அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தியாக வரலாறு
அமீர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு அவருடைய மகன் யஜீத் ஆட்சிக்கு வந்தார். கிலாஃபத் எனும் இறையாட்சித் தத்துவத்திற்கு எதிராக அவர் கலீஃபாவாக நியமிக்ப்பட்டதை முஸ்லிம் சமுதாயத்தினரில் எந்தத் தலைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. யஜீதுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் அவர்களில் எவரும் மேற்கொள்ளத் துணிந்தார்களில்லை. ஆனால் இரு தலைவர்கள் மட்டுமே யஜீதுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்கள்.
செயல் ரீதியில் அவனுடன் மோதவும் செய்தார்கள். அவர்களில் ஒருவர் – கலீஃபா அலீ ரளியல்லாஹு அன்ஹு – ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா தம்பதியினரின் மகனார் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். மற்றொருவர்தான் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு – அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா தம்பதியினரின் வீரத்திருமகனாகிய அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்!
யஜீதின் படையினர் ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் எதிர்ப்பை சிலமணி நேரங்களில் முறியடித்து விட்டார்கள். ஆனால் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எளிதில் முறியடிக்க முடியவில்லை!
உண்மை யாதெனில் பனூ உமையாக்கள், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் எதிர்ப்பைச் சமாளித்து – தங்களுடைய ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளப் பெரும் சிரத்தை எடுக்க வேண்டியதாயிருந்தது! ஆகையால் யுத்தங்களின் ஒரு நீண்ட தொடர் ஆரம்பமாகி, அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீரமரணத்துடன் முடிவுற்றது.அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீரமரண நிகழ்ச்சி, பல உன்னதமான படிப்பினைகளை தன்னுள் கொண்டுள்ளதாகும். ஆனால் இங்கே அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் விவரிக்கின்றோம். ஏனெனில் அவர்களுடைய வீரக்காவியத்தின் சில முன்மாதிரிகளை விளக்குவதுதானே நமது நோக்கம்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்ந்து யஜீதை எதிர்த்துப் போராடி வந்தார்கள். யஜீதுக்குப் பிறகு மர்வான் என்பவர் கலீஃபா ஆனார். இவரையும் மிகத்துணிவுடன் வெற்றிகரமாக எதிர்த்து வந்தார்கள். மர்வானுக்குப் பிறகு அப்துல் மலிக் ஆட்சிக்கு வந்தார். இவருக்கு மிகவும் அறிவுத்திறன் கொண்ட, திட்டமிட்டு செயல்படுத் சூட்சுமம் தெறிந்த ஓர் ஆளுநர் கிடைத்தார். ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் என்று வரலாற்றில் பிரபலமாக அறியப்படும் ஆளுநர்தான். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்று வந்து செல்வாக்கையும் ஈட்டிவந்த ஆதரவுகளையும் குலைத்தார்!
அவரால் எவ்வாறு வெற்றியடைய முடிந்தது என்பது நமது தலைப்பை விட்டு தூரமான விஷயமாகும். உண்மையாதெனில், ஹஜ்ஜாஜ் தமது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் வெற்றிகளைப் பெற்றார். அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அவர் எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்கினாரெனில் இறுதியில் அவர்கள் கஅபா ஆலயத்தினுள் அடைக்கலம் புகுந்து ஒளிந்திட நேரிட்டது!
ஹஜ்ஜாஜ் அதுமட்டுமா செய்தார்? அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை விட்டு அவர்களின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதற்கும் பிறகு தன்னிடம் வந்து சேருவதற்கும் உரிய அனைத்து சூழ்ச்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் உயிர்த்தியாகிகளாய் விளங்கிய, வாய்மையான வீரர்கள் ஒருசிலரே அவர்களுடன் இருந்தார்கள்.
இந்நிலையில் ஹஜ்ஜாஜை எதிர்த்து மேற்கொள்ளும் போர் எப்படி வந்து முடியும் என்பது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் புலப்பட்டது! அவர்கள் போர்க்கவசம் அணிந்து ஆயுதம் ஏந்திய வண்ணம் தம் தாயாரின் சமூகத்திற்கு வந்தார்கள். அவர்களைச் சந்தித்து விடைபெற்றுச் செல்வதற்காக! அது அவர்களது இறுதிச் சந்திப்பாகவும் இருந்தது.
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அப்போது 100வது வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் பார்வை மங்கிப்போய் விட்டிருந்தது. அவர்களின் பெருமைக்குரிய மகனார் எதிரே வந்து நின்றார். போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!
மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ :-
அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும்.
நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும்.
நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை| வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்கமுடியும்!
எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் – இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல!
நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’
அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் – தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!
அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்…! ஆகா! தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.
என் அன்புத் தாயே, ஷாம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!||
மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!||
உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –
என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!
இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் யஜீதுக்கு எதிராக தாம் மேற்கொண்ட போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார் :-
மகனே, இன்று அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!||
இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.
மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!|| என்று அறிவுறுத்தினார்கள்!
அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!
பிறகு ஹஜ்ஜாஜ் என்ன செய்தார் தெரியுமா? அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டார்!
ஒரு கொடுங்கோலன் இனங்காட்டப்பட்டான்!
மறுநாள் அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற – ஏன் – அதனையும் விஞசும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?
இஸ்லாத்தின் இந்த மாவீரன் – தியாக மறவன் – இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!
ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவர். சொல் நயமும் கருத்து வளமும் செறிந்த அவருடைய சொற்பொழிவு மக்களிடம் நல்ல மதிப்பையும் புகழையும் பெற்றிருந்தது! அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.
உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.||
நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜத் -இரவுத் தொழுகை- தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள்|| – அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார்| எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.||
பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானார். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன்,|| என்று பிதற்றினார்!
நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டானே!
இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.
இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து போய்விட்டாள்
இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.
அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!||
ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டார்!
பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விடவும்| எனும் கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி துணிபொதிந்து அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது| என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்!
அவ்வாறே அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை – அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!
உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!
மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!
இதுதான் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீர வரலாறு! நபித் தோழியர்களுள் மிக நீண்டதோர் ஆயுள் காலத்தைப் பெற்றவர்கள் மிகச் சிலரே. அவர்களில் அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். வரலாற்றில் நிகழ்ந்த எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை அவர்கள் கண்டுள்ளார்கள். இஸ்லாத்திற்கு முரணான முந்திய அறியாமைக்கால வாழ்கை அமைப்பையும் கண்டார்கள். பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ வாழ்வு முழுவதையும் – அடுத்து நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் பொற்கால ஆட்சியையும் காணும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்.
மகத்தான சிறப்புடன் திகழ்ந்த தம்முடைய மகனார் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் புகழின் சிகரத்தில் இருந்த காலகட்டத்தையும் பார்த்தார்கள். போரில் கொல்லப்பட்டு கொடூரமாக நடத்தப்பட்ட கோரக்காட்சியையும் பார்த்தார்கள். எண்ணற்ற துன்பங்கள் தொடர்ந்து வந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இணையிலா உறுதியையும் இறைநம்பிக்கையையும் நிறைந்த பொறுமையையும் துணிவையும்தான் வெளிப்படுத்தினார்கள்.
உயர் பண்புகளையும் உன்னதப் படிப்பினைகளையும் கொண்டு முழு நிலவாய் ஒளிரும் அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுக்கும் பிற மக்களுக்கும் குறிப்பாக தீன் குலப் பெண்மணிகள் அனைவர்க்கும் என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காய்த் திகழும்!