ஜெ. சதாம்
[ ஒவ்வோர் சமூகத்திடமும் அக அழுக்கும், புற அழகியலும், புதைந்தும், குவிந்தும் கிடக்கின்றன. எழுத்தாளர்களது பணி தன் சமூகத்திடம் உள்ள அக அழுக்கிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது. மீண்டும் அவர்கள் மீது கறை படியாதிருக்கவும், அழுக்குக்குள் அவர்கள் புதையுண்டு போகாது தடுக்கவும், தமது சிந்தனையில் எழும் எழுத்தை எடுத்து முன் வைக்க வேண்டும்.]
எதார்த்த வாழ்வின் அகத்தையும், புறத்தையம் அப்படியே படம்பிடித்து காட்டுவதுபோல் பதிவு செய்வதுதான் ‘நவீன இலக்கியம்’ என்று பேசப்படுகிறது. இந்த போர்க்கால நவீன இலக்கியத் தளத்திற்குள் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளும் முஸ்லீம் அடையாள நவீனவாதிகள் கொச்சையாக பத்திரிகையில் எழுதி தங்களது எழுத்துத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு படைப்பாளி, தனது படைப்பிற்குள் வைக்கும் செய்தி (அநளளயபந) நல்ல கருத்தாக அமைதல் அவசியம். இதைவிடுத்து அருவறுக்கத்தக்க செய்திகளைப் பதிவு செய்வது, உண்மைகளைத் தோலுரித்துக் காட்டுகிறேன் என்ற நோக்கில் ஷரீஅத்துக்கு மாற்றமாக மார்க்ஸியத்தை முன்னிறுத்தி அகம், புறம் இரண்டையும் அப்படியே பதிவு செய்வது, எதிர்வினை வரும்போது விளிம்பு நிலை முஸ்லீம்களுக்காகத்தான் நாங்கள் பேனா பிடிக்கின்றோம் என்று கதைப்பது, கதை போல் ஆகிவிட்டது.விளிம்பு நிலை முஸ்லீம்களின் அவல வாழ்வை படம் பிடித்து காட்டுவதை வரவேற்போம். அம்மக்களின் வாழ்வியல் மேம்பாடுகளுக்காகப் பாடுபடுவார்களேயானால், பாராட்டுவோம். ஆனால், பதிவு செய்யப்படும் செய்திகள் என்ன? நாகூசும் அருவறுக்கத்தக்க செய்திகள், வர்ணனைகள். இதுவா நவீன இலக்கியம்?!
முஸ்லீம் பத்திரிகை ஒன்றில் ஒரு முற்போக்காளர்(!) எழுதினார். இவர் கரம் பற்றிய முற்போக்கு என்ன தெரியமா? முஸ்லீம் பத்திரிகைகளில் எழுதும்போது முஸ்லீம்களுக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகள் கூறாது அமெரிக்காவைத் தாக்குவது, திட்டுவது, சங்பரிவாரத்தை திட்டுவது போல் மார்க்ஸியத்தை திணிப்பது. இதன் மூலம்; முஸ்லீம்களுக்கு ஆபத்தாந்தவனாக தன்னைக் காட்டிக் கொள்வது.
மாற்று மதத்தார் பத்திரிகையில் தனது எழுத்தை பதிவு செய்யும்போது அங்கு முஸ்லீம்களைத் திட்டுவது, பிச்சை எடுத்தாலும் பரவாயில்லைன்னு ஹஜ்ஜுக்குப் போறாங்க, பாருங்கன்னு கதை எழுதுவது. இதன்மூலம் கம்யூனிஸ்ட்களிடம் தான் உண்மையான மார்க்ஸியவாதி என்பது போல காட்டிக் கொள்வது. இதுதான் இவர் கண்ட முற்போக்கு! இந்த இரட்டை வேடம் தான் இவர் கண்ட நவீன இலக்கியம்.
முஸ்லீம்களில் சிலர் செய்வது இவருக்குத் தவறாகப்படுகிறது. ‘பிச்சைப்புகினும் ஹஜ்ஜுக்குச் செல்வது நன்றே’ என்று சில ஏழை முஸ்லீம்கள் சிந்திக்கிறார்கள், பின்பற்றுகிறார்கள் என்று இவரது கண்களுக்கத் தெரியும்போது, இந்த முற்போக்கு முஸ்லீம் அடையாளவாதி என்ன செய்திருக்க வேண்டும்? தனக்கென்று இருக்கும் முஸ்லீம் பத்திரிகைத் தளத்தில் மேற்கூறிய செய்திகளைப் பதிவு செய்து தவறைச்சட்டிக் காட்ட வேண்டும். அதுதான் ஒரு உண்மையான முஃமீன் எழுத்தாளனுக்குரிய செயல்பாடு.
அதைவிடுத்து முஸ்லீம் பத்திரிகையில் எழுதும்போது முஸ்லீம்கள் விரும்பும் போக்கில் எழுதி தன்னை வளர்த்துக் கொள்வது, இந்துக்களின் பத்திகையில் எழுதும்போது முஸ்லீம்கள் மீது படிந்துள்ள ‘கறை’யைக் காட்சிப்படுத்துவது நல்லதோர் செயல்பாடாகத் தெரியவில்லை.
ஒவ்வோர் சமூகத்திடமும் அக அழுக்கும், புற அழகியலும், புதைந்தும், குவிந்தும் கிடக்கின்றன. எழுத்தாளர்களது பணி தன் சமூகத்திடம் உள்ள அக அழுக்கிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது. மீண்டும் அவர்கள் மீது படியாதிருக்கவும், அழுக்குக்குள் அவர்கள் புதையுண்டு போகாது தடுக்கவும், தமது சிந்தனையில் எழும் எழுத்தை எடுத்து முன் வைக்க வேண்டும். இதன் மூலம் தவறான வழியில் செல்லும் சமூகம் தன்னை சீர் திருத்திக் கொள்ளவோ சிந்தனைக்கு உட்படுத்தவோ ஒரு வாய்ப்பாக அமையும்.
நன்றி : முஸ்லிம் முரசு