[ இரண்டு கொடூரங்களும் பெண்ணுலகத்தின் மீது இழைக்கப்பட்ட பெரும் காயங்களாகவே அறிய முடிகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்.
கனவும், ஆசையும் ததும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்குள் கழுத்தறுபட்டு கொலை செய்யப்படுகிறாள் ஒரு பெண். எவனோ ஒருவனுக்காக தன் குடும்பத்தையே சாகக்கொடுத்தவள் எனும் விஷம் தொண்டையடைக்க இனி வாழ்க்கை முழுவதும் சாக வேண்டும் இன்னொரு பெண்.
காதலை உடல்ரீதியாக பார்க்கும் சமூக மனோபாவமே இக்கொடூரங்களுக்கு காரணமாகிறது. தான் விரும்பிய பெண்ணுடல் அல்லது தாங்கள் வளர்த்த மகளின் உடல் மீது ஏற்படும் கறைகளாகவே அப்பெண்களின் எதிர்காலம் பார்க்கப்பட்டிருக்கிறது.
பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்.]
பலவித மரணங்களைச் சுமந்தபடி தினசரிகள் நம் வீடுகளுக்குள் வந்து விழுகின்றன. தொடர்ந்து அவைகளை வாசிக்க நேர்ந்து, டீயைக் குடித்தபடி அடுத்த பக்கத்தைத் திருப்புகிறோம். அருகில் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அதுகுறித்து சில தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். எங்கோ, யாருக்கோ நேர்ந்த துயரங்கள் நம்மை அழுத்துவதில்லை. ஒவ்வொரு மரணத்திலிருந்தும் எழும் அழுகைகள் நம்மை எளிதில் தீண்டுவதில்லை. ஆகப்பெரும் ஜனசமுத்திரத்தில் இதுவே துயரங்களின் விதியாக இருக்கிறது.
இந்தப் பத்திரிகைகளும் மரணங்களை வியாபாரமாக்கும் முயற்சியில், மரணங்களிலிருக்கிற ஜீவனைக் கொன்று விடுகின்றன. பெரும்பாலான மரணங்களின் தலைப்புச் செய்திகளில் ‘காதலோ’, ‘கள்ளக்காதலோ’ இடம்பெறுகின்றன. அந்த சோக நிகழ்வுகளை உள்வாங்குவதிலும், அசை போடுவதிலும் ஒருவிதமான சுவாரசியம் ஏற்படுகிறது. சமூகம் குறித்த கவலையோ, கருத்தோ இன்றி ஒரு துப்பறியும் கதையின் விறுவிறுப்பில் மனிதர்கள் மாய்ந்து போகின்றனர். நேற்றைய செய்தியின் எந்த தாக்கமும் இன்றி ஒரு புதிய மரணத்தை நாளை அவர்கள் வாசித்துக்கொண்டு இருப்பார்கள்.
அப்படித் தாண்டிவிட முடியாமல் சில மரணச்செய்திகள் நினைவோட்டங்களின் கூடவே வந்து அவஸ்தை தருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் திருமணமான ஒரு பெண்ணை, திருமணத்திற்கு முன்பே விரும்பிய இளைஞன் ஒருவன் கொன்றதும், நேற்று பழனியில் ஒரு பெண் தான் காதலித்தவனோடு வாழச் சென்றதைத் தாங்க முடியாமல் அந்தக் குடும்பத்தில் உள்ள தாய், தந்தை, சகோதரன், சகோதரி என நான்கு பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும் சமூகத்தின் முக்கியமான நோய்களை அடையாளம் காட்டுவதாய் இருக்கின்றன.
முந்தையது, ‘இன்னொருவனுடன் தான் விரும்பியவளை நினைத்துப் பார்க்க முடியாத’ வெறிகொண்ட மனநிலை என்றால் பிந்தையது, “தங்கள் குடும்ப கௌரவம், மானம் எல்லாம் அவளால் பறிபோய் விட்டதே” என்னும் விரக்தியின் உச்சநிலை. இங்கே கொலை செய்தவனும், தற்கொலை செய்தவர்களும் ‘வாழ்வில் மீளவே முடியாத தோல்வியை’ தாங்கள் சந்தித்து விட்டதாக முடிவுக்கு வந்திருக்கின்றனர். இவர்கள் மீதெல்லாம் பரிதாபப்படுவதற்கு என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை.
இரண்டு கொடூரங்களும் பெண்ணுலகத்தின் மீது இழைக்கப்பட்ட பெரும் காயங்களாகவே அறிய முடிகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர். கனவும், ஆசையும் ததும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்குள் கழுத்தறுபட்டு கொலை செய்யப்படுகிறாள் ஒரு பெண். எவனோ ஒருவனுக்காக தன் குடும்பத்தையே சாகக்கொடுத்தவள் எனும் விஷம் தொண்டையடைக்க இனி வாழ்க்கை முழுவதும் சாக வேண்டும் இன்னொரு பெண்.
காதலை உடல்ரீதியாக பார்க்கும் சமூக மனோபாவமே இக்கொடூரங்களுக்கு காரணமாகிறது. தான் விரும்பிய பெண்ணுடல் அல்லது தாங்கள் வளர்த்த மகளின் உடல் மீது ஏற்படும் கறைகளாகவே அப்பெண்களின் எதிர்காலம் பார்க்கப்பட்டிருக்கிறது.
பெண் என்பவள் தசையினால் மட்டும் ஆனவள் அல்ல. அன்பு, பரிவு, சினேகம், ஆதரவு என்னும் அற்புதங்களால் ஆனவள் என்பதை அறியாத வரை இந்த மரணச்செய்திகளை நாம் வாசித்துத் தொலைக்க வேண்டியதுதான் போலும்.
source: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_26.html