நீதிபதிகளுக்கு முன்னுதாரணம்; ஹளரத் ஷுரைஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி
( கட்டுரையின் இறுதி பாராவை தவறாமல் படிக்கவும் )
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே பிறந்திருந்தாலும் ஏமன் நாட்டில் வாழ்ந்து வந்த இவரின் குடும்பத்தார்கள் மிகவும் தாமதமாக இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் இவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சந்திப்பை பெறவில்லை. எனவே இவர் ஸஹாபியாக முடியவில்லை. ஆயினும் இஸ்லாத்தை ஆழமாக நேசித்த இவரின் உள்ளத்தில் மார்க்க ஞானம் பொங்கி வழிந்ததால் மிகச்சிறந்த நீதிபதியாக, நீதிபதிகளுக்கே முன்னுதாரணமாக விளங்கினார்.
இஸ்லாமிய உலகின் தலைசிறந்த ஜனாதிபதியான அமீருல் முஃமினீன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே துணிச்சலுடன் நிதி வழங்கிய நீதிமான் ஆவார் இவர். கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருவரிடம் குதிரை ஒன்று விலைபேசி வாங்கினார்கள்.
மகிழ்ச்சியுடன் குதிரையில் பயணம் செய்த அவர்கள், சில நிமிடங்களிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அந்தக் குதிரை ஓடத்துவங்கிய சற்று நேரத்தில் ஒரு பள்ளத்தில் விழுந்து காலை முறித்துக் கொண்டது. குதிரையை பணம் கொடுத்து வாங்கிய உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இந்தக் குதிரை சரிப்பட்டு வராது என்று நேராக வாங்கிய நபரிடமே வந்து அந்த குதிரையை ‘வேண்டாம்’ என்று கூறி பணத்தை திரும்பக் கேட்டார்கள்.
ஆனால், அந்த நபரோ, குதிரையத் திரும்பப் பெறவோ, பணத்தைத் திருப்பித் தரவோ முடியாது என்று மறுத்துவிட்டார். (நினைவில் கொள்ளுங்கள்: குதிரையை வாங்கியது ஒரு மாபெரும் கலீஃபா, விற்றவரோ சாதாரண குடிமகன்)
நஷ்டத்துக்கு ஆளான கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘அப்படியானால் நம் பிரச்சனையை ஒரு நடுவரிடம் போய்ச் சொல்லித் தீர்த்துக் கொள்வோம் வா’ என்றார்கள். ‘ரொம்ப நல்லது. வாருங்கள் ஷுரைஹிடம்’ என்று அவர் சொல்ல, ‘யார் அந்த ஷுரைஹ்?’ என்று ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, ‘அவர்தான் பொதுமக்களின் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடியவர். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், யாருக்கும் அஞ்சாமல் தமக்கு சரி என்று பட்டதைத் தயக்கமின்றிச் சொல்லக் கூடியவர்’ என்று சொல்லி அவரிடமே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்துச் சென்றார்.
இருவரும் தத்தம் வாதங்களை கூறி முடித்ததும் ஷுரைஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார், ‘அமீருல் முஃமினீன் அவர்களே! குதிரையைப் பார்த்துத் தான் விலை பேசினீர்கள். நல்ல நிலையில் தான் அப்போது அது இருந்தது. குதிரை உங்கள் உடமையாக மாறிய பிறகுதான் கால் ஒடிந்திருக்கிறது. இதற்கு அவர் எப்படி பொருப்பாக முடியும்? எனவே குதிரையைத் திருப்பிக் கொடுக்க நீங்கள் விரும்பினால், அவரிடமிரு;து எப்படி வாங்கினீர்களோ அப்படி – எந்த குறையும் இல்லாத நிலையில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அல்லது நீங்களே ஊனமாக்கிவிட்ட இக்குதிரையை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள், இதுதான் தீர்ப்பு’ என்றார்.
தான் நாட்டுக்கே அதிபராக இருந்தாலும் தனக்கே எதிராகத் தீர்ப்புச் சொன்ன அம்மாமனிதரை ஏறிட்டுப் பார்த்த கலீஃபா அவர்களின் வாயிலிருந்து ஆணை பிறந்தது, ‘உங்களை கூஃபா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கின்றேன்.’
அன்று துவங்கிய அவரின் அதிகாரப்புர்வமான நீதிப்பணி எழுபது வருடங்கள் வரை நீடித்தது. இடையில் எத்தனையோ பேர் அதிபராகவும், ஆளுநராகவும் மாறி மாறி வந்த போதும் இவரது பதவிக்கு எந்த இடையூரும் வரவில்லை. 37 வயதில் துவங்கிய அப்பணியில், தனது 108 வது வயதில் இவ்வுலகை விட்டும் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு வரையில் 107 வயது வரை இஸ்லாமிய சாம்ராஜயத்தின் மிகச்சிறந்த நீதிபதியாக பணிபுரிந்த இவரைப் போன்று வரலாற்றில் இன்னொருவரை இனி காணமுடியுமா?
இவரை நீதிபதியாக நியமித்த உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர் கூஃபா புறப்படுவதற்கு முன்னர் அவருக்கு செய்த உபதேசம் இதுதான்: ‘உமக்கு முன்னால் ஒரு வழக்கு வரும்போது, அதுபற்றி அருள்மறையில் ஏதும் தீர்வு இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். உமக்கு அதில் தெளிவு கிடைக்காவிட்டால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறையில் திர்பபு இருக்கிறதா? என்று பார்க்கவும். அதிலும் உமக்கு பதில் கிடைக்காவிட்டால், நபித்தோழர்களின் ஒருமித்த கருத்தை ஆய்வு செய்ய வேண்டும். இம்மூன்றிலும் உமக்கு தீர்வு கிடைக்கா விட்டால் தான், உமது அறிவை பயன்படுத்த வேண்டும். அப்போது விரும்பினால் நீர் அப்பிரச்சனையில் தலையிடலாம் அல்லது பின்வாங்கி விடலாம். பின்வாங்குவதே சிறந்தது என நான் கருதுகிறேன்.’
இந்த அரிய உபதேசத்தை பதிய வைத்திருந்த மாமேதையான ஷுரைஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், தீர்ப்புக் கூறுவதற்காக அமரும் முன்னர் பின்வரும் இறைவசனத்தை ஓதிவிட்டுத்தான் பிரச்சனைப்பற்றி பேசுவார்கள்.
”(நாம் அவரிடம் கூறினோம்;) ”தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், அனோ இச்சையைப் பின்பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.” (அல்குர்ஆன் 38:26)
இந்த வசனத்தை ஓதிவிட்டு ‘பாதிக்கப்பட்டவர் தன்கு உதவி வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அநீதம் இழைத்தவனே தண்டனை நமக்கு வந்து விடுமோ என அஞ்சிக் கொண்டுள்ளார், இந்நிலையில் யா அல்லாஹ்! நீயே நீதியைத் தெளிவு படுத்து. உன்னையன்றி யாரும் நேர்வழி காட்ட இயலாது’ என்று கூறுபவராக இருந்தார்கள்.
ஓவ்வொரு தீர்ப்பு வழங்கவதற்கு முன்னாலும், இவர் உளூச் செய்து இரண்டு ரக்அத் தொழாமல் அவைக்குச் சென்றதில்லை என்கிறது வரலாறு.
காரணம்: ‘நாளை மறுமையில் ஒரு நிதிபதியிடம் நடைபெறும் பயங்கரமான விசாரணையின் காரணமாக உலகில் இரண்டு பேருக்கு மத்தியில் நடுவராக ஏன் இருந்தோம் என்று அவர் நினைப்பார். அல்லாஹ்வின் சமூகத்தில் அவர் நிறுத்தப்பட்டு ஸிராத் பாலத்தின் நடுவில் அவரிடம் விசாரணை நடைபெறும். அவர் வழங்கிய தீர்ப்புகளையெல்லாம் மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக மலக்குகளால் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு தீர்ப்பும் நீதியாக இருந்திருந்தால் அவர் தப்பிப்பார். இல்லாவிட்டால், ஸிராத் பாலம் அப்படியே பிளக்க நரகில் வீசப்படுவார். அவரது உடல் உறுப்புக்கள் தனித்தனியாகச் சிதறி நரகில் விழும். ஒவ்வொரு உறுப்புக்கும் அடுத்த உறுப்புக்கும் இடையே நூறுவருடப் பயண தூரம் இடைவெளி இருக்கும். இதே நிலையில் நரகின் பாதாளத்தில் தூக்கி எறியப்படுவார்’ – அல் ஹதீஸ்
இதுபோன்ற பல ஹதீஸ்கள் அவரின் மனதில் நிழலாடும் நிலையிலேயே அவரது தீர்ப்புகள் வெளிவரும்.
வியக்கத்தக்க வாழ்வு வாழ்ந்த மாமேதை என்றே அவரைக் கூறலாம். இஸ்லாமிய அரசியலில் ஹளரத் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலையால் தோன்றிய சூறாவளி, தொடர்ந்து சுமார் எழுபது ஆண்டுகள் வரையில் முஸ்லீம் சமுதாயத்தை அலைக்கழித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த வேளையில் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பம்போல் அதிகாரிகளையும் நீதிபதிகளையும் பந்தாடியபோதும்கூட இந்த பேரறிஞர் மீது எவரும் கை வைக்கவில்லை. இதிலிருந்தே இவரின்மீது எல்லோருக்கும் எந்த அளவு மதிப்பிருந்தது என்பது விளங்கும். அவரின் தீர்ப்புகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவைகள் பெரும் நூலாகவும் உருவெடுத்துள்ளன.
– மவ்லவீ, எஸ். லியாகத் அலீ மன்பஈ
நமது கால கட்டத்தில் ஒவ்வோர் ஊரிலும் நீதி வழங்கும் இடத்தில் அந்தந்த ஊரின் முதவல்லியும் அவருக்கு ஆலோசணைக்கூறும் நாட்டாண்மைகளுமே நீதி வழங்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் மேலே குறிப்பிட்ட ஹதீஸை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். இல்லையெனில் மறுமையில் ஸிராத்துல் முஸ்த்தகீன் பாலத்தில் அவர்களை விசாரிக்கும்போது அங்கேயே நரகின் பாதாளத்தில் தூக்கி எறியப் படக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம். ஆகவே ஒவ்வொரு முதவல்லியும் அவருக்கு துணை இருப்பவர்களும் அல்லாஹ்வுக்கு பயந்தே தீர்ப்பளிக்க வேண்டும். இல்லையெனில் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியான அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் காப்பாற்றுவானாக.