இறை வசனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமை!
”இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கி வைத்துள்ளோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (17:82)
யார் தங்களது உளநோயைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்களோ அவர்கள் மேற்கண்ட இறைவசனத்தை சிந்தித்துப் பார்க்கட்டும்..!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், திருமறைக் குர்ஆனை ஓதும் பொழுது அதன் அர்த்தத்தையும், விளக்கத்தைப் பற்றியும் சிந்திக்கக் கூடியவர்களாகவும், இன்னும் இரவு நேரத் தொழுகைகளில் திருமறைக் குர்ஆன் தரும் விளக்கத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்து அதனை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
ஒருமுறை, அவர்கள் இரவுத் தொழுகைக்காக நின்றார்கள். அப்பொழுது திருமறைக் குர்ஆனில் இருந்து ஒரே ஒரு வசனத்தை மட்டுமே ஓதினார்கள், அந்த வசனத்தை அதிகாலைத் தொழுகை வரைக்கும் ஓதினார்கள், அது தவிர வேறு வசனத்தை ஓதவே இல்லை. அந்த வசனத்தின் அர்த்தத்தைப் பார்ப்போம்:
”(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய் (என்றும் கூறுவார்). ”
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமறைக் குர்ஆனின் அர்த்தங்களையும், அது கூறும் போதனைகளையும் எவ்வாறு சிந்தித்திருக்கின்றார்கள் என்பதற்கு இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நபிமொழியே சிறந்த சான்றாகும்.
அதாரா என்பவர் கூறுகின்றார்: நானும், உபைதுல்லா இப்னு உமைர் அவர்களும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வீட்டிற்குச் சென்று, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ‘இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கண்டதிலேயே உங்களை மிகவும் கவர்ந்ததொரு செயல் ஒன்றைக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.
”(ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) அழுதவர்களாகக் கூறினார்கள், ஒரு (நாள்) இரவில் (படுக்கையிலிருந்து) எழுந்த அவர்கள் கூறினார்கள், ஓ..! ஆயிஷாவே..! எனதிறைவனை வழிபட விடுங்கள். நான் கூறினேன், ‘இறைவன் மீது சத்தியமாக, ‘நான் உங்கள் அருகில் இருக்கவே விரும்புகின்றேன், இன்னும் உங்களுக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்குமோ அதனையும் நான் விரும்புகின்றேன்” என்று கூறினேன்.
எழுந்த அவர்கள், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டவர்களாக, பின் தொழுகைக்குத் தயாரானார்கள். அவர்களது பாதங்கள் நனையும் அளவுக்கு அழுதவர்களாகவும், இன்னும் அழுது அழுது அவர்கள் நின்று கொண்டிருந்த தரைப்பகுதி ஈரமாகும் அளவுக்கு அழுது கொண்டே இருந்தார்கள். (அப்பொழுது) பிலால் அவர்கள் அதிகாலைத் தொழுகைக்காக பாங்கு சொல்வதற்காக வந்தவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுவதைப் பார்த்து விட்டு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே, இறைவன் உங்களது முன் பின் பாவங்களை மன்னித்து விட்ட நிலையில், நீங்களுமா அழுது கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு, எனது இறைவனுக்கு நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று பதில் கூறினார்கள். இன்றைய இரவில் எனக்கு சில குர்ஆனின் வசனங்கள் இறக்கி அருளப்பட்டது, அந்த வசனங்களை ஒருவர் வாசித்தாரென்று சொன்னால், அதனுடைய விளக்கத்தைப் பற்றி நிச்சயமாக சிந்திக்காமல் இருக்க மாட்டார். அந்த வசனம் இது தான் :
”நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து…,” (3:190-191)
மேற்கண்ட வசனம் அறிவுறுத்துவது என்னவென்றால், இறை வசனங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது கட்டாயக் கடமை என்கின்றது.
ஆக்கம்: ஷேக் முஹம்மது ஸாலிஹ் அல் முனஜ்ஜத் ”ஈமானின் பலவீனங்கள்”
Source: www.tamilislam.com