54. நாஸ்திகர்களின் நல்லெண்ணம்!
நாஸ்திகர்களுக்கு நாஸ்திக எண்ணம் ஏற்பட அடிப்படைக் காரணமே மனித சமுதாயத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றேயாகும். மனித சமுதாயத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள் அகன்று சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமைய வேண்டும். ஏழைகளின் இன்னல்கள் தீர்ந்த அவர்கள் இவ்வுலகில் சுபிட்சமாக வாழ வேண்டும். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் நிலை மாற வேண்டும். அதற்கு இடையூறாக மதங்களின் பெயரால் மக்கள் அனுஷ்டித்து வரும் நம்பிக்கைகளும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன.
கடவுளின் பெயராலேயே மதங்கள் அனைத்தும் அமைக்கப்படுள்ளன. எனவே கடவுளே இல்லை என்று நிலைநாட்டி விட்டால் மதங்கள் அனைத்தையும் ஒழித்துவிடலாம் என்பது அவர்களின் எண்ணமாகும். சமுதாய மேம்பாடு குறித்து அவர்களின் நல்லெண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. மனித சமுதாயத்தின் மீது அவர்களுக்குள்ள அக்கறையை நாம் மறுக்க முடியாது, மனித சமுதாயம் உய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கமே அவர்களின் இலட்சியம் என்பதிலும் ஐயமில்லை.
அதன் காரணமாகத்தான் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் எளிதாக நாஸ்திக வாதத்தால் கவரப்படுகிறார்கள். முறையான சிந்தனையற்றவர்கள் மட்டுமே மதங்களின் பெயரால் முன்னோர்களான மனிதர்களினால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளிலும், மூடச்சடங்குகளிலும் மூழ்குகின்றனர். இது வேதனைக்குரிய விஷயமே.
அதே சமயம் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாஸ்திகர்கள் தங்களின் சிந்தனா சக்தியை முறைப் படுத்துவார்களேயானால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மதங்களுக்கும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள முடியும்.
55. உலகிற்கு வழிகாட்ட முஸ்லிம்கள் முன் வரவேண்டும்.
நாஸ்திகர்கின் போக்கில் மாற்றம் ஏற்பட முஸ்லிம்களும் உண்மை முஸ்லிம்களாக வாழ முற்படவேண்டும். உலக மக்களுக்கு முஸ்லிம்கள் ஓர் அழகிய முன் மாதிரியாகத் திகழ வேண்டும். மாற்று மதத்தார்கள் தங்களின் முன்னோர்களின் பெயரால் நடைமுறைப் படுத்தும் மூட நம்பிக்ககைளைப் போல்-மூடச் சடங்குகளைப் போல் இவர்களும் விட்டு விடவேண்டும்.
முன்னைய நபிமார்களின் நேர்வழி மனிதக் கரங்களால் கறைபட்டு பல மதங்களாக மாறியது போல் முழுமை பெற்ற இஸ்லாமிய நெறியும் மனிதக் கரங்களால் கறைபட்டு மதமாக பரிணாமித்துள்ளது என்பதை உணர்ந்து திருந்த முன்வர வேண்டும். முன்னோர்களைக் கண்மூடிப் பின் பற்றாமல்-தக்லீது செய்யாமல் குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்பட முன் வர வேண்டும்.
நாஸ்திக நண்பர்களின் சிந்தனைக்கு சில குர்ஆன் வசனங்கள்:
(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக் ”கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா? 28:71
இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! 28:73
கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையளிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். 16:5
அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. 16:6
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன – நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். 16:7
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். 16:8
இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். 16:9
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. 16:10
அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. 16:11
இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. 16:12
இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. 16:13
நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். 16:14
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). 16:15
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். 16:16
இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும். 30:46
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா ஒன்று மிகவும் இனிமையாக, (தாமந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் – இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! 35:12
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். 16:89
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். 2:257
جَزَاكَ اللَّهُ خَيْرًا , மூல ஆசிரியர் : அபூஅப்தில்லாஹ்,
தமிழ் அச்சு : இக்பால் மஸ்தான்
[ இத்தொடர் கட்டுரை நிறைவடைந்தது ]