மவ்லவீ,S. லியாக்கத் அலீ மன்பஈ
இந்த வரலாற்றின் நாயகர் ஒரு நல்ல மனிதர். ஆம், மிக மிக நல்ல மனிதராக வாழ்ந்து வந்தார். அவரின் மீது அழுக்காறு கொண்ட சிலரின் சூழ்ச்சிக்கு பலியாகி தனது இறுதி முடிவை தாறுமாறாக்கிக் கொண்டு பாவச்சேற்றுக்குள் மூழ்கி பலியானார்.
இவரது சோகமான முடிவு நம் எல்லோரக்கும், நல்லவர்களாக வாழ்ந்து வரும் யாவருக்கம் படிப்பினையாகும்.
ஏதேனும் ஒரு பாவத்தைச் செய்! அல்லது செத்து மடி! என்று அவருக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்ட போது, பாவம்! ஏமாந்து போனார். மிகவும் சிறிய பாவம் இதுதான் என்று அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அது அத்தனை பாவத்தையும் செய்யும்படி அவரைக் கொண்டு போய் விட்டது.
அமீருல் முஃமினீன் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்பட்டு இமாம் நஸாயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள இச்செய்தியின் நேரடிக் கருத்து இதோ:
நீங்கள் மதுவிலிருந்து முற்றாக விலகி இருங்கள். ஏனென்றால் அதுதான் எல்லாப் பாவங்களுக்கும் தாய். உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாய மக்களிடையே ஒருவர் இருந்தார். மக்களிலிருந்து பிரிந்து தனித்திருந்து இறைவணக்கத்தில் மூழ்கி இருந்தார்.
அவரைக் கெடுத்துவிட ஒரு அழகிய மங்கை சூழ்ச்சி செய்தாள்.தனது பணிப்பெண்ணை அவரிடம் அனுப்பினாள்.‘மேன்மை மிக்கவரே!எனது எஜமானி உங்களை ஒரு சாட்சியத்துக்காக அழைக்கிறார்.வேறு யாரும் கிடைக்கவில்லை.தயவு செய்து அவசரமாக அவசியம் வாருங்கள்!’என்று பரபரப்புடன் அந்த அடிமைப்பெண் அழைக்கவும் ஓர் இக்கட்டான ஆபத்துக்கு தன் கடமையென கருதிய அந்த வணக்கசாலி உடனே அந்த மங்கையின் வீட்டை நோக்கி விரைந்தார்.
அடிமைப்பெண் தனது எஜமானி இருக்கும் இடத்தை நோக்கி அவரை அழைத்துச் சென்றாள். ஒவ்வொரு அறையையும் தாண்டி உள்ளே இவர் நுழையும்போதும் அந்த அடிமைப்பெண் பின்னுள்ள ஒவ்வொரு கதவையும் தாளிட்டுக் கொண்டே வந்தாள். கடைசியில் அந்த எஜமாட்டி இருந்த தனியறைக்குள் சென்றார்.
மிகவும் அழகாக இருந்த அந்தப் பெண் இவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ‘சாட்சியத்துக்காக உம்மை இங்கு நான் அழைக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, என்னோடு நீர் உறவு கொள்ள வேண்டும் அல்லது (அருகில் இருந்த ஒரு சிறுவனை சுட்டிக்காட்டி) இந்தச் சிறுவனைக் கொலை செய்ய வேண்டும் அல்லது (ஒரு மதுக்கோப்யை அவர் முன் நீட்டி) இந்த மதுவை குடிக்க வேண்டும். இம்மூன்றில் ஒன்றையேனும் நீர் செய்தே தீரவேண்டும். இல்லையெனில் உமது உயிர் பறிக்கப்படும்’ என்று அவரை மிரட்டினாள்.
பயந்துபோன அம்மனிதர் இம்மூன்றில் மிகவும் சாதாரணமான பாவம் மது அருந்துவதுதான் என்று கருதி ‘மதுவைக் குடித்து விடுகிறேன்’ என்கிறார். ஒரு புட்டி, இரு புட்டி என்று குடித்துக்குடித்து போதை தலைக்கேறி தன்னை இழந்த நிலையில் அந்த மங்கையை விபச்சாரமும் செய்தார், அருகில் வந்த சிறுவனையும் கொன்றார்.
ஆக, எல்லாப் பாவங்களையும் ஒட்டுமொத்தமாகச் செய்து தன் வாழ்நாள் முழுவதும் செய்திட்ட நற்செயல்கள் யாவற்றையும் இழந்துவிட்டார். எனவே மதுவைவிட்டு விலகியிருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் அது இருக்கும் இடத்தில் ஈமான் இருக்காது. இரண்டில் ஒன்று மற்றதை வெளியேற்றியே தீரும்.
மதுவை அருந்திய நிலையில் ஒருவன் மரணித்தால் சுவனம் புகுவது ஹராம் என்றும், அவன் ஒரு மிடர் மதுவை குடித்ததற்காக 40 தொழுகைகளின் நன்மை அழிக்கப்பட்டுப் போகும் என்றும், மதுவை அருந்துகிறவனுக்கு மறுமையில் தாகமெடுக்கும்போது சீழும் ரத்தமும் (கற்பனை செய்யும்போதே குமட்டுகிறதல்லவா…!) பானமாகக் கொடுக்கப்படும் என்றும் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.
எனவே அனைத்துப் பாவத்திற்கும் ஆணிவேரான மதுவை நம்; வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு இறைமொழிக்கும் நபிமொழிக்கும் மதிப்பு கொடுப்போம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.