குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை –
இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்!
குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் – பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி – அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது.
குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.
இத்தகைய அக்கறையற்ற, அனைத்தையும் அனுமதிக்கும் permissive சூழல்தான் கல்வி நிலைய இடுக்குகளில் பதுங்கியிருந்து குழந்தைகளின் மேல் பாயும் வன்முறைக்கும் வக்கரிப்புக்கும் பெரும்பாலும் காரணம். இதுவரை பேசப்பட்ட குறிப்பிட்ட வன்முறைத் தாக்குதல் சுயநிதிப் பள்ளியில் நடைபெற்றதால், இப்பள்ளிகளின் கேட்பாரற்ற, தான்தோன்றித்தனச் சூழல்தான் இதற்குக் காரணம் என்று பொருள்படுத்தக் கூடாது. அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு இலக்காகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
குறிப்பாக, பரிசோதனைக் கூடங்களில், தனி வகுப்புகள் (Special Classes) நடக்கும்போது, என்று பல இடங்களில் இத்தகைய கொடுமைகள் நடப்பதாகக் கேள்விப்படுகிறோம்.விபரீதத்தைப் பற்றிய உணர்வோ புரிதலோ நிவாரணமும் தீர்வும் காண வேண்டுமென்ற கவலையோ இன்றி, மூடி மறைத்து விட்டால், நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது என்ற மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது நம் சமுதாயம். ஒரு மௌனச் சதி (conspiracy of silence) நடக்கிறது.
குழந்தை பாலியல் கொடுமைக்குப் பலியாவது பெண் குழந்தைகள் மட்டுமல்ல; ஆண் குழந்தைகளும் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள்.
இரண்டு விசாரணைகளிலும் அரங்கத்திற்கு வந்த சில மனுக்களை மட்டும் இங்கு அளிக்கிறேன்.
1) நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பின் 14 வயது மாணவி, 45 வயதான ஆசிரியரால் பரிசோதனைக் கூடத்தில் பல முறை பாலியல் வன்முறைக்குப் பலியானாள். அவள் கருதரித்ததும் உண்மை வெளிவந்தது. குண்டர்களை வைத்து அவளது குடும்பத்தை அச்சுறுத்த முயன்றாலும் வழக்குப் பதிவாயிற்று.
2) மதுரை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரின் வக்கிரத்திற்கு நான்கு மாணவியர் பலியாகியுள்ளனர். உண்மை வெளிவந்ததும், கிராமப் பஞ்சாயத்தில் ‘சமரசம்’ செய்து, இரு பெண்களுக்கும் தலா ரூ. 50,000 கொடுத்து வாயடைத்துவிட்டனர். ஆனால், மற்ற இரு பெண்கள் வழக்கில் துணை நிற்கின்றனர். விசாரணையில் வெளிவந்த செய்தி: இதே ஆசிரியர் மற்றொரு பள்ளியில் இதற்கு முன்னும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவருக்குக் கல்வித் துறை அளித்த தண்டனை வெறும் இடமாற்றம். ஆகவே, மற்றொரு பள்ளியிலும் அவர் துணிவுடன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்திருக்கிறார். இடமாற்றம்தான் இம்மாபெரும் குற்றத்திற்கு அரசு அளிக்கும் தண்டனையா? இந்தப் பொறுப்பற்ற அணுகுமுறை குற்றங்கள் வளர ஏதுவாக அமையாதா?
3) ஈரோடு மாவட்ட ஆரம்பப் பள்ளியில் ஏழே வயதான ஓரு பிஞ்சுக் குழந்தை தலைமை ஆசிரியரின் கொடிய பாலியல் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தக் குற்றவாளியும் மற்றொரு பள்ளியில் இதே குற்றம் செய்ததன் விளைவாக இடமாற்றம் செய்யப்பட்டவர்.
4) கோவை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டதன் விளைவாகத் தற்கொலை செய்துகொண்டாள்.
5) கோவை மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி ஆசிரியரின் பலாத்காரத்தால் கருத்தரித்து, கருச்சிதைவிற்கு உட்படுத்தப்பட்டு, உடலும் உள்ளமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மன நோயாளியானாள்.
அடுக்கிக்கொண்டே போகலாம். இரண்டாவது, பொது விசாரணையில், நிறைய சாட்சியங்களுடன் மன்றத்தின் முன் கொண்டு வந்த 13 வழக்குகள். இரு பொது விசாரணைகளிலும் முதலில் விவரித்த தனி விசாரணையிலும் நடுவர் குழுக்கள் பல பரிந்துரைகளையும் குறிப்பிட்ட பிரச்சினை குறித்துப் பொதுவானவையையும் அளித்தன. அவற்றில் சில:
1) இவ்விசாரணைகளில் எடுத்துக்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்த பள்ளிகள் குறித்த கவலை தரும் விவரங்கள் பல வெளிவந்தன. அரசுப் பள்ளிகளிலும் விடுதிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லாமையால் பெண் குழந்தைகள் சுற்றிலும் உள்ள பொது இடங்களைப் பயன்படுத்தும்போது, வக்கிரமான குணம் கொண்டோ ர் அதைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாகிறது.
மகளிர் விடுதிகளில், குறிப்பாக ஆதிதிராவிடத் துறைப் பெண் விடுதிகள் பலவற்றில் ஆண்களே விடுதிக் காப்பாளர்களாக உள்ளனர்.
2) கல்வித் துறையின் ஒழுங்கு நடவடிக்கைகள் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் எடுக்கப்படுவதில்லை. காவல் துறையின் விசாரணை பயனளிக்காவிட்டால் கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவியலாது என்னும் தவறான கருத்து நிலவுவதாகத் தெரிகிறது. இந்நிலை மாறி, குற்றவியல் சட்டத்தின் கீழ் நீண்ட கால தாமதத்திற்குப் பின் நீதி கிட்டட்டும் என்ற அலட்சியம் மாறிக் குற்றம் புரியும் ஆசிரியர்மேல் உடனே துறைவழி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) சந்தேகத்திற்குரிய ஆசிரியர் பற்றிய விவரங்களை ரகசியமாக மற்ற பள்ளிகளுக்குத் தெரிவிக்கவும் குழந்தைகளை இத்தகைய குற்றவாளிகளிடமிருந்து காப்பதற்கும் வழி காண வேண்டும்.
4) தமிழ்நாடு கல்வி விதிமுறைகள் (Tamil Nadu Education Rules) மாற்றி அமைக்கப்பட்டு, பாலியல் கொடுமை இழைப்பவர்மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க ஏதுவாக்கப்பட வேண்டும்.
5) குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்து, கல்வி நிறுவனங்களில் நடந்த பாலியல் குற்றங்களை உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்க வேண்டியது அந்நிறுவனங்களின் பொறுப்பாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் நிர்வாகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6) மனித உரிமைகள், குறிப்பாகக் குழந்தை உரிமைகள், அனைத்துப் பள்ளிப் பாடத் திட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சியிலும் சேர்க்கப்பட வேண்டும். மாணவர் தங்களைச் சுற்றி நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும் குற்றவாளிகளை அச்சமின்றி அம்பலப்படுத்தவும் ஏதுவான சூழல் உருவாக வேண்டும்.
7) கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகள் உட்பட, நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் பொறுப்பினையும் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8) குழந்தைகள்மீதான பாலியல் வழக்குகளுக்குக் காவல் துறை முன்னுரிமை கொடுத்து, வழக்குகளை வெகுவிரைவில் முடிக்க வேண்டும்.
9) இத்தகைய பலாத்காரங்களுக்குப் பலியாகும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை (Psychological counselling) மிகவும் தேவைப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாகவும் தொடர்ந்து நீண்ட காலமும் உளவியல் ஆலோசனை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகள் முன்வர வேண்டும்; இல்லாவிடில், வேறு வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.
10) குழந்தைகள்மீதான பாலியல் கொடுமையைத் தடுக்கும் விசேஷச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இச்சட்டம் நமது அரசியல் சாசனம் அளித்துள்ள குழந்தை உரிமைகள், ஐ.நா.வின் குழந்தை உரிமை சாசனம் (Convention on the Rights of the Child), சித்திரவதை மற்றும் பிற கொடிய, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் நடைமுறை அல்லது தண்டனை ஆகியவற்றிற்கு எதிரான சாசனம் (Convention against Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment) ஆகியவை அனைத்திலும் உள்ள குழந்தை உரிமைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக, குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். பாலியல் கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் ஏன் அதை யாரிடமும் சொல்லத் தயங்குகின்றனர்? அவர்களது அச்சத்தின் அடிப்படை என்ன?
பாலியல் கொடுமைக்கு உள்ளான குழந்தைகள் அந்தக் கசப்பான அனுபவத்தை மனத்தின் ஆழத்தில் புதைத்து, மறக்க முயல்கின்றனர். அதைப் பற்றிப் பேசுவதே மீண்டும் காயப்படும், வேதனைப்படும் அனுபவமாக இருக்கிறது. தங்களுக்கு ஏற்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வினால் தாங்களே கறைபட்டுவிட்டதாக உணர்கின்றனர். வயது வந்தவருடன் ஏற்பட்ட அந்த அனுபவம் தவறானது என உணர்ந்து பெரிதும் அவமானப்படுகின்றனர்.
ஏதோ வகையில் தாங்களும் அதற்குப் பொறுப்போ என்னும் சந்தேகமும் தாங்களும் பொறுப்பு என்று பெரியவர்கள் நினைப்பார்களோ என்னும் கவலையும் அவர்களை வாட்டுகின்றன. இதனால் பெற்றோரின் அன்பை இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அவர்களது மற்றொரு குழப்பம், நடந்ததை மற்றவர்கள் நம்பமாட்டார்கள்; தாங்கள் கற்பித்துச் சொல்வதாக மற்றவர்கள் நினைப்பார்கள்; பாலியல் தொடுதல்களைத் (sexual touches) தாங்களே விரும்பியதாக நினைத்துக் கொள்வார்கள் என்னும் பயம். சில சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்காகக் குழந்தை தான் தன்னைத் தொடச் சொன்னது என்று கூறுவதுண்டு.
குழந்தைகள் அன்பையும் அரவணைப்பையும் வேண்டுகின்றனர்; அது அவர்களது உரிமையுமாகும். ஆனால், செக்ஸ் அனுபவம் வேண்டும் என்று கேட்பதில்லை.
இவை அனைத்துடன், பல சமயங்களில் குற்றவாளி வெளியில் சொல்லக் கூடாது என்று குழந்தைகளைக் கடுமையாக எச்சரிக்கிறான். இவை அனைத்தும் சேர்ந்து தான் குழந்தைகளின் நாவைக் கட்டிப்போடுகின்றன.இத்தகைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன? குழந்தையின் முழு நம்பிக்கைக்கும் நாம் பாத்திரமாக வேண்டும். குழந்தை சொல்வதை முழுவதும் நம்பவேண்டும். நடந்ததைச் சொல்வதில் தவறே இல்லை என்று குழந்தையிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டும்.
நடந்தவற்றிற்குக் குழந்தை எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதை ஆணித்தரமாகக் கூற வேண்டும். நல்ல ஆலோசகரிடம் (counseller) குழந்தையை அழைத்துச்சென்று ஆலோசனையும் ஆதரவும் கிடைக்கச் செய்ய வேண்டும். இவை தவிரப் பல தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.
குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே தற்காப்பு விவரங்கள் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்களது விருப்பம் இல்லாமல் அவர்களது உடலைத் தொடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். Good touch எது, bad touch எது என்னும் பாகுபாட்டை அவர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும்.
இவை அனைத்திலும் கல்வி நிலையங்களுக்குப்பெரும் பொறுப்பு உண்டு. குறிப்பாக, செக்ஸ் பற்றிக் குழந்தைகளிடம் பேசுவதற்குப் பெற்றோர்கள் பெரும் கூச்சப்படும், பேசக் கூடாது என்று நம்பும் நம் சமுதாயத்தில் இப்பொறுப்பு கல்வி நிலையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்தப் புகலிடத்திலேயே கொடும் தாக்குதல் நடந்தால் எங்கே போவது?
நமது சமுதாயம் குழந்தைகளின் உரிமைகளை மதிக்காத சமுதாயம். ஒழுக்கம் என்ற பெயரில் குழந்தைகளை வாய் திறந்து பேசும் தைரியமும் தன்னம்பிக்கையும் அற்றவர்களாக வளர்த்து, அநீதிகளை மௌனமாகச் சகித்துக்கொள்ளும் அபலைகளாக மாற்றிவிடுகிறோம்.
குற்றங்களுக்குப் பலியாகின்றவர்களில் மிகவும் பரிதாபகரமானோரும் உதவி கிட்டாதவரும் காயப்படுத்தப்படுவோரும் அவமானப்படுத்தப்படுவோரும் குழந்தைகள்தாம். தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வியலாத பருவமாதலால், தனிப்பட்ட விகாரங்களுக்கும் வக்கிரங்களுக்கும் அவர்கள் இலக்காகின்றனர்.
சமுதாயமும் அரசும் இவை குறித்த ஆழ்ந்த புரிதலும் கவலையும் கரிசனையும் கொண்டு, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்தகைய கேவலங்களையும் கதியற்றோரை வேட்டையாடும் கொடூரங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். நமது சமுதாயத்தை, குறிப்பாகக் கல்வி நிலையங்களை, மூச்சு விட முடியாமல் அழுத்திக்கொண்டிருக்கும் அச்சப் புகைமண்டலம் விலக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் மனிதாபிமானமுடைய சமுதாயமாக மாற முடியும்.
நன்றி: காலச்சுவடு.காம்