மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்!
M.A.முஹம்மது அலீ B.A.
எதையும் சிந்தித்து அதை நேரடியாக பார்க்கும்போது ஏற்படுகின்ற நம்பிக்கையும் உறுதியும் அழுத்தமானது. உதாரணமாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் அவன் உயிரைப்படைக்கும் விதத்தை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக வேண்டுகோள் வைக்கும்போது அந்த ஏக இறைவன் நபியைப் பார்த்து ‘என் மீது நம்பிக்கையில்லையா?’ என்று கேட்கிறான்.
அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘யா அல்லாஹ்! உன்னிடம் நம்பிக்கையில்லாமலா! அப்படியில்லை: எனது மனம் சாந்தியடைவதற்காக கேட்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள்.
அதன் பிறகு ஏக இறைவன் அவரிடம் ஒரு பறவையை நான்கு துண்டாக வெட்டி ஒரு மலையின் நான்கு முனையிலும் அதை பிரித்து வைக்கச்சொல்லி, பிறகு ஓரிடத்தில் நின்று தன் பெயரைச்சொல்லி அந்த பறவையை அழைக்கச் சொல்கிறான்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அது போல அப்பறவையை நான்கு துண்டாக வெட்டிப் பிரித்து நான்கு மூலையிலும் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயர்கூறி அதனை அழைக்கும்போது அப்பறவை ஒன்றாகி எழுந்து ஓடி வருவதைக் காண்கிறார்கள். இங்கு ஆன்மீகத்தின் ஊற்றான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நம்பிக்கை இன்னும் உறுதியடைகிறது. அந்த அதிசயத்தை அற்புதத்தை அவர்கள் கண்ணால் கண்டது அவர்களைப் பொருத்தவரை விஞ்ஞான பூர்வமானது இல்லையா?
இது போல மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட ஒரு நபிதானே! அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகக் காண ஆவல் கொள்கிறார்களே! அது ஏன்? தன்னைப் பார்ப்பதற்கான சக்தியை அவர் பெறமாட்டார் என்று இறைவன் சொல்லியும் அவர்கள் மீண்டும் மீண்டும் தனது ஆவலை அல்லாஹ்விடம் வற்புறுத்திக் கேட்டு அந்த தூர்ஸீனா மலையில் அல்லாஹ்வின் பேரொளியின் ஒரு துளியைக்கண்டு மூர்ச்சையடைகிறார்களே! இவையெல்லாம் என்ன?
இச்சம்பவங்கள் மறைவானவற்றையும் முழுமையாக நம்பும் ஆன்மீகத்தின் வழிகாட்டியான அந்த மாபெரும் நபிமார்களின் இறைநம்பிக்கையை மென்மேலும் உறுதிபடச் செய்திருக்கும் என்பதை எவரேனும் மறக்க முடியுமா?
அகிலத்தின் அருட்கொடை, நமது உயிரனும் மேலான, கண்மணி ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலும் இதுபோன்று மறைவான விஷயங்களைக் கண்களால் விஞ்ஞானப்பூர்வமாக காணும் சந்தர்ப்பம் கிடைக்கத்தானே செய்தது. ஆம்! மிஃராஜ் விண்வெளிப்பயணம் எவருக்குமே வாய்க்காத ஒரு அற்பதப்பயணத்தின் மூலம் அவர்களின் இறை நம்பிக்கை அசைக்க முடியாத அளவுக்கு உறுதியடைந்தது என்பதை அவர்களின் சொல் மூலமாகவே அறிந்து கொள்ளலாமே!
ஒரு சமயம் சில ஸஹாபாப் பெருமக்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நான் கண்டதை நீங்கள் கண்டிருந்தால் இதுபோன்று சிரித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள்!’ என்று மிஃராஜின்போது தான் நரகில் கண்டவற்றைக் குறிப்பிட்டுக் கூறியதை எண்ணிப்பார்க்கும்போது, நேரடியாக அந்த நரகக்காட்சியைக் கண்டதால் அவர்கள் மென்மேலும் இறையச்சமுடையவர்களாக விளங்கினார்கள் என்பதை இச்சம்பவம் தெளிவு படுத்துகிறதல்லவா.
அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்வதை மிகப்பெரும் வணக்கமென்றே இஸ்லாம் கூறுகிறது. ஏறத்தாழ 780 திருமறை வசனங்கள் விஞ்ஞானத்தை வலியுறுத்திக் கூறுகின்றனவே! ஏன்? எதற்காக? சிந்திக்க வேண்டாமா?
அல்லாஹ் படைத்த வானத்தையும் பூமியையும் கோள்களையும், நட்சத்திரங்களையும், உயிர் ஜீவராசிகளையும் ஆராய்ச்சி செய்யும் மனிதன் வியந்து போய் அந்த ஏக இறைவனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டே தீர்வான். அப்படிக் கூனிக்குறுகிப்போகும்போது அவனிடம் இருக்கும் பெருமை, கர்வம், தான் என்ற அகம்பாவம் அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் போய், இவ்வுலகைப் படைத்த அந்த ரப்புல் ஆலமீனுக்கு முன், தான் ஒரு அடிமையிலும் அடிமை என்பதை உணர்வான்.
விஞ்ஞானத்தை ஆராயும் மனிதன் தான் எவ்வளவு சாதாரணமானவன் என்பதை உணராமல் இருக்க முடியாது. ஒரு முறை விஞ்ஞானி Dr.A.P.J.அப்துல் கலாமிடம் ‘விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையற்றவர்களாக இருக்கிறார்களே!’ என்று கேள்வி தொடுக்கும்போது, அவர் உடனே, ‘யார் சொன்னது அப்படி? விஞ்ஞானிகளுக்குத்தான் நிச்சயமாக இறை நம்பிக்கை அதிகமிருக்கும்’ என்றார்.
ஏனெனில் வானத்தையும், பூமியையும், அதிலுள்ள இறைவனின் படைப்புகளைப் பற்றி ஆராயக்கூடிய மனிதன் தான் கண்டுபிடித்தவைகளோடு அணைத்தும் முற்றுப்பெற்று விட்டது என்று எண்ண மாட்டான், எண்ணவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பிறகு தனது இயலாமையை அவன் உணரத்தான் செய்வான். அப்போது அவனது நிலை கீழ்க்காணும் வசனத்தில் இறைவன் குறிப்பிட்டதுபோல் தான் இருக்கும்.திருக்குர்ஆனின் 29 ஆவது ஜுஸ{வில் முதலாக வரும் ‘ஸூரத்தலுல் முல்க்’ (தபாரகல்லதீ… ஸூரா)உடைய ஆரம்ப வசனங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்!
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (67:1)
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2)
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா? (67:3)
பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். (67:4)
இவ்வசனத்தில், மரணத்தையும் வாழ்வையும் படைத்ததற்காண காரணத்தை குறிப்பிடும் இறைவன், அவன் அடுக்கடுக்காகப் படைத்த வானத்தைப்பார்த்து சிந்திக்கும்போது மனிதனின்; பார்வை களைத்து மழுங்கிச் சிறுமையடைந்து திரும்பும் என்று கூறுகின்றானே, ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாமல் வானத்தை வெறுமனே பார்க்கும் மனிதனுக்கு என்ன விளங்கும்?
ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அவன் வானத்தைப் பார்க்கும்போதுதான் அவன் வியந்து போய் முன் சொன்னதுபோல் கூனிக்குறுகி தான் அப்பட்டமான அடிமை என்பதை துளிக்கூட சந்தேகமின்றி விளங்கிக்கொள்வான். அப்படி அவன் விளங்கிக்கொண்டு தொழுகையில் ருகூஉ, ஸுஜுது செய்யும்போது சாதாரண நிலைக்கும் இப்போதைய அவனது நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாட்டைக் காண்பான்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்குர்ஆனிலுள்ள சில ஸூராக்களின் உயர்வைப்பற்றி குறிப்பிடுகையில் முப்பது ஆயத்துக்களைக் கொண்ட இந்த ஸூரத்துல் முல்க் (தபாரகல்லதீ…), ஒவ்வொரு முஃமீனுடைய உள்ளத்திலும் மனனமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகச் சொன்னார்களே! அதன் காரணத்தை என்றைக்காவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? சிந்தித்தால் விளங்கியிருப்போம், மெய்ஞானத்திற்கு வழிகாட்டி விஞ்ஞானம் என்று!
இதைப்படிப்பவர்கள் தயவு செய்து தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார்கள் அனைவரையும் இந்த ஸூராவை (அர்த்தத்துடன்) மனனம் செய்யத் தூண்டுங்கள். இன்ஷா அல்லாஹ், விஞ்ஞானியாகவும் மெய்ஞானியாகவும் ஆகலாம். முடியாது என்று ஒருவர்கூட எண்ணிவிடாதீர்கள். அசைக்க முடியாத நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது வைத்துப்பாருங்கள், அத்தனையையும் சாத்தியமாக்கி வைப்பதற்கு அந்த ரப்புல் ஆலமீன் போதுமானவனாக இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
அழுத்தமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்; விஞ்ஞானம், மெய்ஞானம் இவையிரண்டுக்கும் மூல நூலே திருக்குர்ஆன்தான்.
-M.A.முஹம்மது அலீ
இன்ஷா அல்லாஹ், மேலும் சிந்திப்போம்.