எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கிறது என்றால் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படி தானே நடக்கின்றது. ஒருவன் தீமை செய்வதும் நன்மை செய்வதும் அல்லாஹ்வின் விருப்பப்படி தானே நடக்கிறது.?
அல்லாஹ் விதித்த விதிபடித்தான் எல்லாம் நடக்கிறது என்றால் நாம் சொர்க்கம் செல்வதும் நரகம் செல்வதும் முன்கூட்டியே விதிக்கப்பட்டுவிட்டதல்லவா?
அப்படியானால் நாம் அமல்கள் செய்வதால் என்ன பயன்? நம் இஷ்டப்படி வாழ்ந்து விடலாமே. விதியை பற்றி ஒரு அளவிற்கு மேல் சிந்திக்காதீர்கள் என்று ஹதீஸில் உள்ளதாமே!
அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?
இதற்கான பதில்கள்: இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கு தெள்ளத்தெளிவான பதில் உண்டு. அது பற்றி கலந்துரையாடல் விவாதம் செய்வதற்கும் அனுமதி உண்டு.
ஆனால் இதிலிருந்து விதி மட்டும் மாறுபடுகின்றது. நம்முடைய இறை நம்பிக்கைக்கு விதியை அல்லாஹ் சோதனையாக ஆக்கியுள்ளான். விதியை நம்பினால் அதிகமான நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது.
விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. நடந்து முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே விதியின் மீது பலிபோட முடியும்.
அதாவது விதியை நம்பக்கூடியவரின் வாழ்க்கையில் பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் அவருக்கே ஏற்படுகிறது. அதே போல் சந்தோஷமான நிகழ்வுகளை அவர் சந்திக்கும் போது ஆணவம் கொள்ளாமல் எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படித்தான் நடந்தது என்று பணிவுடன் நடப்பதற்கும் இந்த விதி காரணமாக உள்ளது.
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ(22)لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ(23)57
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 57:22)
விதியை நம்பும்போது சில சிக்கலான கேள்விகள் எழுவதைப் போன்று விதியை நம்பாவிட்டால் அப்போதும் சிக்கலான கேள்விகள் எழத்தான் செய்கின்றன. எனவேத் தான் விதிதொடர்பாக சர்ச்சை செய்ய வேண்டாம் என மார்க்கம் வழிகாட்டியுள்ளது.
82 حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو مَا غَبَطْتُ نَفْسِي بِمَجْلِسٍ تَخَلَّفْتُ فِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا غَبَطْتُ نَفْسِي بِذَلِكَ الْمَجْلِسِ وَتَخَلُّفِي عَنْهُ رواه إبن ماجه
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:நபித்தோழர்கள் விதி தொடர்பாக தர்க்கம் செய்துகொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது தோழர்களிடம் வருகை தந்தார்கள். உடனே கோபத்தால் அவர்களின் முகம் மாதுளை முத்துக்களைப் போன்று சிவந்துவிட்டது. இவ்வாறு செய்யுமாறு நீங்கள் உத்தரவிடப்பட்டீர்களா? அல்லது இதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? குர்ஆனில் ஒன்றை மற்றொன்றுடன் மோதவிடுகின்றீர்களே. உங்களுக்கு முன்னால் உள்ள சமுதாயங்கள் விதியில் சர்ச்சை செய்த காரணத்தினால் தான் அழிந்துபோனார்கள் என்று கூறினார்கள். (இப்னு மாஜா 82)
எனவே விதிதொடர்பாக நாம் சர்ச்சை செய்யக்கூடாது. நடந்து முடிந்த விஷயங்களுக்கு விதியை காரணம் காட்டலாம். இனி நடக்கவிருக்கின்ற விஷயங்களைப் பொறுத்தவரை விதியை காரணம் காட்டி செயல்படாமல் இருந்துவிடக்கூடாது. நாம் செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
விதியை காரணம் காட்டி நல்லமல்கள் செய்யாமல் இருந்துவிடலாமா? என்று நீங்கள் கேட்ட கேள்வியை நபித்தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில்:
1362 حَدَّثَنَا عُثْمَانُ قَالَ حَدَّثَنِي جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كُنَّا فِي جَنَازَةٍ فِي بَقِيعِ الْغَرْقَدِ فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَعَدَ وَقَعَدْنَا حَوْلَهُ وَمَعَهُ مِخْصَرَةٌ فَنَكَّسَ فَجَعَلَ يَنْكُتُ بِمِخْصَرَتِهِ ثُمَّ قَالَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ مَا مِنْ نَفْسٍ مَنْفُوسَةٍ إِلَّا كُتِبَ مَكَانُهَا مِنْ الْجَنَّةِ وَالنَّارِ وَإِلَّا قَدْ كُتِبَ شَقِيَّةً أَوْ سَعِيدَةً فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نَتَّكِلُ عَلَى كِتَابِنَا وَنَدَعُ الْعَمَلَ فَمَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ السَّعَادَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ السَّعَادَةِ وَأَمَّا مَنْ كَانَ مِنَّا مِنْ أَهْلِ الشَّقَاوَةِ فَسَيَصِيرُ إِلَى عَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ قَالَ أَمَّا أَهْلُ السَّعَادَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ السَّعَادَةِ وَأَمَّا أَهْلُ الشَّقَاوَةِ فَيُيَسَّرُونَ لِعَمَلِ الشَّقَاوَةِ ثُمَّ قَرَأَ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى الْآيَةَ رواه البخاري
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் பகீஉல் கர்கத் என்னும் பொது மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டோம் அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தலை குனிந்தவர்களாகத் தமது கைத்தடியால் தரையைக் கீறிக்கொண்டு, “உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை; தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை” எனக் கூறினார்கள்.
உடனே ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதை நம்பி, (நற்)செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள்தாமே?” என்றதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “”நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்கு நல்லமல்கள் செய்வது எளிதாக்கப்படும்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்” என்று கூறிவிட்டு, “”எவர் தான தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகின்றாரோ…” என்ற (92: 5,6ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள் (புகாரி 1362)
நாம் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்பது நமக்குத் தெரியாது. நான் நரகவாசி என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தாலே இனி நான் நல்லறங்கள் செய்து என்ன புண்ணியம் என்று கேட்பதில் நியாயம் இருக்கின்றது. நமது முடிவு என்னவென்பது நமக்குத் தெரியாமல் இருக்கும் போது நல்லதை நோக்கியே நமது முயற்சி இருக்க வேண்டும்.
உலக விஷயங்களில் இவ்வாறு தான் நாம் நடந்துகொள்கிறோம். அல்லாஹ் நமக்கு விதித்த செல்வம் வரும் என்று கூறிக்கொண்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கமாட்டோம். நம்மால் முடிந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்வோம். நோய் வந்தால் இறைவன் நாட்டப்படி நடக்கட்டும் என்று கூறி மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. நமது முயற்சியையும் மீறி ஏதேனும் நடந்தாலே விதியை காரணம் காட்டுவோம். இதுபோன்றே நல்லமல்கள் விஷயத்திலும் நாம் நடந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம்மை ரோபோ மிஷின்களைப் போன்று சுயவிருப்பம் வழங்கப்படாத படைப்பாக படைக்கவில்லை. மாறாக நல்லவற்றையையும் தீயவற்றையையும் நமக்கு காட்டித்தந்துள்ளான். இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்கின்ற அதிகாரத்தையும் ஆற்றலையும் இந்த உலகத்தில் நமக்கு வழங்கியிருக்கிறான். அறிவைத் தந்திருக்கின்றான். நமக்கு நேர்வழி காட்டுவதற்கு ஒரு வேதத்தையும் இறைத்தூதரையும் அனுப்பியுள்ளான். எனவே சிந்தித்து நல்லவற்றை செய்து தீயவற்றை விட்டும் விலகி இருப்பது தான் அறிவுடமை. அப்போது தான் வெற்றி கிடைக்கும். விதியை நம்பச் சொன்ன அல்லாஹ் தான் நல்லறங்களை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறான்.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدً ا(110)18
”நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் இறைவன் ஒரே ஒரு இறைவனே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!” (அல்குர்ஆன் 18:110)
அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?
வினா: ‘அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறை வனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’
பதில்: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், இறைவன் என்பவன் பலவீனனாக, கையாலாகாத வனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.
‘‘நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்’‘ என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.
நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.
நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.
நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள் ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.
அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.
இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே” என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வ மான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.
அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.
எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே! என்று இஸ்லாம் கூறவில்லை.
மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.
எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.
அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவா வது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.
ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
விதியை நம்புகின்றவன் ‘நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?’ எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொரு வரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 57:23)
விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.
”இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல” என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.
‘‘நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்’‘ என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான்.
இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
சிலர் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். ‘நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம்’ என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயணும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.
விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற்கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர்.
மேலும் அவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் விதி’ இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும் பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.
இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா?
தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.
Source: http://aleemqna.blogspot.com/2010/07/blog-post_6578.html