‘ரஹ்மத்தும்’ – ‘ஜஹ்மத்தும்!’
ரஸூல் சாகிப், திருச்சி
உலகில் அடிக்கடி எங்கேனும், ஏதேனும் விபத்துகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. விமான விபத்து, கப்பல் விபத்து, ரயில் விபத்து, நடைபாதை விபத்து, தீ விபத்து என்று ஏதேனும் ஒரு விபத்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இவை தவிர, இயற்கையின் சீற்றம் காரணமாக, பேய்க்காற்று, பேய்மழை என்பதோடு சுனாமி போன்ற பலவித விபத்துகள் மூலம் மனிதர்கள் இறக்கின்றனர். உயிர் நஷ்டம், பொருள் நஷ்டம் என பலவித நஷ்டங்கள் ஏற்படுகின்றன.
காற்று இல்லையென்றால், மனிதனால் ஒரு சில நிமிடங்கள்கூட வாழ முடியாது. மழையில்லை என்றால், தொடர்ந்து மனிதனால் வாழ முடியாது. இவையிரண்டையும் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ (பேரருள்) என்கிறோம். அதே காற்றும், மழையும் அளவிற்கு மீறி விட்டால், அந்த ‘ரஹ்மத்’, ‘ஜஹ்மத்’ (பெருந்தொல்லை) ஆக ஆகிவிடுகிறது.
அரபி அட்சரங்களில், ‘ரே’ என்று ஒரு அட்சரமிருக்கிறது. அதற்கு அடுத்து வரக்கூடிய அட்சரத்திற்கு, ‘ஜே’ என்று கூறுகிறோம். இந்த ‘ரே’ அட்சரத்திற்கும், ‘ஜே’ அட்சரத்திற்கும் ஒரேயொரு புள்ளி தான் வித்தியாசம்.
இந்த புள்ளி இல்லாத அட்சரத்தைக் கொண்டு, ‘ரஹ்மத்’ என்று படிக்கின்றோம். ‘ரே’ மேல் ஒரு புள்ளி வைத்து விட்டால் அந்த சொல் ‘ஜஹ்மத்’ ஆகி விடுகிறது. ஒரேயொரு புள்ளியைக் கொண்டு எதிரும் புதிருமான பொருள் வருகிறது.
இந்த ‘ரே’ அட்சரத்தின் மீது புள்ளி விழச் செய்வது மனிதனுடைய செயல்கள்தான்! அவன்தான் தனது பாவச் செயல்களின் காரணமாக ‘ரே’ மீது புள்ளி வைத்து அதனை ‘ஜே’ ஆக்கி விடுகிறான்.
‘நிலத்திலும், நீரிலும் ஏற்படும் ஆபத்துகளெல்லாம் மனிதன் தனது கரங்களாலேயே தேடிக் கொள்கிறான்’ என்பது திருக்குர்ஆனிலுள்ள ஒரு வசனத்தின் கருத்தாகும். இப்பொழுது இந்த திருவசனத்தை வைத்துப் பார்க்கும்போது, ‘ரஹ்மத்’, ‘ஜஹ்மத்’ ஆகி விடுவதற்கு மனிதனே காரணம் என்று துல்லியமாக அறிய முடிகிறது.
அல்லாஹ், மகா கிருபையாளன், மன்னிப்பதில் நிகரற்றவன். அத்தகைய கிருபையாளன், தனது படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பாகிய மனிதனைப் பல வகையில் சிக்க வைக்கிறான் என்றால், அது அல்லாஹ் மீது கூறப்படும் குற்றமா? மனிதனின்மீது குற்றமா? என்பதை மனிதர்களாகிய நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
‘அடியான், என்னுடைய ஏவல், விலக்கல்களை ஏற்று, அச்சமுள்ள வாழ்வு வாழ்ந்து வருவானேயானால், இரவில் மழை பெய்யச் செய்து, பகலில் வெயில் அடிக்கச் செய்வேன். மழையினாலோ, இடியினாலோ அவனுடைய தூக்கம் பாதிக்காது.’ இப்படியொரு அருள்வாக்கு அல்லாஹ்வுடையதாக இருப்பதாக அறிய முடிகிறது. அவனுடைய அருளுக்குப் பஞ்சமில்லை.
பேரழிவுகள் ஏற்படும்போது அதில் அல்லாஹ்வின் நல்லடியார்களும் அழிந்துவிடுகிறார்கள். ஆனால், அத்தகையவர்களுக்கு அல்லாஹ், ‘ஷஹீத்’ என்னும் உயர்ந்த அந்தஸ்துகளைத் தந்து கவுரவிக்கின்றான்.
மனிதன் யாராக இருந்தாலும் அவன் தூய்மையான வாழ்வே வாழ வேண்டும். அப்பொழுதுதான் அந்த ‘ரே’ மீது புள்ளி விழாது. அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள் புரிவானாக, ஆமீன்.
நன்றி: ‘ஜமா அத்துல் உலமா’ மாத இதழ், ஜனவரி 1997
www.nidur.info