செருப்பும் அதன் சிறப்பும்
மவ்லவீ எம்.ஏ. முஹம்மது இப்ராஹீம் பாகவி
உச்சியிலிருந்து கரண்டைக்காலுக்கு மேல் வரை துணிகளால் தன்னை அலங்கரிக்கும் ஒருவன் கால்களுக்கு மட்டும் சற்று வித்தியாசமானதை செருப்பாக அணிந்து கொள்கிறான். அதை அணிந்தே பழக்கப்பட்டவர்கள் அதை அணியாமல் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள்.
சுத்தத்தையும், சுகாதாரத்தையும் விரும்பும் ஒவ்வொருவரும் அதன் அவசியத்தை உணர்ந்தே இருக்கிறார்கள். அதுவும், கோடைக்கால வெயிலில் அதன் உதவி இல்லாமல் வெளியே செல்லவே முடியாது.
கல், கண்ணாடித்துண்டு, முட்களிலிருந்தும் அறுவருப்பானவைகளில் இருந்தும், நஞ்சுமிக்க விஷப்புச்சிகளிடமிருந்தும் இதன் மூலம் பாதுகாப்பு பெருகிறோம். நிராயுதபாணியாக இருக்கும்போது ஒன்றை அடிக்கும் ஆயுதமாகவும் கூட அது பயன்படுகிறது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருங்கிய தோழர் ஹளரத் இப்னு மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ‘ஸாஹிபுந் நஃலைன்’ – செருப்புக்காரர் என்ற சிறப்புப் பெயர் இருந்து வந்தது. காரணம், நடப்பதற்காக அவர்கள் நின்றால் செருப்பு அணிவதோடு, அமர்ந்தாலும் தன் கரங்களிலே அவற்றைத் தன்னுடனே எப்போதும் வைத்திருப்பார்கள். (நூல்: மிர்காத்)
0 ‘செருப்பு நபிமார்களின் அணிகலன்’ என்பதாக ஹளரத் இப்னுல் அரபி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.
0 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செருப்பிற்கு இரண்டு மேல்வார்கள் இருந்தன என்று அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம்அவர்கள் செருப்பு அணிந்து விபரத்தை திருக்குர்ஆனே குறிப்பிடுகிறது.
சமீபத்தில் ஒரு பத்திரிகை, மருத்துவப் பேராசிரியர் ஒருவரின் பேட்டியை வெளியிட்டிருந்தது. அதில் அவர், ‘வெளியில் செல்லும்போது குடையில்லாமல்கூட செல்லலாம், ஆனால் செருப்பு அணியாமல் செல்லக்கூடாது. பூ வைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் வெளியில் செல்கின்றனர். ஒருத்தி குடை பிடித்துச் செல்கிறாள், செருப்பு அணியவில்லை. மற்றவள் குடை பிடிக்கவில்லை, செருப்பு அணிந்திருக்கிறாள். இவ்விருவரில் செருப்பணியாமல் சென்றவளின் தலையிலுள்ள பூ தான் உடனே வாடும். மேலிருந்து வரும் வெப்பத்தைவிட கீழிருந்து வரும் வெப்பம்தான் உடனே தாக்கும்’ என்றார்.
காலின் கீழுள்ள உஷ்ணம் தலைக்கு மேலும் தாக்கும்போது தலையினுள் இருக்கும் மூலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமலா இருக்கும்? இதனால்தான் ‘40 நாட்களுக்கு மேல் செருப்பணியாமல் செல்பவனின் சாட்சியம் ஏற்கத்தக்கதல்ல’ என நமது அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுவர்.
செருப்பணியும்போதும் நபி வழியில் நாம் நடந்தால் ஒரு சுன்னத்தை கடைப்பிடிக்கும் நன்மையும் நமக்குக் கிடைக்கும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ‘உங்களில் ஒருவர் செருப்பணிந்தால் வலது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும். கழட்டும்போது இடது (காலைக்) கொண்டு ஆரம்பிக்கவும். காலணி அணிவதில் வலது கால் முந்தவும், கழட்டுவதில் பிந்தவும் இருக்கட்டும்’ நூல்: புகாரி, முஸ்லிம்)
செருப்பின் பயன்பாடுகளைப்பற்றி சொல்லும்போது அதன் பாதுகாப்பைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். ஆம்! புது செருப்பு வாங்குகிறவர்களுக்கு அது சற்று பழசாகும் வரை ஏதேனும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டே இருக்கும். காரணம் பள்ளிவாசலில் கூட செருப்புகள் அடிக்கடி காணாமல் போகும்போது மற்ற இடங்களைப்பற்றிச்சொல்ல வேண்டாம். அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியது அவரவர்களின் பொருப்புதானே ஒழிய மற்றவர்களை சந்தேகப்படுவதில் அர்த்தமில்லை.
நன்றி: ”ஜமா அத்துல் உலமா” மாத இதழ்