலாளர்கள், ஆயா போன்றவர்களை அடிக்கடி அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்கும் நம்பிக்கையும், எச்சரிக்கை உணர்வும் வரும்.
மனநல மருத்துவர் ஷாலினி: உளவியல் நிபுணருக்கும், மனநல மருத்துவருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மனநல மருத்துவர் என்பவர், மருத்துவ பட்டதாரி. ஆலோசனைகள், மருந்துகள் மூலம் மனநோயைக் கட்டுப்படுத்துபவர். உளவியல் நிபுணர் என்பவர் சமூகத்தில் நடந்து கொள்வது எப்படி, எந்த பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என அறிவியல் முறைப்படி ஆலோசனை வழங்குபவர். குழந்தைகளை பெற்றோர்களானாலும், ஆசிரியர்களானாலும் உளவியல் நோக்கோடு பார்க்க வேண்டும்.
பள்ளி நிர்வாகம், குழந்தைகளிடத்து ஏற்படும் சிறு மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளிடம் காணப்படும் அதீத மகிழ்ச்சியானாலும், துக்கமானாலும் அவற்றுக்கான காரணங்களை ஆராய வேண்டும். சின்னச்சின்ன மனஅழுத்தங்கள் பெரிய மனநோயாக மாறிவிடும். சிறு பிரச்னைகளையும் ஆறப்போடாதீர்கள். குழந்தைகளின் மாற்றத்தை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும்.
குடும்ப பிணைப்பு குழந்தைகளின் பிரச்னையை புரிய உதவும். பெரிய வீட்டைக் கட்டிக்கொண்டு, தனித்தனியாக வாழ்வது வாழ்க்கை அல்ல. நம் வீட்டு பெண் வேலைக்காரர்கள் அதிகாலையில் வரச்சொன்னால் வருகிறார்களா? “குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 9.00 மணிக்கு பிறகு வருகிறோம்’ என்கிறார்கள். அதேபோல், மாலை 5.00 மணிக்கு மேல், “குழந்தைகள் பசியுடன் காத்திருப்பர்’‘ என வீடு திரும்புகின்றனர்.
படிக்காத அவர்களிடம் இருக்கும் பிணைப்பு நமக்கு இல்லையா? குழந்தைகளை பாசத்துடன் அணுகுங்கள். அவர்களிடம் பேசுங்கள்; அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். உடல்நிலை சரியில்லாவிட்டால் பதறும் நாம், மனநிலையைக் கவனிப்பதில்லை. அதைக் கவனித்தால் பிரச்னைகள் எழ வாய்ப்பு குறைவு, என்றார்.
o மாணவர்கள் செல்லும் எல்லாவிதமான வாகனங்களும் அனைவருக்கும் தெரியும் வகையில் தனித்து அடையாளம் காணப்பட வேண்டும். போலீஸ், ஆம்புலன்ஸ் என பார்த்த உடனே அடையாளம் தெரிய வேண்டும். அது பள்ளி வாகனமாக இருந்தாலும் சரி. மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோ, டாக்ஸியாக இருந்தாலும் சரி.
o கலாசார சீர்கேடுகளை பள்ளியில் அனுமதிக்கவே கூடாது. பள்ளி கலை விழா நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களை பாடவோ, நடனத்துக்காகவோ அனுமதிக்கவே கூடாது. (இக்கருத்து மொழியப்பட்டபோது, அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுப்பி வரவேற்கப்பட்டது)
o பள்ளி வாகனங்களில், குறிப்பாக பெண் குழந்தைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
2. பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்வோருக்கும் கட்டண சலுகை
பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்வோருக்கும் கட்டண சலுகை அளிக்கப்பட உள்ளது. துணையாளர் உதவியின்றி பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் ஒருவருக்கு நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் செய்ய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள 75 சதவீத கட்டண சலுகையை உள்ளூர் பஸ், குளிர்சாதன பஸ்களை தவிர மற்ற அனைத்து அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள் தன் துணையாருடன் ரயில் கட்டண சலுகை போல 25 சதவீத கட்டணத்தை செலுத்தி இருவரும் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, துணையாளர் உதவியின்றி பயணம் செய்ய முடியாது என்பதற்கான மருத்துவ சான்று ஆகியவற்றின் அசலை கண்டக்டரிடம் காட்ட வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்றால் போதுமானது. இந்த மருத்துவ சான்று மூன்று ஆண்டுகள் செல்லத்தக்கது. மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கான படிவத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அரசு உடனடியாகாக சட்ட சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும்
கோவையில், பணத்திற்காக இரண்டு பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியையும், அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் கைது செய்துள்ளனர். அதில் ஒருவன் இப்போது சுட்டுக் கொல்லப் படுள்ளான். இதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கிறார்கள்.
இக்கொடூரத்தைக் கண்டித்து, வக்கீல்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும், தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது போன்ற கயவர்களுக்கு, தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் உண்மையிலேயே தண்டிக்கப்படுவரா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், அண்மையில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் நமக்கு இந்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன.நம் நாட்டில் தூக்கு தண்டனை என்பது, கீழ் கோர்ட்டில் அரிதிலும் அரிதாக அளிக்கப்படுகிறது. பின், ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் உறுதி செய்யப்படுகிறது. பின், ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்படுகிறது. இதற்கு கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், 17 தூக்கு தண்டனைகள், ஜனாதிபதி கருணை மனு அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும், கொடூர குற்றங்கள் புரிந்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்குத் தான்.
அப்படியானால், பல்வேறு நிலைகளில் கோர்ட்டுகளால் உறுதி செய்யப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கவோ, ரத்து செய்யவோ ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் சரியானதா? பின், நாட்டில் எப்படி குற்றங்கள் குறையும்?மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, முன்பு போல் கடும் உழைப்புள்ள தண்டனைகள் தரப்படுவதில்லை.
வாரம் இருமுறை மட்டன், சிக்கன், பாயசம் என சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இதனால், குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கைக் கூடி வருகிறது.இந்நிலை மாற வேண்டுமெனில், சட்ட சீர்திருத்தம் அவசியம். அரசு சிந்திக்குமா?
Thanks regards, sarfudin@gmail.com