மவ்லவீ, S.முஹம்மது லியாகத் அலீ மன்பஈ
அண்ணலார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஊழியர் தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் மார்க்க அறிஞர்களில் ஒருவர் அஙகு வந்தார். ‘அஸ்ஸலாமு அலைக்க யா முஹம்மத்’ என்று சொன்னார். உடனே எனக்கு கடும் கோபம் வரவே அவரைப்பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அதனால் அவர் கீழே விழுந்துவிடப் பார்த்தார்.
‘ஏன் என்னை பிடித்துத் தள்ளுகின்றீர்?’ என்று என்னிடம் அவர் கேட்டார்.
“யா முஹம்மத் என்று எங்கள் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கின்றீர். ‘யா ரசூலல்லாஹ்’ என்று சொல்லி அழைக்க வேண்டியது தானே!” என்று கடிந்தேன்.
அதற்கு அவர், ‘நான் அவர்களை அன்னாரின் குடும்பத்தார்கள் சூட்டிய பெயர் சொல்லித்தானே அழைத்தேன். அதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்டார்.
எங்களுக்குள் நடைபெறும் தகராறை முடித்து வைக்கும் முகமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நிச்சயமாக என் குடும்பத்தார் எனக்கு சூட்டிய பெயர்தான் முஹம்மது. அதைச் சொல்லி அவர் அழைத்தது சரிதான்’ என்று கூறி அவரை வரவேற்றார்கள்.
‘தங்களிடம் சில கேள்விகள் கேட்பதற்காக வந்திருக்கின்றேன்’ என்று அவர் சொல்ல, ‘அவற்றுக்கு நான் விளக்கமளித்தால் உமக்கு பயன் கிட்டுமா?’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, அதற்கு ‘என் இரு காதுகளால் நான் கேட்பேன். பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அவர்.
அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கரத்தில் இருந்த ஒரு குச்சியால் கோடு கிழித்துக் கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டது போல் தெரிந்தது. ‘கேளும்’ என்றார்கள். அவர் கேட்க ஆரம்பித்தார்.
‘பூமியும் வானங்களும் இப்போது இருப்பது போலல்லாமல் மாற்றப்படக்கூடிய மறுமை நாளில் மனிதர்களெல்லாம் எங்கே இருப்பார்கள்?’
‘அவர்கள் பாலத்தின் கீழே இருட்டில் இருப்பார்கள்.’
‘அந்தப் பாலத்தை முதன்முதலில் யார் கடப்பார்?’
‘முஹாஜிர்களில் உள்ள ஏழைகள்.’
‘அவர்களுக்கு அப்போது முதன்முதலில் வழங்கப்படும் பரிசு யாது?’
‘மீனின் ஈரல்’
‘அவர்களின் முதலாவது உணவு எது?’
‘சுவர்க்கத்தின் காளைமாடு. அதன் மாமிசத்தின் ஓரப்பகுதியிலிருந்து சாப்பிடுவார்கள்.’
‘அவர்கள் எதை அருந்துவார்கள்?’
‘ஸல்ஸபீல் என்று பெயர் சொல்லப்படும் நீரூற்றிலிருந்து தாகம் தீருவார்கள்.’
இப்போது அவர் சொன்னார், ‘இதுவரை நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே. இப்போது நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை நபிமார்களைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது’ என்று நிறத்தியதும், ‘அதற்கு நான் பதில் தந்தால் உமக்கு பயன் ஏற்படுமா?’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, ‘என் இரு காதுகளால் நான் கேட்பேன், பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறிவிட்டு, ‘குழந்தை தாயைப் போன்றும், தந்தையைப் போன்றும் அமைவது எதனால்?’ என்று வினவினார்.
‘ஆணின் விந்து வெண்மையானது. பெண்ணின் நீர் மஞ்சள் நிறமானது. இருவரும் கூடும்பொழுது ஆணின் விந்து முந்தி விட்டால் குழந்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனைப்போலவும், பெண்ணின் நீர் முந்தினால் அவளைப்போலவும் பிறக்கிறது, அல்லாஹ்வின் உத்தரவால்.’
இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும் அந்த யூத அறிஞர், ‘நிச்சயமாக உண்மை உரைத்தீர். நீர் சத்தியமாக நபிதான்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
அவர் சென்ற பிறகு அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ‘ அவர் என்னிடம் கேட்கத் துவங்கும்பொழுது எனக்கு எதுவும் தெரியாது. அவர் கேட்கக் கேட்க அல்லாஹ் எனக்கு உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தான்.’ (நூல்: ஸஹீஸ் முஸ்லிம் – கிதாபுல் ஹைழ்)
நன்றி: ஜமாஅத்துல் உலமா (1996 நவம்பர்) மாத இதழ்,