சுன்னத்தைப் பின்பற்றினால் சுவனம்
ஹாஃபிஸ் A.J. கலீஃபுல்லாஹ், M.S., M.H.
உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றை பற்றிப் பிடியுங்கள். வழி தவற மாட்டீர்கள்.
1. இறை வேதம், 2. எனது வழிமுறை (சுன்னத்) என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள். (நூல்: மிஷ்காத்)
இந்த நபிமொழி திருமறை குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையையும் பின்பற்ற வேண்டிய அவசியத்தை மிகவும் துள்ளியமாகக் கூறிவிட்டது.
எனவே, திருக்குர்ஆனில் கூறப்பட்டவைகளை அமல் செய்வதுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏவல்களையும், போதனைகளையும், செயல்களையும் நம் வாழ்வில் நிலைபெறச் செய்வதும் மிக அவசியமாகவே இருக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தவற்றையும், கூறியவற்றையும் செய்வதற்குப் பெயர்தான் சுன்னத் என்பதாகும். அவர்களின் சுன்னத்துகளைப் பின்பற்றுவதால் மலைபோல் நன்மைகளைக் குவிக்கலாம். சின்னஞ்சிறு சுன்னத்துகளை அமல் செய்தாலே பெரும் நன்மைகளைக்கூட அடைய முடியும். ஏனெனில் யார் ஒரு சுன்னத்துக்கு உயிர் கொடுக்கிறாரோ அவருக்கு நூறு ஷஹீது (இறைவழியில் போரிட்டு மரணமடைந்தோர்)களுடைய அந்தஸ்து கிடைக்கும் என்பது மற்றோர் நபிமொழி.
ஒரு சிறிய சுன்னத்திற்குக் கூட 100 ஷஹீதுகளுடைய நன்மைகளை வழஙகுவதன் மூலம் அல்லாஹ்வின் அளப்பரிய அருளைக் காணமுடிகின்றது.
ஷஹீதுகளுடைய அந்தஸ்து என்பது சாதாரணமானது அல்ல. அவர்களின் ஒரு துளி இரத்தம் பூமியில் விழுமுன் அவர்களின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றது. இது ஒரு ஷஹீதின் அந்தஸ்தாகும். அப்படி எனில் 100 ஷஹீதுடைய அந்தஸ்து என்னவாக இருக்கும் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். அல்லாஹ்வின் அளப்பரிய கொடைத்தன்மை விளங்கும்.
ஷஹீதுகளுக்காக அல்லாஹ் சுவனத்தில் பெரும் பெரும் தரஜாக்களை ஒதுக்கியுள்ளான். சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவைகள் இறைவழியில் தன்னை அர்ப்பணித்தவர்களுக்காக அல்லாஹ் தயார் செய்துள்ளான். ஒவ்வொரு படித்தரத்திற்கும் உள்ள இடைவெளி தூரம், வானம் – பூமிக்கும் மத்தியில் உள்ள தூரம் போன்றதாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுவது பற்றி அல்லாஹ் கூறுகையில், ‘நபியே நீர் கூறுவீராக! ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களளை நேசிப்பான்.’ (அல்குர்ஆன் 3:31) என்று கூறியுள்ளான்.சுன்னத்தைப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் நேசமும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசமும் ஒருசேரக் கிடைப்பது ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ போன்றாகும்.
அதே சமயம் இன்றைய கால கட்டத்தில் நாம் எப்படி வாழ்கின்றோம். கட்டாயக்கடமையான ஃபர்ளைக்கூட நிறைவேற்றுவதற்கு முயற்சிக்காதவர்களாக காலம் தள்ளக் கூடியவர்கள்தான் எவ்வளவு பேர்? சுன்னத்துக்கே இவ்வளவு நன்மைகளை அல்லாஹுத்தஆலா வாரி வழங்க காத்திருக்கிறான் எனும்போழுது ஃபர்ளான அமல்களுக்கு கிடைக்கும் வெகுமதியைப்பற்றி சொல்லவும் வேண்டுமோ!