துன்பமும் அல்லாஹ்வின் அருள்தான்
மவ்லவீ, காரி அப்துல் பாரி பாகவி, வேலூர்
ஹஜ்ரத் அஷ்ரஃப் அலீ தானவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஹஜ்ரத் இம்தாதுல்லாஹ் சாகிப் சம்மந்தமாக ஒரு நிகழ்ச்சி;
ஒரு இடத்தில் ஹஜ்ரத் இம்தாதுல்லாஹ் சாகிப் பேசும்போது குறிப்பிட்டார்: ‘உலகில் துன்பம் துயரம் என்பது ஒன்றுமில்லை. அனைத்தும் அல்லாஹ்வின் அருள்தான். நல்லவைதான். தெளிவாக சொல்வதானால் துன்பமே ஒரு அருள்தான். நல்லதுதான். ஏனென்றால் அதனால் மனிதனுக்கு நன்மை கிடைக்கிறது.
துன்பத்துக்கு ஆளாகும் மனிதன் உயர்வடைவான். அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை துன்பமாக எண்ணக்கூடாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து உண்டாகும் துன்பம் உண்மையில் துன்பம் அல்ல. அது அவனுடைய அருளேயாகும். ஆனால் அறியாமையின் காரணமாக மனிதன் அதை ‘முஸீபத்’ துன்பமாக கருதுகிறான்’
ஹஜ்ரத் இம்தாதுல்லாஹ் சாகிப் இந்த கருத்தை வலியுறுத்தி விளக்கி ஆணித்தரமாகப் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்தார். வரும்பேதே ”ஹா…ஹு…”என்று வேதனை மூச்சு விட்டுக்கொண்டே வந்தவர், ‘ஹஜ்ரத், என் விலா பக்கத்தில் ஒரு பெரிய கட்டி தோன்றியிருக்கிறது. தாங்க முடியாத வலி, ரொம்பவும் வேதனையாக இருக்கிறது. ஒரு வாரமாகி விட்டது. துஆ செய்யுங்கள்’ என்றார்.
ஹஜ்ரத் அஷ்ரஃப் அலீ தானவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அப்போது தமக்கு ஏற்பட்ட எண்ணத்தை கூறுகிறார்: ‘நான் சிந்தனை வசப்பட்டேன். துன்பம் உண்மையில் துன்பமல்ல, அது இறைவன் அளித்த அருள், இன்பம் என்று பேசிக்கொண்டிருந்த இம்தாதுல்லாஹ் சாகிப் என்ன செய்வார்? துன்பத்தை அதிகப்படுத்து என்பாரா? அதில் கருணை இருக்க முடியாதே! துன்பத்தை அகற்ற வேண்டுவாரா? அப்படிச் செய்தால் ‘கொடுத்த அருளை நீயே எடுத்துக்கொள் இறைவா!’ என்றல்வா ஆகும்! அருளை அகற்றக் கோரும் ‘துஆ’ உண்மையில் எப்படி ‘துஆ’வாக முடியும்?’
ஹஜ்ரத் இம்தாதுல்லாஹ் சாகிப் சற்று திகைத்துத்தான் போனார். அவர் இந்த சங்கடத்தை புரிந்து கொண்டார் என்று எனக்கும் தெரிந்தது. திடீரென்று ‘துஆ’ செய்வதற்கு கைகளை உயர்த்தி விட்டார். அந்த ‘துஆ’ என் மனதில் எழுந்த ஐயத்திற்குப் பதிலாகவும், துன்பப்பட்டவரின் துன்பம் தீருவதற்கு மருந்தாகவும் அமைந்தது.
ஹஜ்ரத் இம்தாதுல்லாஹ் சாகிப் செய்த பிரார்த்தனை இதுதான்: ‘யா அல்லாஹ்! இது உன்னுடைய அருள் இம்மனிதருக்கு உடலில் உண்டான கொடும் துன்பத்தை அளிக்கும் இக்கட்டி பெரிய அருள்தான். ஆனால், யா அல்லாஹ்! இந்த மனிதர் மிகவும் பலகீனமானவர். நீ கொடுத்த அந்த அருளை அவரால் தாங்கிக் கொள்ள, சகித்துக்கொள்ள முடியவில்லை. துடிக்கிறார். ஆகவே, வியாதி என்ற அருளை விட்டும் அகற்றி சுகம் என்ற வேறொரு அருளை அவருக்கு கொடுத்துவிடு.அவரால் அதைத்தான் ஏற்க முடியும்.’
ஹஜ்ரத் அஷ்ரஃப் அலீ தானவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்: ‘நான் வியப்புடன் இம்தாதுல்லாஹ் சாகிப் அவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர் கருத்தில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. துன்பத்தை அருள்தான் என்று உறுதிப்படுத்தி விட்டதுடன் அதை அகற்றும்படியும் ‘துஆ’ செய்து விட்டார்.
உண்மையில் துன்பம் எதுவும் துன்பமில்லை. அதுவும் அல்லாஹ்வின் அருளே. வித்தியாசம் என்னவென்றால் சில அருள்கள் உள்ளும் புறமும் அருளாகவே இருக்கும். சில வெளித்தோற்றத்தில் துன்பமாகவும், அந்தரங்கத்தில் அருளாகவும் இருக்கும். எல்லாமே படைத்த ரப்புல ஆலமீனின் அருள்மயம்தான்.
நன்றி: ‘ஜமாஅத்துல் உலமா’ மாத இதழ், ஜுலை 2000.