[ ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள், கற்பழிப்பாளர்கள், ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும் இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது –அருந்ததி ராய்.]
புதுடெல்லி: தில்லியில் அண்மையில் கருத்தரங்கம் ஒன்றில் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்றுப் பேசினர்.
இதில் காஷ்மீர் இந்தியாவின் ஐக்கிய பகுதியல்ல என்று அருந்ததி ராய் கருத்து தெரிவித்திருந்தார். இவர் மீதுவழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸப்ருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை அறிக்கை விடுத்துள்ள அருந்ததி ராய், இந்தியா பிளவடைய வேண்டும் என்று நான் விரும்புவதாக சிலர் என்னை செய்தித்தாள்களில் விமர்சித்துள்ளனர். இதுபோன்றவர்களின் கருத்தும், விமர்சனமும் முரண்பாடானது. தில்லி கருத்தரங்கில் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், கருத்தையும் சரியாகக் கவனித்தால் நான் என்ன சொன்னேன் என்பது தெளிவாகும். நீதிக்காகப் பேசியது புலப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:
இந்த அறிக்கையை ஸ்ரீநகர், காஷ்மீரிலிருந்து வெளியிடுகிறேன். இன்றுகாலை செய்தித்தாள்கள் அனைத்திலும், பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீர் குறித்து நான் சமீபத்தில் பேசிய பேச்சை விமர்சித்துள்ளன.
ஆனால் காஷ்மீர் மக்கள் தினசரி சொல்லி வருவதைத்தான் நான் அன்று பேசினேன். சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள் காஷ்மீரிகள். அதைத்தான் நான் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கடந்த பல ஆண்டுகளாக பலரும் பேசியதை, எழுதியதைத்தான் நான் சொன்னேன்.
நீதி மறுக்கப்படுபவர்களுக்கு அதை வழங்குங்கள் என்றுதான் நான் எனது பேச்சுக்களில் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றுதான் நான் சொன்னேன்.
எனது பேச்சுக்களை சரிவரப் புரிந்து கொண்டு படித்துப் பார்த்தால், அதில் நீதி வழங்குங்கள் என்ற கோரிக்கை புதைந்திருப்பதை உணர முடியும். காஷ்மீர் மக்களுக்கு நான் நீதிதான் கேட்கிறேன். உலகின் மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி தேவை என்றுதான் நான் கேட்டேன்.
தங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட, விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.
காஷ்மீரில் தங்களது உயிரை நீத்து, கடலூரில் ஏதோ ஒரு மூலையில் குப்பைகளுக்கு மத்தியில் சமாதியாகக் கிடக்கும் தலித் வீரர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.
காஷ்மீரில் நடந்து வரும் இந்த தேவையற்ற போருக்கான செலவுகளை அப்பாவி மக்களின் தலை மீது சுமத்துகிறீர்களே, அந்த அப்பாவி இந்தியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.
நான் நேற்று ஆப்பிள் நகரான சோபியானுக்குச் சென்றிருந்தேன். ஆசியா, நிலோபர் என்ற இரு பெண்களின் கொடூரக் கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு 47 நாட்கள் அந்த நகரம் மூடிக் கிடந்தது. அந்த இரு பெண்களின் மரணத்திற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.
நிலோஃபரின் கணவரும், ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன். கோபமும், விரக்தியும், வேதனையும் கொப்பளிக்கும் முகங்களுடன் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் நான் ஷகீலுடன் பேசினேன். அவர்களுக்கெல்லாம் இப்போது உள்ள ஒரே கோரிக்கை இந்திய அரசிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. அப்போதுதான் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள்.
கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்தேன். ஒரு இளைஞனுடன் நான் பயணித்தபோது, தாங்கள் எப்படியெல்லாம் பாதுகாப்புப் படையினரால் தண்டிக்கப்பட்டோம் என்பதை அந்த இளைஞன் விவரித்தான். தனது நண்பர்கள் 3 பேரையும் பிடித்த பாதுகாப்புப் படையினர் கை விரல்களில் இருந்த நகங்களை பிடுங்கி பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தண்டித்ததாக கூறினான்.
நான் திங்கள்கிழமை ஸ்ரீநகரில் பேசியதும், பின்னர் டெல்லியில் நான் பேசியதும், எனது கருத்து அல்ல, எனது குரல் அல்ல. மாறாக காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன். அவர்கள் தினசரி அதைத்தான் கூறி வருகிறார்கள், கோரி வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக நான் அவதூறாகவே பேசி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்தியா உடைய வேண்டும் என நான் விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால் நான் சொல்ல வருவது வேறு. மக்கள் கொல்லப்படக் கூடாது, கற்பழிக்கப்படக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது, விரல்களிலிருந்து நகங்களை பிடுங்கிப் போடும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடக் கூடாது என்பது மட்டுமே எனது ஒரே வலியுறுத்தல். அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை. காரணம், இப்படி தண்டிக்கப்படும் இவர்கள் அனைவரும் நம்மைப் போல இந்தியர்கள்தான்.
இப்போது எனது குரலை ஒடுக்க அரசு முயலுகிறது. தங்களது மனதிலிருந்து வரும் கருத்துக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் வெளியிட்டால் அதை அடக்க முயல்வது கோழைத்தனம். நீதி கேட்டுகுரல் கொடுத்தால் சிறை என்பது மிகவும் அவமானகரமானது.
ஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள், கற்பழிப்பாளர்கள், ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும் இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்.
தேசத்துரோகம் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்படும் அவர் பேசிய பேச்சுதான் என்ன?
இதுதான்; ”ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது” -அருந்ததி ராய்!
அருந்ததிராயைப் பற்றி:
1997- ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, லண்டனிலுள்ள கில்டுஹாலில், அறிவாளிகள் நிறைந்த மகா சபையில் இந்தியப் பெண்மணி அருந்ததி ராய் சாதனை புரிந்தார். சிறியது அழகானது மட்டுமல்ல, ஆனால் பெரியது, பெருமை மிக்கது மற்றும் கம்பீரமானது என்று நிரூபித்தார்.
தனது “The god of small things” என்ற நாவலுக்காக, பெருமைமிகு பரிசாக புக்கர்விருது வாங்கும்போது அவருக்கு வயது 27. புக்கரின் பழைய சரித்திரப்படி அதுவரை அந்த விருது பெற்றவர்களிலேயே அருந்ததிதான் இளையவர். அறிமுக நாவலுக்காக, பெருமைமிகு இலக்கியப் பரிசு பெற்றவர்களில் முதல் பெண். இந்த கௌரவம் மற்றும் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
இந்திய தொடர்புடையவர்களான சிலர் ஏற்கனவே புக்கர் விருது பெற்றிருக்கிறார்கள். ஆனால் அருந்ததி புக்கர் விருது பெற்ற மற்றவர்களிடமிருந்து முழுவதும் வித்தியாசப்படுகிறார். இந்த விருதை வென்ற முதல் முழுமையான இந்திய எழுத்தாளர் என்பதுதான் அது.
மற்ற விருது பெற்ற குழுவினரைப் போல அருந்ததி ராய் வெளி நாட்டில் வாழ்ந்தவரும் அல்லர், வெளிநாட்டில் படித்தவரும் அல்லர். இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி பெற்றவர். இந்தியாவில் வேலை செய்து, எழுதியவர். அவரது நாவல் அத்தியாவசியமான இந்தியனைச் சேர்ந்தது, அதே போலவே அவரது எழுதும் பாணியும்.
அருந்ததி ராய், வங்காள இந்துத் தந்தைக்கும், கேரள கிறிஸ்தவ தாய்க்கும் மகளாக, 1962 ஆம் ஆண்டு பிறந்தார். தன் நாட்டின் வித்தியாசப்படுகிற கலாச்சார ஓடைகளின் சங்கமங்களில் உருச்சேர்ந்தவர். வாழ்க்கையின் மங்கிய மற்றும் பிரகாசமான பக்கங்களை பார்த்தவர்.