ஃபாத்திமா
ஹிஜாபின் பயன்கள்
பெண்கள் மேற்குறிப்பிட்ட ஷரீஆ வரையறைகளைப் பேணி உடையணிவதனால் அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் அடையும் நன்மைகளும் பயன்களும் அளப்பரியன. உண்மையில் பெண்களுக்கு இஸ்லாம் வரையறை செய்துள்ள ‘ஹிஜாப் உடை அவர்களுக்கு ஒரு கௌரவமாகும். அது அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது.
ஒரு பெண்ணின் கற்பொழுக்கத் திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் அவள் அணியும் ஹிஜாப் உடை சான்றாக விளங்குகிறது. இதனால் அவளை காண்போர் அவளை மதிக்கிறார்கள்;. கௌரவிக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடன் அவளை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹிஜாப் உடை பெண்ணின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் அழகாகச் சொல்கிறது.
“நபியே! உங்களது மனைவிகள், உங்களது புதல்விகள் மற்றும் முஃமின்களின் மனைவியர் ஆகியோரிடம் கூறுவீராக! அவர்கள் தங்கள் முந்தானைகளை தம்மீது போட்டுக் கொள்ளட்டும். இது அவர்களை அறியப்படுத்துவதற்கும் அவர்கள் தொல்லைகளுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்ற முறையாகும்.” (அஹ்ஸாப் :59)
இந்த வசனத்தில் ‘அவர்கள் அறியப்படுவதற்கு’ அவர்களின் ‘ஜில்பாப்’ எனும் முந்தானை உதவும் என்பதன் பொருள் இந்த அடக்கமான உடை, அந்தப் பெண் ஒரு கௌரவமான, கற்புடைய, அடக்கமும், நாணமும் உடைய தூய்மையான ஒரு பெண் என்பதை பிறர் அறிய உதவும் என்பதாகும். ஒரு பெண் ஹிஜாபை பேணாத போது எவ்வாறு பாதுகாப்பை இழக்கிறாள் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:
‘எவரேனும் ஒரு பெண் தனது கணவனது வீடல்லாத மற்ற இடங்களில் தனது ஆடைகளை களைவாளாயின் அவள் தனக்கும் அல்லாஹ்வுக் குமிடையே உள்ள தனக்கான பாதுகாப்பை –மறைப்பை– தகர்த்துக்கொள்கிறாள்.’
இந்த ஹதீஸின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவரும் கருத்து யாதெனில், ஒரு பெண் தனது ஆடைகளைக் களைவதன் மூலம் தனக்கிருந்த பாதுகாப்பை நீக்கி அந்நியருக்கு தனது அழகை காட்டும் போது அவள் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருந்து நீங்கிக் கொள்கிறாள் என்பதாகும்.
மேலும் பெண்கள் ஹிஜாப் உடையை ஷரீஆ வரையறைகளைப் பேணி முறையாக அனுஷ்டிக்கின்ற போது சமூக உறுப்பினர்களும் சூழலும் தூய்மை பெற வழிபிறக்கிறது. ஹிஜாப் பார்வைக்கு திரையிடுகிறது. தீய எண்ணங்கள் ஏற்படாமல் இருக்க வழியமைக்கிறது. பித்னா விளைவதை தடுக்க துணைபுரிகின்றது. இதனால் உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. அத்துடன் ஹிஜாப் நோயுற்ற உள்ளங்களுக்கு வேலியாகவும் அமைகின்றது. காலக்கிரமத்தில் அத்தகைய உள்ளங்களும் கூட திருந்தி தூய்மை அடைய இது வழிவகுக்கிறது.
“(நபியின் மனைவியான) அவர்களிடம் நீங்கள் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னால் இருந்து கேளுங்கள். உங்களதும், அவர்களதும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே மிகவும் ஏற்ற முறையாகும்.”(அஹ்ஸாப்: 53)
இஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது.
‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)
‘வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது’ என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)
‘வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணை ந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்’ என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள்: ‘ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.’ (இப்னு அஸாகிர்)
அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.
உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.
‘அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.’ (அபூதாவுத்)
இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
அனைத்திற்கும் மேலாக ஹிஜாப் ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாக விளங்குகிறது. அல்லாஹ் அல்குர்ஆனில் ஈமான் கொண்ட பெண்களை விளித்துத்தான் ஹிஜாபை அணியுமாறு பணிக்கிறான். ஈமானின் பெயராலேயே இது பற்றிய கட்டளைகள் வந்துள்ளன. “நபியே! முஃமினான பெண்களைப் பார்த்துக் கூறுங்கள்” முஃமின்களின் மனைவியர் என்றே ஹிஜாப் பற்றிய வசனங்கள் அமைந்துள்ளன.
பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் ஒரு முறை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தார்கள். இதை அவதானித்த ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அவர்களைப் பார்த்து பின்வருமாறு கூறினார்கள்:
‘உண்மையில் நீங்கள் முஃமினான பெண்களாயின் அணிந்திருக்கும் இந்த ஆடைகள் ஈமான் கொண்டவர்களுக்குரிய ஆடைகள் அல்ல. நீங்கள் ஈமான் கொள்ளாத பெண்களாயின் இதனை அணியுங்கள்.’
‘ஹிஜாப்’ என்பது பெண்கள் தமது ‘அவ்ரத்’தையும், அழகையும், உடலின் கவர்ச்சியான பகுதிகளையும் மூடிமறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் தந்துள்ள உடை அமைப்பாகும். இதற்கெதிரானது ‘தபர்ருஜ்’ எனும் வட்டத்தில் அடங்கும்
‘சிலவேளை ஒரு பெண் மற்றவரின் கவனத்தை ஈர்க்கும் எண்ணத்துடன் தலையை மூடும் துணியை பளிச்சிடும் பல வண்ண நிறத்தில் கவர்ச்சிகரமாக அணிந்தால் அதுவும் ‘தபர்ருஜ்’ எனும் தடை செய்யப்பட்ட கவர்ச்சிகாட்டலாகும்;’ என மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது அல்ஹிஜாப் எனும் நூலில் விளக்குகிறார்கள்.
ஹிஜாபிற்கு எதிரான ‘தபர்ருஜ்’ ஐத் தடைசெய்யும் அல்குர்ஆன் வசனம் பின்வருமாறு கூறுகிறது:
“மேலும் உங்களுடைய வீடுகளில் தங்கியிருங்கள். முன்னைய ஜாஹிலிய்யாக் காலங்களில் (பெண்கள்) வெளிப்படுத்தியது போன்று வெளிப்படுத்தாதீர்கள்.”(அஹ்ஸாப்: 33)
உமையா பின்த் ருகையா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்:
‘நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல ‘தபர்ருஜ்’ எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.’ (அஹ்மத்)
இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் ‘தபர்ருஜ்’யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.