கூடிக் கலந்து பேசி….
புலவர் அ. அஹமது பஷீர்
[ நம்பிக்கையாளர்களைப் பற்றிப் பேசும்போது இறைவன், ‘அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள், தம்முடைய காரியங்களை கலந்து ஆலோசனை செய்வார்கள், அவர்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து (அறவழியில்) செலவும் செய்வார்கள்’ (அல்குர்ஆன் 42:38) என்று தெளிவுறுத்துகிறான்.]
குடும்ப நிர்வாகம், நாட்டு நடப்பு எதுவாயினும்ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போதல்,
சிக்கல் அவிழ வேண்டும் என்னும் கவலையோடு சிந்தித்தல்,
இறைவனின் திருப்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளுதல்.
இவையே இஸ்லாத்தின் இனிய பண்பாடு.
கொடுங்கோன்மையும், சர்வாதிகார முடியாட்சியையும், எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசும் எதேச்சை அதிகாரத்தையும், இறுமாப்பையும் இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை.
நம்பிக்கையாளர்களைப் பற்றிப் பேசும்போது இறைவன், ‘அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள், தம்முடைய காரியங்களை கலந்து ஆலோசனை செய்வார்கள், அவர்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து (அறவழியில்) செலவும் செய்வார்கள்’ (அல்குர்ஆன் 42:38) என்று தெளிவுறுத்துகிறான்.
வழக்கமாக திருக்குர்ஆன் ‘தொழுங்கள், தர்மம்; கொடுங்கள் என்று இறை வணக்கத்தையும் அறம்புரிதலையும் அடுத்தடுத்து இணைந்தே கூறும். ஆனால், இந்த இடத்தில் மட்டுமே – ஆம்! இந்த இடத்தில் மட்டுமே தொழுகைக்கும் தர்மத்திற்;கும் இடையில் கலந்து ஆலோசித்தல் பற்றி எடுத்துக் காட்டுகிறது.
ஒவ்வொரு செயலையும் நிறைவேற்றும் பொழுது பலரது துணை தேவைப்படுகிறது. கூடிக்கலந்து பேசி முடிவெடுப்பது அவசியமாகிறது.
தொழுகையைப் பேணாதவரும், தர்மம் செய்யாதவரும் கூடிக்கலந்து பேசி முடிவு எடுப்பதற்கு தகுதியற்றவர் என்னும் குறிப்பும் இந்த வசனத்தின் உட்கருத்தாக உள்ளது.
தீர ஆலோசனை செய்தல்,
கலந்து பேசி முடிவுக்கு வருதல்,
செயலாற்ற முனைதல்
இம்மூன்றும் ஒரு செயலுக்கு முன் உள்ள மூன்று நிலைகள்.
செயலாற்ற முனைதல் வரை தீர ஆலோசனை செய்யலாம். முடிவுக்கு வந்த பின் காலந்தாழ்த்துவதும், கிடப்பில் போட்டு விடுவதும் ஆலோசனை பண்ணியதை அர்த்தமற்றதாக்கிவிடும்.
தன்னை விட்டால் ஆள் இல்லை என்னும் தலைக்கனமும், அவசரப்படுதல், பொறாமையும் கர்வமும் ஆகிய நான்கும் நால்வகை ஆபத்துகள் என்கிறார்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
‘எந்த சமுதாயம் ஒரு சிக்கலான பிரச்சனை ஏற்படும்போது தக்க முறையில் கலந்து ஆலோசித்துத் தீர்வு கண்டு அதன்படிச் செயலாற்றுகின்றதோ, அதற்கு சரியான பாதை நிச்சயம் காண்பிக்கப்படும்’ என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்கள் தம் பேரர் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்கள் தலைவர்களும், ஆட்சியாளர்களும் உங்களைவிட நல்லவர்களாக இருக்கிறார்கள். உங்கள் செலவந்தர்கள் கொடையாளர்களாக இருக்கிறார்கள். உங்கள் காரியங்கள் கலந்து ஆலோசனை செய்யப் பெற்ற பின் நிறைவேற்றப் படுபவையாக இருக்கின்றன என்றால், பூமியில் வாழ்வது மேன்மை உடையதாக இருக்கும்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஆதாரம்: மஆரிபு)
தான் ஒன்றைச் செய்யும்போது இதற்குமுன் இத்துறையில் ஈடுபட்டவர் யார்? அவர் பட்டறிவையும் பரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் ஈட்டிய வெற்றிக்கும் எதிரிகள் தழுவிய தோல்விக்கும் என்ன காரணம்? எண்ணிப்பார்க்க வேண்டும்.
கலந்து பேசி முடிவு எடுத்தபின், அதுவே சரியென்று உறுதி ஏற்பட்டபின் அதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ‘நம்மால் என்ன இருக்கிறது? அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று இருந்துவிடக் கூடாது. ‘ஒட்டகத்தை கட்டிப்போடு இறைவனை நம்பு என்பது’ என்பது நபிமொழி.
இறைவன்மீது முழு நம்பிக்கை, முழுமையான முயற்சி, இரண்டும் தேவை. ‘(செய்வதற்கு) முடிவு எடுத்துவிட்டால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக. அல்லாஹ், தன் மீது நம்பிக்கை வைப்பவர்களை (மிகவும்) நேசிக்கிறான்.(அல்குர்ஆன் 3:159)
போர்க்களத்தில் தளகர்தத்தரின் சொல்லே இறுதி முடிவு. இம்மியளவு பிழை செய்யினும் தண்டனை மிகக் கடிது. உஹதுப்போரில் சில ஸஹாபிகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆலோசனைக்கு மாற்றமாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். இருந்தபோதும் மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவரிடமும் கோபம் கொள்ளவில்லை. ஏனெனில், மன்னிப்பு – அறவணைப்பு இவையிரண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணிகலன்கள்.
அதை அல்லாஹ்வும் திருமறையில் தெளிவுறுத்துகிறான்:
‘அல்லாஹ் அருளியுள்ள ரஹ்மத்தின் காரணமாகவே நபியே அவர்களிடம் மிருதுவாக நடந்து கொண்டீர்ஸ அவர்களை மன்னித்து விடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்பீராகஸ முக்கியமான காரியங்களில் கலந்து ஆலோசனை செய்வீராக. (அல்குர்ஆன்; 3:159)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகழிப்போரின்போது ஸல்மான் ஃபாரிஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆலோசனையின் பேரில் போர் வியூகத்தை மேற்கொண்டார்கள். ஸல்மான் ஃபாரிஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் யூதரின் அடிமையாக இருந்தவர்தான். புதியவர் என்பதற்காக அவர் புறக்கணிக்கப் படவில்லை. அடிமை என்பதற்காக தனித்து விடப்படவில்லை. அவரையும் கலந்துரையாடலில் கலந்து கொள்ள வைத்தார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அதுமட்டுமின்றி அவர்களது ஆலோசனை சிறப்பாக இருந்ததால் அதை ஏறு;றுக்கொண்டு போரின்போது அகழிகளை வெட்டி வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.
இறையச்சத்துடன் தொழுது கொள்ள வேண்டும். ஏழை எளியவர்க்கு ஈந்து மகிழ வேண்டும். இவையிரண்டுக்கும் இடையில் வீட்டு நிர்வாகம் முதல் நாட்டு நிர்வாகம் வரை கலந்த பேசி முடிவெடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் கல்வியா? மார்க்க ஒழுங்கில் கவனக்குறைவா? வளர்ச்சிக்கு வழி என்ன? அடித்துப் பலன் இல்லை. அவனையும் மதித்துப் பேசுங்கள்.
கணவன் மனைவி ஒத்துப் போக வேண்டுமா? சிக்கல் எங்கே? சேர்ந்து சிந்தியுங்கள்.
மாமியார் – மருமகள் மனம் விட்டுப் பேசுங்கள். குடும்பம் குமுறும் எரிமலையாகாது. குளிரந்த மலர்சோலையாகும்.
இறைவன் வகுத்தளிக்கும் இனிய இலக்கணம்
‘வ அம்ருஹும் ஷுரா பைனஹும்’
‘அவர்களின் காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும்.’ (அல்குர்ஆன்: 42:38)
முஸ்லிம் முரசு ஏப்ரல் 2006
www.nidur.info