48. அவர்கள் வீணர்களே!
இப்படி எண்ணற்ற பலன்களைத் தரும் தொழுகையை நிறைவேற்றுவதில், முஸ்லிம்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று யாரும் சொன்னால் அவர்களை வக்கிர புத்திக்காரர்கள் என்றே சொல்ல முடியும்.
மனித உடல் ஆரோக்கியத்திற்காக, குறைந்தது ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தூங்கியாக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறவர்கள், உள்ள ஆரோக்கியத்திற்காக சில மணிநேரங்கள் விளையாட்டுக்களிரும் பொழுது போக்குகளிலும் செலவழிக்க வேண்டும் என்று வற்புத்துகிறவர்கள் உடல் ஆரோக்கியத்தையும், உள்ள ஆரோக்கியத்தையும் ஒருங்கே தரும் தொழுகையில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து வேளையும் சேர்த்து 1 மணி நேரம் செலவழிப்பதை வீண் முயற்சி என்பார்களேயானால் அவர்கள் வீணர்களே என்றி வேறுயாராக இருக்க முடியும்?.
நாட்டின் பாதுகாப்பிற்காக ராணுவத்திற்கு நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுவதை நியாயப்படுத்துகிறவர்கள், எவ்வித செலவுமின்றி அதைப் போன்றதொரு பயிற்சியை அளிக்கும் தொழுகையை கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் அறிவீனார்களாக மட்டுமே இருக்கமுடியும்.
ஆக முஸ்லிம்கள் தொழுகையைக் கொண்டும் நாஸ்திகர்கள் பெரிதாக நினைக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேறுகளைப் பெற்று பெருவாழ்வு வாழ்கிறார்கள் என்பதே உண்மையாகும்.
நாஸ்திகர்கள் எண்ணுவதுபோல் முஸ்லிம்கள் ஏக இறை நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டாயக் கடமையான ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதால் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடைவதில்லை. மாறாக நாஸ்திகர்கள் மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அழிந்துபோகும் இவ்வுலக வாழ்க்கையிலும் பெறற்கரிய பேருகளையே பெற்று வருகின்றனர் என்பதை விரிவாகப் பார்த்தோம்.
அதேபோல் இஸ்லாம் முஸ்லிம்கள் மீது விதித்துள்ள கடமைகள் அனைத்தும் நிறைவேற்றுவது கொண்டு இணையில்லாத ஒரே இறவைனின் பொருத்தத்தைப் பெற்றுக்கொள்ளவதோடு இவ்வுலகையும் முறையாக அனுபவித்தே வருகின்றனர்.
49. ஜகாத்:
இஸ்லாம் விதித்துள்ள அடுத்த பெருங்கடமை ஜகாத்தாகும். செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின் ஒரு பகுதியை வருடாவருடம் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. செல்வம் ஓரிடத்தில் மிதமிஞ்சி குவிந்து விடாமலிருக்க இஸ்லாம் வழி வகுத்திருக்கிறது. ஜகாத்தை முறையாக நிறைவேற்றும் ஒரு முஸ்லிம் இவ்வுலகில் தனக்குரியதை இழப்பதாக எண்ண முடியாது. தனக்குரியதை முறையாக அனுபவித்துக் கொண்டு இல்லாத ஏழைகளுக்குத் தனது செல்வத்திலிருந்து பகிர்தளித்து ஆனந்தமடைகிறான்.
உலகில் ஒரு சாரார் வறுமையிலேயே வாடுவதும் பிரிதொரு சாரார் மிதமிஞ்சிய செல்வத்தால் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் நாஸ்திகம் பிறக்க ஒரு காரணமாகும். எனவே ஏழைகளுக்கு உதவும் எந்த முயற்சியையும் வீண் முயற்சி என்று எந்த நாஸ்திகரும் சொல்ல முடியாது. ஏழைகளுக்கும் அதேசமயம் செல்வந்தருக்கும் ஏற்புடையதான இதைவிட ஒரு உன்னத நடைமுறையை உலகம் தோன்றி இது நாள்வரை எந்த ஒரு மனிதனும், இயக்கமும், இஸமும் தந்துள்ளதாக எவரும் சுட்டிக்காட்ட இயலாது. பெர்னாட்ஷா கூறியதுபோல் இஸ்லாத்தை முறையாக செயல்படுத்தத் தவறும் முஸ்லிம்களைக் குற்றப்படுத்த முடியுமேல்லாது, இறை கொடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாமிய மார்க்கத்தைக் குறைகூற முடியாது.
50. நோன்பு:
இஸ்லாம் அடுத்து விதித்துள்ள பெருங்கடமை நோன்பாகும். வருடத்தில் குறிப்பிட்ட ஒரு மாத முழுவதும் சூரிய உதயத்தறிகு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை பகல் முழுவதும் உண்ணாமல், பருகாமல், சுகிக்காமல் தனது இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது நோன்பாகும். உலகில் மக்களிடையே இடம்பெறும் பெரும் குற்றச்செயல்களுக்கு அடிப்படைக் காரணம் மேலே சொன்ன மூன்று காரியங்களில் மனிதன் தனது இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமையேயாகும். இவற்றில் தனது இச்சையைக் கட்டுப்படுத்தும் பக்குவம் பெற்றவன் குற்றச் செயல்களிலிருந்து பெரும்பாலும் விலகி இருக்க முடியும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஓர் உயர்ந்த பயிற்சி முறையை வீண் முயற்சி, உலகை நஷ்டப்படுத்தும் செயல் என்று நாஸ்திகர்கள் கூறமுடியாது.
அதல்லாமல் நோன்பின் மூலம் மனிதனின் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைப்பதாக மருத்துவர்கள் சான்று பகர்கின்றனர். ஒரு செல்வந்தன் சகலமும் பெற்றிருந்தும் அந்த மாதத்தின் பகல்பொழுது முழுவதும் பசித்திருப்பதால், தாகித்திருப்பதால் ஏழைகள் பசியினால் அனுபவிக்கும் வேதனையை அறிந்து கொள்ளும் வாய்ப்பையும், அதன் மூலம் ஏழைகள் மீது இரக்கம் காட்டும் பண்பையும் நோன்பு வளர்க்கிறது. இங்கும் நாஸ்திகர்கள் எண்ணுவது போல் முஸ்லிம்கள் இவ்வுலகை நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை, மாறாக பேரின்பமும் பெரு வாழ்வுமே பெறுகின்றனர்.
51. ஹஜ்:
அடுத்து இஸ்லாம் விதித்துள்ள ஹஜ் கடமை, பரந்து விரிந்து கிடக்கும் உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களில் வசதியும், வாய்ப்பும் உடையவர்கள் வருடத்தில் ஒரு முறை உலகின் மையப் பகுதியான மக்காவில் கூடி தங்கள் சகோதர அன்பை வளர்த்துக் கொள்ளவும், உலக ஒற்றுமையை வளர்க்கவுமான வாய்ப்பையும் பெறுகின்றனர். மக்கள் மன சந்தோஷத்திற்காக உல்லாசப் பிரயாணங்கள் போவதை நாஸ்திகர்கள் மறுப்பதில்லை. அதனை வீண் வேலை என்று வர்ணிப்பதில்லை. உலகில் தங்கள் பங்கை அனுபவிக்கத் தவறிவிடுகின்றனர் என்று சொல்லுவதில்லை. எனவே முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கொண்டு இவ்வுலகில் தங்களின் பங்கிலிருந்து எதனையும் இழப்பதில்லை. உலகை அனுபவிப்பதில் குறை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
இதேபோல் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான எந்தச் செயலும் அவர்களுக்கு இவ்வுலகில் எவ்வித நஷ்டத்தையும் தருவதாக இல்லை, அவர்களின் நியாயமான எவ்வித பங்கையும் இழப்பதாக இல்லை. சுருங்கச்சொல்லின் மனிதன் இவ்வுலக வாழ்க்கையை முறையாகவும், சரியாகவும், நேர்மையாகவும் முழுச் சுவையுடனும் அனுபவிப்பதற்கு இஸ்லாம் கூறும் ஒரே இறை நம்பிக்கையோ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் செயல்பாடுகளோ தடையாக இல்லை என்பதை நாஸ்திகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறோம்.
52. படைத்தவனே வழிகாட்ட வேண்டும்:
இங்கு ஒரு உதாரணம் கூறி விளங்க வைக்கலாம். குறைமதி படைத்த மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானக் கருவியை பிறிதொரு மனிதன் பயன்படுத்த முற்படும்போது, அதனைத் தயார் செய்தவனின் வழிகாட்டலை எவ்விதக் குறையும் இல்லாமல், தன் சொந்த யுக்தியை அதில் செலுத்தாமல் அப்படியே பின்பற்றும் போது அந்தக் கருவி எந்த நோக்கத்தோடு தயார் செய்யப்பட்டுள்ளதோ அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. இதனை நாஸ்திகர்கள் மறுக்க மாட்டார்கள், அப்படியானால் நிறைமதியுள்ள இறைவன், அவன் படைத்த மனிதக் கருவியை குறைமதி படைத்த மனிதன் தம் யூகம் கொண்டு இயக்க முடியுமா? இதனை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும்.
இன்று உலகில் ஏற்பட்டுள்ள சர்வ நாசங்களுக்கும், குழப்பங்களுக்கும், அமைதியின்மைக்கும் குறைமதி படைத்த மனிதன், தானே தனது வாழ்க்கைத்திட்டத்தை அமைத்துக் கொண்டதேயாகும். மதங்கும், இஸங்களும் மனித யூகப்படி அமைந்தவையே! இவை மனித அபிப்பிராயத்தில் நலன் விளைவிப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்கினாலும் உண்மையில் நலன் விளைவிப்பவை அல்ல. இறைவன் படைத்த மனிதனின் வாழ்க்கை முறையை குறைமதி படைத்த மனிதன் அமைப்பது கொண்டு மனிதன் வெற்றி பெற முடியாது.
ஓவ்வொரு நபிக்கும் இறைவனிடமிருந்து நேர்வழி கொடுக்கப்பட்டது, நபிமார்கள் தங்கள் சொந்த மனித யூகத்தை மக்களுக்கு மார்க்கமாகப் போதிக்கவில்லை. இது விஷயத்தில் ஒவ்வொரு நபியும் மிக எச்சரிக்கையாக இருந்தனர். அதில் சிறிது தவறு இடம் பெற்றாலும் இறைவன் உடனடியாக செய்தி (வஹி) அனுப்பித்தித் திருத்தினான். ஆனால் ஒவ்வொரு நபிக்கும் பின்னால் அந்த நபிமார்களைப் பின்பற்றியவர்கள் தங்கள் மனித யூகங்களை மார்க்கத்தில் புகுத்தி இறைவன் கொடுத்த ஒரே நேர்வழி பல மதங்களாக உருவெடுக்க வழி வகுத்துள்ளனர். இதனை நாஸ்திக நண்பர்கள் ஆழ்ந்து சிந்தித்து தவறு எங்கே இடம்பெற்றுள்ளது என்பதை உணர வேண்டும்.
அதாவது மனிதனின் வாழ்க்கை நெறியாக இறைவன் பல மதங்களைக் கொடுக்கவில்லை இறைவன் கொடுத்தது ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத்தான் மனிதர்களே தங்கள் சொந்தக்கற்பனை கொண்டு பல மதங்களைத் தோற்றுவித்துள்ளார்கள். இறைவன் மனிதனிடமிருந்து ஏற்றுக்கொள்வது அவன் கொடுத்த வாழ்க்கை நெறியை மட்டுமே. இறைவன் கொடுத்த மறைவழி–நேர்வழி–மார்க்க நெறி எது? மனிதன் படைத்த மதவெறி எவை? என ஆய்ந்து பகுத்துணர்ந்து நேர்வழியை ஏற்றுச் செயல்பட ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கடமைப்பட்டுள்ளனர்.
53. ஆணவம் கெட்டதே!
முஸ்லிம்கள் ஒரே இறை நம்பிக்கையால், அந்த ஒரே இறைவனது கட்டளைகளைச் செயல்படுத்துவதால், இவ்வுலகில் எவ்வித இழப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை அறிந்தோம். இன்னொரு முக்கியமான ஒன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் மீது பூரண நம்பிக்கை உள்ள ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு பெரியதொரு செயற்கரிய செயலைச் சாதித்தாலும் அது இறைவனின் அருட் கொடையால் ஆனது என அமைதி அடைகிறான். இங்கு பணிவு ஏற்படுகிறது அகங்காரமோ ஆணவமோ ஏற்படுவதற்கு வழியில்லாமல் போய் விடுகிறது.
ஆகங்காரமும், ஆணவமும் மிகக் கெட்ட குணங்கள். என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள். அதே சயமம் ஒரு நாஸ்திகர் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டால் இவர் மீதுதான் அவருக்கு முழு நம்பிக்கை இருக்குமேயல்லாது, தன்னை ஆட்டிப்படைக்கும் இறை சக்தி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை எனவே அவரிடம் அவரை அறியாமலேயே அகங்காரமும், ஆணவமும் குடி கொள்ளும் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க முடியாது ஒரு சாதனையின் முழுப் பொறுப்பும் தன்னைச் சார்ந்ததே வேறு யாரும் கிடையாது என்ற மேல் எண்ணமே அவரை அகங்காரமும், ஆணவமும் கொள்ளச் செய்து விடும் பின் எங்கே பணிவு ஏற்படும்?
நாஸ்திகர்களின் நம்பிக்கைப்படி இறைவனோ, மறு உலக வாழ்க்கையோ இல்லை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் இதனால் ஆஸ்திகர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் இவ்வுலகில் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. அவர்களுக்குறியதை முறையாக அனுபவிக்கின்றனர். ஆனால் நாஸ்திகர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக இறைவன் ஒருவன் இருந்து, மறுமை வாழ்க்கையும் உண்டென்றால் அதனால் பெரும் நஷ்டம் அடையப் போவது நாஸ்திகர்களே என்பதையும் தெளிவாக விளக்கிவிட்டோம். எனவே இறை நம்பிக்கையற்ற நிலை இவ்வுலக வாழ்க்கையையும் பாதிக்கிறது மட்டுமல்லாமல் மறு உலகிலும் ஈடு செய்ய முடியாத பெரும் நஷ்டத்தை உண்டாக்குகிறது இதனை நாஸ்திகர்கள் உணர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்