பணமும் பாட்டனாரும்
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவு அவர்களின் ஈமானைப் போன்று உயர்வானதாய் இருந்தது. அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அறிவுப்பூர்வமாய் அமைந்திருந்தன. இதோ! மற்றொரு நிகழ்ச்சி!
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரத்தின்போது வீட்டிலிருந்த பணம் முழுவதையும் எடுத்துச் சென்றிருந்தார்கள்! எதற்காக? தம் குடும்பத்தினருக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக அல்ல! மாறாக, முஹம்மர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மேற்கொண்ட அழைப்புப் பணி உலகமெங்கும் பரவிட வேண்டும் என்பதற்காகத்தான்! தம்மை விடவும் தம் குடும்பத்தை விடவும் உயர்வாய்க் கருதிக் கொண்டிருந்த ஏகத்துவப் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனும் உன்னதக் குறிக்கோளுக்காகத்தான் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.
இந்த விஷயம் அவர்களின் தந்தை அபூகுஹாஃபாவுக்குத் தெரிய வருகிறது. அவர் முதியவராகவும கண்பார்வை இழந்தவராகவும் இருந்தார். அதுவரை அவர் இஸ்லாமிய நெறியை ஏற்றிருக்கவில்லை! மிகுந்த மனவேதனையுடனும் கோபத்துடனும் வந்து தம்முடைய பேத்தியான அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கிக் கேட்டார்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு உங்களை மற்றொரு துன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். உங்களைத் தன்னந்தனியே விட்டு விட்டுச் சென்றது மட்டுமல்லாமல் தன்னுடைய பணம் முழுவதையும் – உங்களுக்குத் தராமல் கொண்டு சென்று விட்டாரே?’
என் அன்புப் பாட்டனாரே! அப்படியல்ல என்று பதிலளித்த அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முதியவராகவும் கண்பார்வை இழந்தும் உள்ள தம் பாட்டனாரை இந்நேரத்தில் மனம் நோகவைப்பது நல்லதல்ல எனக் கருதி, சிறுசிறு கற்களைக் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் கொண்டுவந்து அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பணம் வைத்துக் கொண்டிந்த பையில் அவற்றைப் போட்டு அதனைப் பணப் பெட்டியில் வைத்துவிட்டார்கள்.!
இங்கு வந்து பாருங்களேன்!’ என்று கூறி பாட்டனாரின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சென்று அந்தப் பையில் வைத்து ‘இது என்னவென்று சொல்லுங்கள்’ என்றார்கள்!
அப்போது அபூகுஹாஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனம் நிம்மதி அடைந்து, ‘இதனை உங்களுக்காக விட்டுச் சென்றுள்ளாரெனில் நல்லதைத்தான் செய்துள்ளார்’ என்று கூறினார்கள்.
அசத்தியவாதிகளின் நரித்தனமான பிரச்சாரம்.
ஹிஜ்ரத் மேற்கொள்ளுமாறு இறைவன் பிறப்பித்த கட்டளையை ஏற்று முஸ்லிமகள் மக்காவை விட்டு மதீனாவில் குடியேறிய தொடக்கத்தில் – மதீனாவின் தட்பவெப்ப சூழ்நிலை முதலில் அவர்களின் உடல்நிலைக்கு ஒத்துவரவில்லை. இறைவனின் நாட்டப்படி, சிறிது காலம் முஹாஜிர்களின் எந்தக் குடும்பத்திலும் குழந்தைகளே பிறக்கவில்லை.
இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் இந்த இயற்கையான நிலையைக்கூட எதிர்ப்பு ஆயுதமாகக் பயன்படுத்தத் தவறவில்லை. உடனே வதந்திகளைக் கிளப்பினார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர்களில் ஒருவருக்குக்கூட குழந்தை பிறக்கவில்லை. அவர்களுக்குப் பிறகு அவர்களின் பெயரைக் கூற சந்ததிகளே இருக்கமாட்டார்கள் என்று அறிவுக்குப் புறம்பான – அநாகரீகமான பொய்யைப் பரப்பிவிட்டு, அதன்மூலம் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.
அசத்தியவாதிகளின் எல்லா வழிகளிலும் தங்களின் நரித்தனத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இன்று வரைக்கும் நாம் கண்டுவரும் உண்மைதானே!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இதுவரை ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு வரவில்லை. அவர்களின் மாமி மகன் ஜுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் மக்காவிலேயே அவர்களுக்குத் திருமணம் நடைபெற்றிருந்தது!
ஓரிரு மாதங்களுக்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மனைவியரையும் ஏனைய நெருங்கிய உறவினர்களையும் அழைத்து வருவதற்காக ஜைத் இப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் அபூ ராஃபிஉ ரளியல்லாஹு அன்ஹு இருவரையும் மக்காவுக்கு அனுப்பினார்கள். இதுபோன்று அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் பணியாளின் மூலம் தம் மகன் அப்துல்லாஹ்வுக்குக் கடிதம் கொடுத்து விட்டார்கள். அதில் அப்துல்லாஹ்வின் தாயார் உம்மு ரூமானையும் (அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இரண்டாவது மனைவி) அவரது சகோதரிகளையும் மதீனாவுக்கு அழைத்து வருமாறு ஏவப்பட்டிருந்தார்.
அதற்கு ஏற்ப அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு தம் தாயாரையும் சகோதரிகள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா இருவரையும் அழைத்துக் கொண்டு மதீனா நோக்கிப் புறப்பட்டார்!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் கொஞ்ச நாட்களில் அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது! ஹிஜ்ரத்திற்குப் பிறகு முஹாஜிர்களில் முதன் முதலில் பிறந்த குழந்தை இதுவே! இதனை அறிந்த முஸ்லிம்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனந்த மிகுதியால் ஷஅல்லாஹூ அக்பர்| என்று முழங்கினார்கள்.
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம் குழந்தைக்கு அப்துல்லாஹ் எனப் பெயர் சூட்டி, அதனைத் தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சமூகம் வந்தார்கள். மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஒரு பேரீச்சம் பழத்தைத் தம் திருவாயில் இட்டு மென்று அதனைக் குழந்தைக்கு ஊட்டினார்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்!
இந்தச் செய்தியைக் கேட்ட யூதர்கள் பொறாமைத் தீயில் வெந்தார்கள்.
ஏழை மணாளரின் மனைவி!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் வாழ்க்கைப்பட்ட குடும்பமும் மக்கா நகரில் பெரும் செல்வாக்குப் பெற்ற, வளம் கொண்ட குடும்பங்களாய் இருந்தன. ஆம்! அவர்கள் மக்கா நகரின் பெருந்தலைவரின் (அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின்) மகள், மாபெரும் தலைமைக் கோத்திரத்தின் செல்வச் செழிப்புள்ள இளைஞரின் (ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின்) மனைவி! குறைஷிகளிடையே மதிப்பு மரியாதை கொண்ட தலைவரான அப்துல் உஸ்ஸா என்பவரின் மகளார் கதீலா என்பவர்தான் அவர்களின் தாயார்!
ஆயினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட குற்றத்திற்காக| மக்கத்து குறைஷிகளின் தயவினால்| எவ்வாறு பெரிய பெரிய மனிதர்களின் பொருளாதார நிலை பாழாக்கப்பட்டதோ – அவ்வாறே அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளப்பட்டார்கள்!
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போது 17 வயது இளைஞர். இஸ்லாத்தை தழுவியதற்காக முதலில் அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை அடித்து உதைத்தார்கள். வீட்டில் அடைத்த வைத்தார்கள். அப்படியும் அவர்களின் பிடிவாதம் தெளியவில்லை என்றானபோது அவர்களை வீட்டிலிருந்து விரட்டினார்கள்.
இறுதியில் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபிசீனியா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்ள வேண்டியதாயிற்று!செல்வம் கொழித்த குடும்பத்தின் இந்த ஏழைமணாளருக்குத்தான் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மணம் முடிக்கப்பட்டார்கள். அவர்கள் மனம் சோர்ந்திடவில்லை. ஏழை என்றாலும் பரவாயில்லை. அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் எனும் வகையில் மகிழ்வோடு அந்தத் திருமணத்தை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவுக்கு வந்தபோது கொஞ்சநஞ்சம் இருந்த பொருள்களும் மக்காவில் மாட்டிக் கொண்டன! இப்போது மதீனாவில் அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் பெயரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை! ஒருசில நாட்களுக்குப் பிறகு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சிறிய பேரீச்சந் தோட்டத்தை வழங்கினார்கள்!
மதீனாவில் ஆரம்ப காலத்தில் தாம் பட்ட கஷ்டங்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே விளக்கிக் காட்டியுள்ளார்கள். அதனை அவர்களின் வாய்மொழியாகவே கேட்டால் நல்லது என்கின்றீர்களா? இதோ கூறுகின்றார்கள், கேளுங்கள்!
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எனக்குத் திருமணம் நடைபெற்ற நேரத்தில் அவரிடம் பணம் இல்லை, எந்தப் பணியாளும் இல்லை! வறுமை வயப்பட்டும் அளவு கடந்த துன்பத்திற்குள்ளானவராகவும் இருந்தார்கள். அவருக்கென உரியவை ஒரு குதிரையும் ஓர் ஒட்டகமும்தான்! மேலும் நானே அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று!
மதீனாவுக்கு வந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரிச்சந் தோட்டமாக கொஞ்சம் நிலத்தை ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கினார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது! நான் தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளை பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு வருவேன். வீட்டிற்கு வந்து அவற்றை எனது கையாலேயே உடைத்து ஒட்டகத்திற்கு தீனியாகப் போடுவேன். வாளியினால் தண்ணீர் இறைத்து நிரப்புவேன். மேலும் வீட்டின் எல்லா வேலைகளையும் நானே செய்து கொண்டிருந்தேன். எனக்கு நல்லவிதமாக ரொட்டி சமைக்கத் தெரியாது. ஆகையால் மாவைப் பிசைந்து மட்டும் வைத்துவிடுவேன். எனது வீட்டுக்கு அருகில் அன்ஸாரிப் பெண்கள் சிலர் வசித்தார்கள். அவர்கள் வந்து அன்புடனும் பாசத்துடனும் ரொட்டிகள் சமைத்துத் தந்து கொண்டிருந்தார்கள்!’
தினமும் இத்தகைய சிரமங்கள் எனக்கு நேர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் தோட்டத்திலிருந்து பேரீச்சங் கொட்டைகளை மூட்டை கட்டி சுமந்து வந்து கொண்டிருந்தேன். வழியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் ஒட்டகத்தின் மீது இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் சிலரும் அவர்களுடன் வந்தார்கள்.
இவ்வாறு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் என்னை நபியவர்கள் கண்டபோது என் மீது இரக்கப்பட்டு – ஒட்டகத்தைப் படுக்கச் செய்தார்கள். நானும் அதில் ஏறி அவர்களுக்குப் பின்னே அமர்ந்து செல்வதற்காக! ஆனால் நான் வெட்கத்தின் காரணத்தால் அதில் பயணமாகவில்லை!
இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு என் தந்தையார் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்கு ஒரு பணியாளைக் கொடுத்து உதவினார்கள். அதனால்; எனது சிரமம் பெருமளவு குறைந்து விட்டது.’
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பணியாளை நியமித்தபோது அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்கு அரியாசனமே கிடைத்துவிட்டது போன்றுதான் உணர்ந்தார்கள்! அப்படியெனில் அவர்கள் அன்றாடம் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உழைத்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்பதைப் பாருங்கள்!
இத்தகைய ஏழ்மையின் காரணத்தால்தான் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டின் தேவைகளுக்காக மிகவும் இறுக்கிப் பிடித்துச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள். மிதமிஞசிய கடும் சிக்கனப் போக்கினை ஒருநாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்தார்கள். ‘இவ்வாறு ஒவ்வொன்றையும் அளந்து நிறுத்திப் பார்த்து – கஞ்சத்தனம் செய்து கொண்டு இருக்காதீர்கள். அப்படிச் செய்தால் அல்லாஹ்வும் அந்த அளவுக்கே வழங்குவான்’ என்று அறிவுரை பகர்ந்தார்கள்
வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே| என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளே, கண்மணி அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மீதி வரலாற்றையும் கேளுங்கள்!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் தனவந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்