முஸ்லீமாக மாறினார் டோனி பிளேயரின் மைத்துனி
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள ஃபாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.
தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார்.
குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ( புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களெல்லாம் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதற்காக குர் ஆனை ஓதுவதற்கும். விளங்குவதற்கும் முயற்சிக்கும்போது முஸ்லீம்களாக பிறந்திருக்கும் நம்மில் பலர் அந்த முயற்சி சிறிதும் இன்றி காலம் கழிப்பது சரிதானா?)
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா? என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும்? என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றவர், ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.
சமீபத்தில் பூத், ”மார்னிங் ஸ்டார்” என்ற நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதில், ”பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர்?” என்று காட்டமாக கேட்டிருந்தார்.
– ஜோதி
source: http://www.inneram.com/2010102411414/lauren-booth-converts-to-islam