அபுல் ஹஸன் நத்வி ரஹ்மதுல்லாஹி அலைஹி
‘இந்த முஸ்லீம் சமுதாயம் தன்னுடைய தாய்நாடான இந்தியாவிற்காக, அதன் சுதந்திரத்திற்காக, அதன் விடுதலைக்காக, அதன் உரிமைகளைக் காப்பதற்காக, எந்த அளவுக்கு உடல், பொருள், சொத்து, சுகம் அனைத்தையும் தியாகம் செய்ததோ அந்த அளவுகூட இந்த சத்திய இஸ்லாத்திற்காக – சத்திய மார்க்கத்திற்காக, அதை நிலை நாட்டுவதற்காக, அதன் வளர்ச்சிக்காக தியாகங்களைச் செய்ய முன்வரவில்லை.’
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் இந்த தீனை நிலைநாட்டுவதற்காகவே மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தனர். அங்கிருந்தபடியே மக்காவாசிகளின் அடக்குமுறைகளை ஒடுக்கி, அரபகம் முழுவதிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டினர். மனித உரிமைகளைப் பறித்துவந்த அந்த அநீதக்காரர்களை அடக்கி மனித உரிமைகளைப் பெற்றுத் தந்தனர். ஆனால், நாம் பயந்து கொண்டு நமது அடையாளத்தையே மறைத்து வருகிறோம். எவ்வளவு பெரிய கைசேதம்?பல்லாயிரம் கோடிகளை செலவழித்து ஆஸ்பத்திரி, அனாதை இல்லம், முதியோர் இல்லம் என்ற பெயரில் பல அமைப்புகளை ஏற்படுத்தி, உலக அளவில் தங்களது செல்வாக்கையும், தங்கள் கொள்கையையும் நிலைநாட்டி வரக்கூடிய யூதர்களையும், கிருஸ்துவர்களையும் விடுங்கள். தங்களுடைய இலட்சியங்களையும், கொள்கைகளையும் நிலைநாட்டுவதற்காக இந்தியாவிலேயே (கட்சிகளின் பெயரிலும், மதங்களின் பெயரிலும், ஜாதிகளின் பெயரிலும்) பல கூட்டத்தார்கள் எவ்வளவு தொகைகளை செலவழிக்கிறார்களோ, அதற்காக அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்களோ அதில் பத்தில் ஒரு பங்காவது முஸ்லீம் சமுதாயத்தினர் தங்கள் மார்க்கத்திற்காக, தங்கள் சமுதாயத்தினருக்காக செய்துள்ளனரா?
இஸ்லாமிய சமூகம் தன்னுடைய மார்க்கத்தின், இறை விசுவாசத்தின் மதிப்பை உணராமல், தம்முடைய குழந்தைகளின் மார்க்க விஷயத்தில் அவர்களுக்காக சில சிரமங்களைக்கூட சகித்துக் கொள்ளத் தயாராகாமல் தவறான சிந்தனையில் மூழ்கியருப்பது சரிதானா?
ஒரு கவிஞர் சொன்னது போல் ‘ஃபிர்அவ்னுக்கு இன்றைய கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் கற்றுக் கொடுக்கக்கூடிய தவறான முறைகள் தெரிந்திருக்கவில்லை. அப்படி தெரிந்திருந்தால், இலட்சக்கணக்கான குழந்தைகளைக் கொன்று தனக்கு அவப்பெயரை தேடியிருக்க மாட்டான்.’
‘கல்வி போதனை மாறுவதால் உள்ளமே மாறிவிடும்’
தெளிவாகக் கூறப்போனால், முஸ்லீம்கள் அதிகமாக வாழக்கூடிய, இஸ்லாமிய நாடுகள் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் கூட, தங்களுடைய வருங்கால சந்ததிகளின் ஈமானையும் மார்க்கப்பற்றையும், பாதுகாக்க வேண்டுமென்றால், பல ஏற்பாடுகளையும், தியாகங்களையும் செய்ய வேண்டியுள்ளது. அங்கும்கூட தியாகங்கள், பல ஏற்பாடுகள் இல்லாமல் இஸ்லாம் மார்க்கத்தை நிலைநிறுத்திவிட முடியாது.
ஆக, நிலைமை இப்படியிருக்க நாம் மைனாரிட்டியாக, மாற்றுமதத்தினரிடையே கலந்துறவாடி வரும் நாம், அறிந்தோ அறியாமலோ, உணர்ந்தோ உணராமலோ மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதற்கும், தடுக்கப்பட்டதற்கும், நீதிக்கும், அநீதிக்கும், சத்திய சன்மார்க்கத்திற்கும், அசத்திய மார்க்கத்திற்கும் இடையே வித்தியாசமே தெரியாத அளவுக்கு ஒரு காலம் வரப்போகிற (இந்தியாவின்) சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் இந்தியாவில் மைனாரிட்டியாக (குறைந்தவர்களாக) இருக்கிறோம். இருப்பினும்கூட 800 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளோம். ஒரு வரலாறு ஒரு தடவை நிகழ்ந்து விட்டால், அந்த வரலாற்றை அழிக்கவே முடியாது. அத்துடன் மற்றொரு விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். ‘இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது மதவாதத்தையும், மெஜாரிட்டி, மைனாரிட்டி பிரச்சனையையும் ஏற்படுத்தி சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய அக்கிரமத்தின் நிழல், அதன் பாதிப்புகள் இன்றும் நம்மீது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
அத்துடன், நாம் நம்முடைய தாய்நாடான இந்தியாவிற்கு நம் முன்னோர்கள் செய்த தியாகங்கள், அதில் செய்த சீர்திருத்தங்கள், அதில் ஏற்படுத்திய அடையாளச் சின்னங்கள், வளர்ச்சி போன்றவைகளைப் பற்றிய உண்மையான வரலாற்றை படிக்கிறோமா அறிகிறோமா என்றால் இல்லை, முயற்சிக்கக்கூட இல்லை.
நம் முன்னோர்கள், மனித சமூகத்திற்குப் புரிந்துள்ள தொண்டுகள் இந்நாட்டில் நாலாபுறமும் பரவி, நிலை நின்று பிரகாசித்து வருகிறது. மேலும் இஸ்லாமிய மார்க்கம் உலகளாவிய ரீதியில் மனித சமுதாயத்திற்குப் புரிந்துள்ள உதவிகளையும், அதனால் ஏற்பட்டுள்ள பயன்களையும் அறிவதற்கு நாம் இதுவரை முன்வந்துள்ளோமா? அதைப்பற்றிய வரலாறு நூல்களை முஸ்லீம்கள் யாரேனும் எழுதியுள்ளார்களா?
குறிப்பாக, முஸ்லீம்கள் உலக மொழிகளில் இஸ்லாமிய வரலாறுகளை எழுதியுள்ளார்களா? என்றால் இல்லை என்றே கூறலாம். மிகக்குறைவானதையே, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிக சொர்ப்பமானவர்களே எழுதியுள்ளனர்.
இந்திய வரலாற்றில் நம்முடைய வரலாறு அயல்நாட்டு வரலாறல்ல! மாறாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதே நாட்டில் வாழ்ந்து வரும் சமுதாயத்தின் வரலாறாகும். இந்த நீண்ட காலத்திலே பட்ட சோதனைகள், அடைந்த வேதனைகள், படைத்த சாதனைகள், வெற்றித் தோல்விகளும் சாதாரணமாக வந்து போகும் ஒரு சமூகத்தினருக்கு ஏற்படாது என்பது தெளிவான விஷயமாகும்.
இருப்பினும் இஸ்லாமிய சமுதாயம் செய்த சாதனைகள், பட்ட துன்பங்கள், அவர்களின் உண்மையான வரலாறு அனைத்திற்கும் சாயம் பூசப்பட்டு கொடூரமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். ஆட்சிக்குத் தகுதி பெற்றுள்ள, உயிரோட்டமுள்ள சமுதாயத்தின் வரலாற்றின் முழு பகுதியையும் அழித்துவிட முடியாது. எனவே அதற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படுகிறது.
இப்போது சிந்தித்து முடிவு கூறுங்கள்!
‘நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களுடைய மார்க்கத்தை பாதுகாப்பதற்கு மார்க்கக் கல்வி எந்தளவுக்கு அவசியம்? தங்களுடைய வருங்கால சந்ததிகளின் உள்ளங்களில் இறைநம்பிக்கையையும், இஸ்லாம் மார்க்கப் பற்றையும், பதிய வைப்பதற்காக எந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு என்னென்ன ஏற்பாடுகளை எப்படி எல்லாம் செய்யலாம்? சிந்தியுங்கள், தெளிவு கிட்டும் வரை சிந்தியுங்கள். அதன்பிறகு முழு ஈடுபாட்டுடன் தியாக உணர்வுடன் செயல்படுங்கள்.
மொழியாக்கம்: மவ்லவீ. எஸ்.எம்.முஹம்மது அபூபக்கர் சித்தீக் காஷிஃபி, காசிமி.