அதிரை முஜீப்
அரபு நாடைப்போல் இந்தியாவிலும் இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அறிவிஜீவிகள் கருத்துக்களை எடுத்து வைப்பது நாளுக்கு நாள் அதிகறித்து வருவதைக் காண முடிகிறது.
“குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்களை அரபு நாடுகளின் சட்டத்தில் தண்டிக்க வேண்டும்“ பெண் வக்கீல்கள் நலச்சங்கம் வேண்டுகோள்:
கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை: கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது. ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமுதாயத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடியவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். “ராகிங்’ குற்றத்துக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது போல், குழந்தைகளை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
இதுபோன்ற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு ஆண்டுக்குள் விசாரணையை முடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்படும் தண்டனையால், கொடூரர்கள் மனதில் தண்டனை பற்றிய பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும். குறிப்பாக, குழந்தைகளை கடத்துபவர்கள், கொலை செய்பவர்களை அரபு நாடுகளில் வழங்கப்படும் தண்டனைகள் போல் இருக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை“ ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார். மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளார். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“வரதட்சனை கொடுமை: மரண தண்டனை வழங்க வேண்டும்“ – உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
வரதட்சணைக் கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளை கொலை வழக்காக பதிவு செய்து மரண தண்டனையை விதிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு வன்மையான கண்டனத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி தனது மனைவி கீதாவை 2000-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி அன்று தன் தாயாருடன் சேர்ந்து கீதாவின் கழுத்தை நெரித்துக் கொன்று எரித்தனர். இது தொடர்பாக, வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
செசன்சு நீதிமன்றம், திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரையும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து காவல்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்சு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது, வரதட்சணை கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான கருத்துகளை கூறினார்கள். அந்த கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.
தீர்ப்பின் போது நீதிபதிகள் கூறியதாவது, வரதட்சணைக்காக மணமகளை கொல்லும் கொடூரச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளிகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற வரதட்சணை கொலைகளுக்கு இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின் (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கை 302-வது பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. வரதட்சணை கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்களால் மரண தண்டனை விதிக்க முடியவில்லை. இதுபோன்ற மணமகள் எரிப்பு வழக்குகள் அனைத்திலுமே மரண தண்டனை விதிக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் குவிந்து கிடக்கும் ஏராளமான வரதட்சணை வழக்குகளே இதற்கு ஆதாரம். மணமகளை கொல்வது காட்டுமிராண்டித் தனமான செயல் என்பது நிச்சயம். நாகரீக சமுதாயத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று கொடுமைப் படுத்தப்படுவது ஏன்?. இந்த வழக்கு, அதற்கு உதாரணமாக இருக்கிறது. சமூகத்தில் நிலவும் இத்தகைய கொடிய செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலே படித்த இதுபோன்ற கருத்துக்கள் சில காலங்களாக இந்தியாவில் ஒலித்துக் கொண்டிருப்பவைகள். அதாவது நம் நாட்டிற்கும் இஸ்லாமிய சட்டங்களே சிறந்த தீர்வு!. அதனால் இஸ்லாமிய சட்டங்கள் இங்கு அமல்படுத்தப் படவேண்டும் என்பதை நேரிடையாகவே கேட்க மனசு வராமல் இது போன்ற கருத்துக்களால் மக்களும் நீதிமன்றங்களும் மறைமுகமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்லாமிய சட்டங்களினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதை அரபுநாடுகளை மேற்கோள்காட்டி தற்போது கேட்க ஆரம்பித்துள்ளனர். அத்வானிகூட கற்பழிப்புக்கு மரணதண்டனை வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த இஸ்லாமிய சட்டங்கள் ஒன்றும் அரபு மக்களால் இந்தியாவில் உள்ளது போல் நாடாளுமன்றங்களின் மூலம் நிறைவேற்றப்பட்டதல்ல! மாறாக மனிதகுலத்திற்கு அவர்களை படைத்த இறைவனால் வழங்கப்பட்டதாகும். எனவே படைத்தவனுக்கு தெரியும் எது மனிதகுலத்திற்கு சிறந்தது என்று!.
எனவே இதுபோன்ற கருத்துக்கள் தற்போது ஒலிக்க ஆரம்பித்துள்ளதால் அதனை மேலும் வலுப்பெற வைக்க வேண்டியது முஸ்லீம்களாகிய நம் கையில் தான் உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் எங்கெல்லாம் தெரிவிக்கப்படுகின்றதோ அப்போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பங்கெடுத்து இதை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் இதை முஸ்லிம்களாகிய நாம் சொன்னால் அதற்குப்பெயர் “காட்டுமிராண்டி ஷரியத் சட்டத்தை” இந்தியாவில் இவர்கள் அமல்படுத்த முற்படுகின்றார்கள் என்று அர்த்தம்…. ஆனால் யாரிடம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றோமோ, அவர்களே முன்வந்து இதை அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும்போது, நாம் செவிடர்களாக இருந்துவிட்டு ஆதரவு தெரிவிப்பதுதான் ஏற்றமானது.
சமீபமாக கோவையில் குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு கூட மனிதநேய மக்கள் கட்சி தன்பங்கிற்கு “குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டும்” என்று சுவரொட்டிகள் மூலம் ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டுக்குரியது. இதேபோன்று ஏதாவது ஒரு வழியில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் ஆதரவை தெரிவித்து தானாக தேடிவருவதை வசப்படுதிக் கொள்ளவேண்டும். இது பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போன்றது. இதுவும் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு செய்யும் ஒரு மறைமுக உதவியே!.
source: http://adiraimujeeb.blogspot.com/2010/11/blog-post.html