அவர்களுடைய வாழ்கையின் இலக்கணம் இதுதான்!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட – நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத் துறையில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை!
அவர்களின் கணவர் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய – புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்’ என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை!
நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சம்பாதித்தார்கள்!
முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.
இதன் காரணமாகத்தான் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு – அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எழிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!
ஒருபோது அவர்களின் மகன் முன்திர் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஈராக்கின் போரிலிருந்து திரும்பி வரும்போது தம் தாயாருக்காக மிகவும் விலை உயர்ந்த மெல்லிய – மென்மையான சேலைகளை வாங்கி வந்தார். அவற்றைத் தம் தாயாரிடம் அவர் கொடுத்தபோது, அச்சேலைகளின் பளபளப்பையும் மென்மையையும் பார்த்த அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், ‘நான் இதுபோன்ற மெல்லிய சேலைகளை அணிவதில்லை’ என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார்கள்!
ஆம்! அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வறுமையின் காரணத்தால் பல மைல்களுக்கு அப்பாலிருந்து பேரீச்சங் கொட்டைகளைச் சுமந்து… அன்று பட்ட கஷ்டங்களின் பாடங்களை| மனத்தில் பசுமையாக்கிக் கொண்டிருந்ததால் இன்று பெருமைக்கு ஆளாகவில்லை! பகட்டையும் பளபளப்பையும் விரும்பவில்லை!ஆனால் ஒரு கேள்வி எழலாம். செல்வ நிலை ஏற்பட்ட பிறகும் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முரட்டு ஆடைகளை உபயோகித்துக் கொண்டு ஏழ்மைக் கோலத்தில் வாழ்ந்தார்களெனில், பழைய கருமித்தனத்தை| இன்னும் கைவிட்டார்களில்லை என்றுதானே பொருள்?
இல்லை! அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எழியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். அவர்கள் தம்முடைய பிள்ளைகளுக்கு வழங்கிய அறிவுரையைப் பாருங்கள்.
பிறருக்கு உதவி செய்வதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும்தான் இறைவன் செல்வத்தை வழங்குகிறானே தவிர, சேமித்து வைப்பதற்காக அல்ல! ஆகையால் அல்லாஹ்வின் அடிமைகளுக்கு உதவுங்கள்! உங்கள் செல்வத்திலிருந்து அல்லாஹ்வின் அடிமைகளுக்கு நீங்கள் உதவிடவில்லையானால் அது கஞ்சத்தனம் ஆகும்! அப்போது அல்லாஹ்வும் தனது அருளையும் கருணையையும் உங்களுக்கு வழங்காது போய்விடுவான். நீங்கள் தான தர்மங்கள் செய்வீர்களாயின் உண்மையில் அதுவே உங்களுக்கான சிறந்ததொரு பொக்கிஷமாகும். அது என்றைக்கும் குறைந்து விடாது. மேலும் அது வீணாகிப் போய்விடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை.’
இது போன்ற அறிவுரைகளை வழங்கிய அதே நேரத்தில் செயல் ரீதியில் அவற்றை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்! அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். ‘என் தாயார் மற்றும் சிறிய தாயார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருவரை விடவும் அதிகமாக கொடை வழங்குபவர் எவரையும் நான் கண்டதில்லை.
கொடை வழங்கும் முறை அவ்விருவரிடமும் மாறுபட்டிருந்தது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை என்னவெனில், அவர்கள் தமது வருவாயைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைப்பார்கள். கடைசியில் கணிசமான அளவு சேர்ந்ததும் தேவைப்பட்டோருக்கு பங்கிட்டு அளித்து விடுவார்கள். ஆனால் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை இதற்கு மாற்றமாக இருந்தது. அவர்கள் நாளொன்றுக்கு எதையும் சேமித்து வைப்பதில்லை. எது மிஞ்சினாலும் அதே நேரத்தில் பங்கிட்டு கொடுத்து விடுவார்கள்.’
பிற்காலத்தில் – அவர்களின் சகோதரி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மரணம் அடைந்தபோது ஒரு நிலத்தைத் தமது சொத்தாக விட்டுச் சென்றார்கள். அதற்கு அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தவிர வேறு வாரிசுகள் யாரும் இல்லை. ஆகையால் அந்த பூமி அவர்களுக்கே கிடைத்தது! அதனை விற்றுக் கிடைத்த சுமார் ஒரு இலட்சம் திர்ஹம் முழுவதையும் தம்முடைய உறவினர்களில் தேவைப்பட்டோருக்குப் பங்கிட்டு கொடுத்து விட்டார்கள்!
இப்படிக் கணக்கின்றி வழங்கும் கரமுடையவர்களாய் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திகழ்ந்தார்கள். ஆனால் அவர்களின் கணவர் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இயல்பில் கொஞ்சம் கடுமை இருந்தது. ஆகையால், அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருமுறை கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! என் கணவரின் சொத்திலிருந்து அவரின் அனுமதி இன்றி – அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து உதவலாமா?’
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆம்! கொடுக்கலாம்’ என்றார்கள்.
சுவரின் நிழலும் சிறு வியாபாரியும்
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இத்தகைய தாராளத்துடன் நடந்து கொண்டாலும் – வீடு வாசல்களைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். எவ்வளவு சிறிய பிரச்சனையானாலும் அவருடைய அனுமதி பெற்றே செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வு கொண்டிருந்தார்கள்!
ஒரு தடவை வீட்டில் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இல்லாதபோது ஏழை வியாபாரி ஒருவர் வந்து அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் உதவி வேண்டி நிற்கின்றார். ‘உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் பொருட்களை வைத்து விற்பதற்கு அனுமதி தாருங்கள்’ என்று கோரினார்.
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
நான் அனமதி வழங்கிவிடுவேன் ஆனால் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து மறுத்து விடுவார்களாயின் பெரிய சிக்கலாய் போய்விடும். ஆகையால் வீட்டில் அவர்கள் இருக்கும்போது வந்து கேளுங்கள்!’
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வீடு திரும்பியபோது மீண்டும் அந்த வியாபாரி வீட்டு வாசலில் வந்து நின்றுகொண்டு தனது கோரிக்கையை வத்தார்.
அப்துல்லாஹ்வின் தாயார் அவர்களே! நான் ஓர் ஏழை. அன்றாடம் சில பொருட்களை விற்றுத்தான் பிழைக்கின்றேன். உங்கள் வீட்டுச் சுவரின் நிழலில் அமர்ந்து வியாபாரம் செய்ய விரும்புகிறேன். தயை கூர்ந்து அனுமதி தாருங்கள்.’
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ‘எனது வீட்டை விட்டால் மதீனாவில் உமக்கு வேறு வீடு கிடைக்கவில்லையா?’ என்று அதட்டுவது போன்று கேட்டார்கள்.
இந்தப் பதிலைக் கேட்டுக்கொண்டிருந்த ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஓர் ஏழை வியாபாரம் செய்வதைத் தடுக்கின்றாயே?’ என்று தம் மனைவியைக் கண்டித்தார்கள்!
உடனே அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அனுமதி வழங்கிவிட்டார்கள். அதைத்தானே அவர்கள் எதிர்பார்த்தார்கள்!
தாயின் பாசமும் இறைவசனமும்.
ஓரிறைக் கொள்கையிலும் அதன் கோட்பாடுகளிலும் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உறுதியுடன் இருந்தார்கள். இறைவனை நிராகரிக்கும் போக்கும், கண்ட கண்ட பொருள்களையெல்லாம் கடவுளாகக் கருதி அவற்றை வணங்கி வழிபடுவதும் அவர்களுக்கு அறவே பிடிக்காது! எந்த அளவுக்கெனில். அப்படி வாழும் இணைவைப்பவர்களை அவர்கள் மிக நெருங்கிய உறவினர்களாயினும் சரியே, மிகக் கடுமையாக வெறுப்பவர்களாய் இருந்தார்கள்!
அன்றைய சமூகத்தில் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய நெருங்கிய உறவினர்களில் அல்லது தூரத்து உறவுமுறையுடையவர்களில் சிலர் அல்லது பலர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதிருந்தார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளாதவர்களில் சிலர் கடும் பகைவர்களாகி இஸ்லாத்தை அழிக்கும் கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர்! இத்தகைய கடும் பகைவர்களுடன் எவ்விதத் தொடர்பும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது.
ஒருவர், இறைவன் மீதும் இஸ்லாத்தின் எதிரிகளிடமும் ஒரே நேரத்தில் நேசம் கொள்வது என்பது எப்படி சாத்தியமாகும்? நம்முடைய நெருங்கிய உறவினர்களாயிற்றே என்று அந்த எதிரிகள் மீதான அன்புக்கும் தன் உள்ளத்தில் இடம் அளித்து, அவர்களிடம் நேசம் பாராட்டி நெருங்கிப் பழகும் மனிதரை உண்மையான இறைநம்பிக்கையாளராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
இந்நிலையில்தான் ஒருமுறை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன.
பிறகு எண்ணிப் பார்க்கின்றார்கள்! அவருடைய தாயார் இணைவைப்புக் கொள்கையில இருக்கின்றார். தீனுடைய – இறைநெறியுடைய பிணைப்பு குடும்பப் பிணைப்பை விட சக்திவாய்ந்ததாகும். திருக்குர்ஆன் இப்படி அறிவுறுத்தியுள்ளது.
(நபியே) அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எவர்கள் விரோதித்துக் கொண்டார்களோ அவர்களை நேசிக்கக் கூடியவர்களாய் இருக்கக் காணமாட்டீர், அப்படிப்பட்டவர்கள் அவர்களின் தந்தையராகவோ மகன்களாகவோ சகோதரர்களாகளோ அவர்களுடைய குடும்பத்தினராகவோ இருந்தாலும் சரியே! (அல்குர்ஆன் 58:22)
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் உள்ளத்தில் இந்தக் கருத்துக்களெல்லாம் நிழலாடுகின்றன. உடனே கட்டித் தழுவத் துடித்த அவர்களின் கரங்கள் சோர்ந்து விடுகின்றன. கண்கள் பார்வையை தாழ்த்தி விடுகின்றன. அன்புடன் வரவேற்பதற்காக எழுந்த நாவு.. வாருங்கள்| என்று கூற மறுத்துவிட்டது!
என்னுடைய தாயார் நீண்ட நாட்களுக்கப் பிறகு என்னைக் காண வந்திருக்கின்றார். இறைவனை நிராகரித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அவரை நான் வரவேற்று உபசரிக்கலாமா? என்பதை இறைத்தூதரிடம் கேட்டுச்சொல்’ என்று தன் சகோதரி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தூது அனுப்பினார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். ‘ஆம்! உம்முடைய தாயாருடன் உறவு கொண்டு வாழுங்கள். அவரை வரவேற்று உபசரியுங்கள்’ என்று கூறிவிட்டு பின் வரும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். ‘எவர்கள் உங்களுடன் தீனின் – இறைநெறியின் விஷயத்தில் போரிடவில்லையோ மேலும் உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களுடன் நீங்கள் நல்ல முறையிலும் நீதத்துடனும் நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துகின்றவர்களை நேசிக்கின்றான். ஆனால் எவர்கள் தீனின் விஷயத்தில் உங்களுடன் போரிட்டார்களோ – மேலும், உங்களை உங்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றினார்களோ, அப்படி வெளியேற்றுவதில் பரஸ்பரம் உதவி செய்தார்களோ அவர்களுடன் நீங்கள் நட்புக் கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அத்தகையவர்களிடம் எவர்கள் நட்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அநீதியாளர்கள்தான். (அல்குர்ஆன் 60:8)
இத்தகைய நீண்ட வசனத் தொடரை ஓதிக்காட்டி மனிதர்களுக்கிடையிலான நல்ல உணர்வுகளில் இஸ்லாம் என்றைக்கும் குறுக்கீடு செய்யாது. மனத்தில் எழும் உயர்ந்த எண்ணங்களைக் கொன்று விடாது எனும் உண்மையை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு உணர்த்திய பிறகு, அவர்கள் தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்!
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.
ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வரலாறு நமக்கு வழங்குகின்றது!
வீரம்
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு கொள்கையில் எஃகு போன்ற உறுதியும் பொறுமையும் பெற்றிருந்த அதே நேரத்தில் வீரத்திலும் சிறந்து விளங்கினார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமைடந்த பிறகு ஒருமுறை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம்முடைய கணவர் மற்றும் மகனுடன் ஷாம் தேசத்தின் போர்க்களத்தில் பங்கு பெற்றார்கள் என்று ஓர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மிகப் பயங்கரமாக நடைபெற்ற யர்மூக் யுத்தத்தில் பிற பெண்களுடன் சேர்ந்து தங்களுக்கே உரிய முக்கியமான போர்ப்பணிகளை ஆற்றியுள்ளார்கள்.
மதீனாவில் ஸயீத் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆளுநராக இருந்தபோது இரவு நேரங்களில் திருட்டும், கொள்ளையும் வழிப்பறியும் பரவலாக நடைபெற்று வந்தன. மக்களை பெரும் பீதியும் அச்சமும் ஆட்கொண்டிருந்தன. அப்போது அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தம்முடைய தலைக்கருகில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டுதான் இரவில் தூங்குவார்களாம். ‘ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?’ என்று மக்கள் கேட்டபோது, ‘திருடனோ, கொள்ளைக்காரனோ என்னுடைய வீட்டுக்கு வந்தால் இந்தக் கத்தியினால் அவனுடைய வயிற்றைக் கிழித்து விடுவேன்’ என்று பதிலளித்தார்கள்.
தாய், மகனுக்கு ஆற்றிய உரை
அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீர வரலாறு இத்துணை உறுதியான மனநிலையையும் வீர உணர்வையும் ஒரு பெண்மணி பெற்றிட முடியுமா என்ற சிந்தனையிலும் திகைப்பிலும் நம்மை ஆழ்த்திவிடுகின்றது! அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீர மரணத்தின்போது சில நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றைக் கேள்விப்படும் ஒவ்வொருவரின் இதயத்திலும் அன்னை அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றிய மிக உயர்ந்த மரியாதையும் மதிப்பச்சமும் நிறைந்துவிடும் என்பது திண்ணம்! வரலாற்றுத் தொகுப்புகளில் பொன்னெழுத்துக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அந்நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காண்போம்.
வரலாறு சான்று வழங்குகிறது:
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பம் துணிவிலும் வீரத்திலும் தன்னிகரற்றுச் சிறந்து விளங்கும் குடும்பமாகும். புகழுக்குரிய இந்த வீரதீரப் பண்பு அக்குடும்பத்தின் முன்னோர்கள் – உறவினர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் சிறப்பம்சமாகும்.
ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆண் மக்களில் மிகச் சிறந்த வீரராகவும் துணிவுமிக்கவராகவும் விளங்கியவர் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாவர். அன்று ஹிஜ்ரத் சகாப்தத்தின் தொடக்கத்தில் முஹாஜிர்களுடைய எந்தக் குடும்பத்திலும் குழந்தை பிறக்காதிருந்த நிலையில் முதல் குழந்தையாக|
அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் பிறந்து, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புக்குரிய பிரார்த்தனையைப் பெற்றவர் இவர்தான். எவருடைய பெயரைக் கேட்டதும் பனூஉமையாக்களின் கலீஃபாக்கள் அச்ச மேலீட்டால் இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார்களோ அவர் – ஜுபைரின் மகனாராகிய இந்த அப்துல்லாஹ்தான்!
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்