கருத்து வேற்றுமை காலத்தின் கட்டாயமாவது எப்போது?
மவ்லவி கணியூர் நாஜி ஃபாஜில் பாகவி
ஒற்றமை தீனுக்குப் பயன்படும் எனில் அது வரவேற்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரித்தாகும். ஒற்றுமை தீனுக்கு விரோதமாகவும், வேற்றுமை தீனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்தால் அந்த வேற்றுமையே புகழுக்குரியதாகும்.
ஒற்றுமையம் வேற்றுமையும்
கருத்து வேற்றுமை, ஒற்றுமையின்மை தவறு என்பது அது தீனுக்கு தீங்கிழைக்கும் என்றால்தான். அந்த வேற்றுமையே தீனுக்கு நன்மை பயக்கும் என்றிருந்தால், அது இம்மைக்கு தீங்கிழைத்தாலும் தவறல்ல, கண்டிக்கத்தக்கதும் அல்ல.
ஏனெனில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் தம் கால மக்களுக்கு எதிராக ஒத்துழையாமையையும், வேற்றுமையையும் காட்டினார்கள். ‘இப்ராஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கும் ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கிறது.
அவர் தம் மக்களை நோக்கி, ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்கும் இடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினார்’ என அல்லாஹ் கூறுகிறான்.
இந்த வேற்றுமை விரோதத்தை தவறானது என்று கூறமுடியுமா? அதே நேரத்தில் இன்னொரு ஒற்றுமையைப் பற்றியும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குறையாகக் குறிப்பிடுகிறார்கள்.
‘நீங்கள் அல்லாஹ்வையன்றி விக்ரகங்களைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் உள்ள சினேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர் மறுமை நாளிலோ உங்களில் சிலர் சிலரை நிராகரித்து விட்டு உங்களில் சிலரைச் சபிப்பார்கள். முடிவில் நீங்கள் தங்குமிடம் நெருப்புத்தான்.’
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிரான கூட்டத்தினரிடத்தில் பரிபூரண ஒற்றுமை இருந்தது. இந்த ஒற்றுமை பாராட்டுக்குரியதா? நிச்சயம் இல்லை என்பதைத்தான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குறிப்பிடுகிறார்கள். காரணம், அந்த ஒற்றுமை, உண்மைக்கும் சத்தியத்திற்கும் எதிரானது.
எனவே, ஒற்றமை தீனுக்குப் பயன்படும் எனில் அது வரவேற்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரித்தாகும். ஒற்றுமை தீனுக்கு விரோதமாகவும், வேற்றுமை தீனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்தால் அந்த வேற்றுமையே புகழுக்குரியதாகும்.
நன்றி: ”ஜமா அத்துல் உலமா” மாத இதழ்