MUST READ
இஸ்லாமிய வரலாற்றில் புகழுடன் ஒளிவீசும் தாரகையாய்த் திகழ்கின்ற ஒரு மகத்தான பெண்மணியின் சரிதை
அண்ணல் நபியின் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த புதல்வியும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அநம்பிக்கைவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியும் மாபெரும் வீரத் தியாகியாய்த் திகழ்ந்த அப்துல்லாஹ் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்பு அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வரலாறுதான் அது!
அவர்களின் வாழ்க்கை வறுமைக்கு இலக்காகும் இல்லத்தரசிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்! பெண்ணினத்தை இழிவுக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு – ஒரு பெண் ஆணைவிடவும் அதிக அறிவு பெற்றவளாக, சிறந்தவளாக திகழ முடியும் எனும் உண்மையின் நிரூபணம்!
பெண் என்றால் ஓர் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும், வெளியலங்காரத்தையும் பகட்டையும் தவிர வேறெந்த நன்மையோ குறிக்கோளோ அவளிடம் இல்லை என்று கருதுபவர்களுக்கு – பெண் என்பவள் வெறும் வெளியலங்காரம் எனும் நிலையை விட்டு உயர்ந்தவள், சமுதாயப் புத்தமைப்பில் ஓர் அங்கமாகவும் சமுதாயத்தின் உயர்வையும் சிறப்பையும் நிலை நாட்டுவதற்கு உறுதுணையாகவும் அவள் இருந்திட முடியும் எனும் உண்மையின் தெளிவுரை!
இறைவனின் மீது உண்மையான – உறுதியான கொண்ட அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சிறுவயது முதலே இஸ்லாத்தின் வெற்றிக்காக அரும்பெரும் பணிகளை ஆற்றும் நல்வாய்ப்பைப் பெற்றார்கள்!
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத் தலைவியை வறுமையும் துன்பமும் வந்து வாட்டிய காலமும் உண்டு. அப்போது அவர்கள் பொருமையின் சிகரமாய் ஒளிர்ந்தார்கள். பிறகு செழிப்பும் வளவாழ்வும் வந்து மகிழ்வித்தன. அப்போது கிஞ்சிற்றும் செருக்குறாமல் குணத்தின் குன்றாய் வாழ்ந்துகாட்டி பெண்குலத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியைப் படைத்தார்கள்.
இஸ்லாத்தைத் தழுவுதல்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழைப்பை ஏற்று சுமார் 17 பேர் மட்டுமே இரகசியமான முறையில் இஸ்லாத்தைத் தழுவியிருந்த காலத்திலேயே 18வது நபராக அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தின் முன்னணிப படையில் தம்மை இணைத்துக் கொண்டார்கள்!
மக்காவில் இஸ்லாத்தின் அழைப்புப் பணி பகிரங்கமாக மேற்கொள்ளப்படத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இணை வைப்பாளர்களான குறைஷிகளின் உள்ளத்தில் கோபக்கனல் பொங்கி எழுந்ததும் – பிறகு எத்துணை பயங்கரமான கொடுமைகள் தலைவிரித்தாடின என்பதும் யாவரும் அறிந்ததே!
அல்லாஹ்வின் அருமைத் தூதரும் அவர் தம் ஆருயிர்த் தோழர் அபூபக்கர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும்கூட அக்கொடுமைகளிலிருந்து தப்பித்திருக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கண்ணுற்ற சிறுவயதுப் பெண்ணாய் இருந்த அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உள்ளத்தில் ஈமான் மென்மேலும் உறுதிப்பட்டது. எவ்விதத் தளர்வோ தயக்கமோ அடைந்தார்களில்லை. இக்கொடுமைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமெனப் பொறுமையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்!
இறுதியில் மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் செய்வதற்கு இறைவன் தன் அன்புத் தூதருக்கும் அவர்தம் தோழர்களுக்கும் அனுமதி வழங்கினான்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அப்பயணம் வெற்றிபெற அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆற்றிய சேவை என்ன?
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட இந்நிகழ்ச்சி வெளிரங்கத்தில் – ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் – அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!
ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!
இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!
ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை!
ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்! அண்ணலாரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் தெரியும்! அடுத்து, சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் அந்தப் பயணத்தின் அனைத்து விபரங்களும் தெரியும்! அவர்கள்தான் அதில் நபியவர்களுக்கும் தம் தந்தை அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொறுப்புமிக்க உதவிகளை அளித்தார்கள்.!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சாதுர்யம்
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குறைஷி குலத்து வன்னெஞ்சர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த தம்முடைய இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறி – தம் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் மக்காவின் அருகிலிருந்த தௌர் குகையை அடைந்தார்கள். எதிரிகளின் நிலைமைகளை அனுசரித்து சில நாட்களாக அங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதும் – அந்நாட்களில் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் அவ்விருவருக்கும் உணவு தயாரித்து மிகமிக இரகசியமாகக் குகைக்குச் சென்று கொடுத்து வரவேண்டும் என்பதும் திட்டம்!
அங்கே மக்காவில்…! அண்ணலாரின் வீட்டுக்கு வெளியே தங்களின் கொடிய கொலைபாதகத் திட்டத்தை நிறைறே;றுவதற்காக நபியவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த எதிரிகளுக்கு……. பாவம.;….! வீட்டினுள் விரிப்பில் படுத்துக் கொண்டிருப்பது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்ல, அலீ ரளியல்லாஹு அன்ஹு தான் என்பது அதிகாலை நேரம் புலர்ந்ததும் தான் தெரிய வந்தது! ஆனால் அப்போது அவர்களால் என்ன செய்திட முடியும்?
அவர்களின் தலைவன் அபுஜஹ்ல் தன்னுடைய திட்டம் தோல்வி அடைந்தது கண்டு வெகுண்டெழுந்தான்…….! அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும்போல் இருந்தது!
அவனும் அவனுடைய தோழர்களும் அவர்களுக்கே உரிய போலிப் பகட்டெனும் செருக்குடனும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அபூஜஹ்ல் வேகமாகக் கதவைத்தட்டினான்! உள்ளே இருந்து வெளியே வந்தது வேறு யாருமல்ல, இளம் வயதுப் பெண்மணியாகிய அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா தான்! குகையில் தங்கியுள்ள அண்ணலாருக்கம் தம் அன்புத் தந்தையாருக்கும் வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள்!.
உன் தந்தை எங்கே? இது அபூஜஹ்லின் அகங்காரக் கேள்வி! அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது:
உரிய பதில் வராததைக் கண்டதும் அபூஜஹ்ல் அதட்டினான்: மிரட்டினான் ஆனால் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை: அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கொடியோன் அபூஜஹ்ல் அன்பே உருவான அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அழகிய கன்னத்தில் கையை ஓங்கி பளீரென அறைந்தான்!
ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் இப்படித்தான் செய்வார்கள் ஆண்களிடம் தங்களின் ஜம்பம் பலிக்காவிட்டால் பாவம்! பெண்களைத்தான் அடிப்பார்கள்!
பொறுமைக் கடலான அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அந்த அற்பனின் அடியைத் தாங்கிக்கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளை முறையோடு கவனி;த்திடலானார்கள். அந்தக் கோழைகளின் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிச் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை – ஹிஜ்ரத் பயணம் இப்போது முன்னைவிட ஜாக்கிரதையாக தௌர் குகையிலிருந்து தொடர்ந்திட வேண்டியதிருப்பதால்!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரர் – அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த புதல்வர் அப்துல்லாஹ் என்பவர் (அதுவரை அவர் முஸ்லீம் ஆகாமல் இருந்தார்) பகல் நேரங்களில் மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்து எதிரிகளின் திட்டங்கள், செயல்பாடுகள் என்னவென்பதை அறிந்து கொண்டு வருவார். மாலை நேரத்தில் தம் சகோதரியுடன் குகைக்கு வந்து எல்லாச் செய்திகளையும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவிப்பார்!
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வேலையாள் அமீர் இப்னு ஃபுஹைரா என்பவரின் மூலம் ஒரு தற்காப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது! அது என்ன? அவர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டே சென்று குகை அருகே வருவார். அங்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் பால் கறந்து கொடுத்துவிட்டு, பிறகு அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அவர்தம் சகோதரரும் குகையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது பின்னாலேயே அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருவார்! அதன்மூலம் அவ்விருவரின் காலடிச் சுவடுகளை அழித்து விடுவார். எதிரிகளில் எவனாவது ஒருவன் அவ்விருவரின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றுவிட்டால்..! இரகசியம் வெளிப்படுவதற்கான அந்த வழியும் இந்த ஏற்பாட்டினால் அடைக்கப்பட்டது!
இளம் வயதுடைய அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இத்தகைய நுட்பமான ஏற்பாடுகளையெல்லாம் செவ்வனே நிறைவேற்றினார்களெனில் அவர்களின் அறிவுத் திறனை என்னவென்றுரைப்பது!
குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினார்கள், ‘அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று நாளை இரவு இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியாக நியமிக்கப் பட்டவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வரவேண்டும் என்று அறிவித்து விடுவீராக!
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரு ஒட்டகங்களையும் வழிகாட்டியையும் அழைத்துக் கொண்டு உரிய நேரத்தில் கட்டளைப்படி வந்து சேர்ந்தார்கள்!
மறுபுறத்தில்.. அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பல நாட்களுக்குப் போதுமான உணவையும் தண்ணீரையும் தயார் செய்து கொண்டு வந்தார்கள்! அங்கே உணவு மற்றும் தண்ணீர் நிரம்பிய தோல் பைகளை முறையாகக் கட்டுவதற்கு கயிறு எதுவும் கிடைக்கவில்லை! என்ன செய்வது? சித்தீகின் மகளுக்கு பளிச்சென்று ஒரு யோசனை பட்டது!
உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த வார்த் துணியை அவிழ்த்து இரண்டாகக் கிழித்து இரு பைகளையும் கட்டினார்கள்.
இந்த புத்திசாலித்தனத்தைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷதாதுந் நிதாகைன்| (இரு வாருடையவரே!) என்று அழைத்தார்கள்! அன்றிலிருந்து இன்று வரை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இதே பெயரில் புகழடைந்துள்ளார்கள்!
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்