[‘உனது மாதவிடாய் உனது கையில் இல்லை’ என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இஸ்லாத்தில் தீட்டு என்பதும் தீண்டாமை என்பதும் அறவே இல்லை.]
அன்று ஒருநாள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனத்து மாநகர் வீதி ஒன்றில் வந்து கொண்டிருந்தார்கள். எதிரிலே எதிர்பாரா விதமாக ஆருயிர்த் தோழர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு வந்து கொண்டிருப்பது அவர்கள் பார்வைக்குத் தென்பட்டது.
சாதாரணமாக அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டதும் ஆரத்தழுவிக்கொள்ளத் துடிக்கும் அத்தோழர் இப்பொழுதோ தவியாய்த் தவித்தார். ஜுனுபாளியாக – குளிப்புக் கடமையானவராக இருக்கும் அவர் தூய்மையே உருவான ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அசுத்தமான நிலையில் எப்படி சந்திப்பது? கூடாது என எண்ணியவராக உடனே தான் வந்த பாதையை மாற்றி வேறு வழியே சென்றுவிட்டார்.
இதற்கிடையில் ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனமோ, தம் அன்புத் தோழரின் இச்செயல் கண்டு, ஏன் தன்னைக் கண்டதும் ஓடி ஒளிந்து கொண்டார்? எங்கே போனார்? எதற்காகப் போனார் என்று பலவாராக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் குளித்து சுத்தமான பிறகு, அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் திரும்பி வந்தார்கள்.வந்த தனது தோழரிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘என்ன அபூ ஹுரைராவே! எங்கு சென்று விட்டீர்?’ என்று கேட்டார்கள்.
‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே! தாங்கள் என்னைக் கண்டபோது நான் முழுக்குக் கடமையான நிலையில் இருந்தேன். இந்நிலையில் அசுத்தமானவனாகிய நான் தங்கள் முன்னிலையில் வருவதை விரும்பவில்லை. எனவேதான், தங்களை சந்திக்காமலும், பேசாமலும் வேறு திசைக்குச் சென்றுவிட்டேன்’ என்று மன்னிப்பு கேட்கும் விதமாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நிச்சயமாக முஃமீன் – இறை விசுவாசி ஒருபோதும் அசுத்தமடைய மாட்டான்’ என்று கூறினார்கள்.
‘நிச்சயமாக முஃமீன்; அசுத்தமாக மாட்டான்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதன் மூலம், இஸ்லாத்தின் அழகிய தத்துவம் நன்கு தெளிவாகிறது. அதாவது பொதுவாக மனிதன் சுத்தமானவன். அவனது எச்சில், வியர்வை ஆகியவையும் சுத்தமானவையே. அதிலும் குறிப்பாக முஃமீன் – விசுவாசி, அவனது உடலில் அசுத்தம் பட்டாலும் குளிpப்பு கடமையான நிலை ஏற்பட்டாலும் அவன் அசுத்தமாக மாட்டான் என்று இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
‘உனது மாதவிடாய் உனது கையில் இல்லை’ என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும் இங்கு சிந்திக்கத் தக்கதாகும். இஸ்லாத்தில் தீட்டு என்பதும் தீண்டாமை என்பதும் அறவே இல்லை.
அதே சமயம் இணைவைப்பாளர்களைப்பற்றி திருக்குர்ஆன் கூறும்போது, ‘முஷ்ரிக்குகள்; அசுத்தமானவர்கள்’ (‘யா அய்யுஹல்லதீன ஆமனூ இன்னமல் முஷ்ரிகூன நஜஸுன்’ – அல்குர்ஆன்) என்று குறிப்பிடுகிறது. இவ்வசனத்தின் தொடரில், ஹரமுடைய எல்லைக்குள் முஷ்ரிக்குகள் நுழைவதை தடை செய்வதற்கு இதையே (அதாவது அவர்கள் அசுத்தவான்கள் என்கின்ற) காரணமாக திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
-ஏம்.ஏ. முஹம்மது அலீ