மானிட உள்ளத்தின் படித்தரங்கள்!
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி
[ பொது அறிவு ஏற்பட ஏற்படப் பகுத்தறிவு பிரகாசிக்கிறது. ஒரு மனிதனின் அறிவுத்திறனை ஒட்டியே அவனது பகுத்தறிவு அமைந்திருக்கிறது. ஞானம் இல்லையேல் பகுத்தறிவு பயனற்றுப் போய்விடும்.
இறைவனின் திருத்தூதர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள். ஏனெனில் வல்ல நாயன் அவர்களுக்குப் பரந்த ஞானத்தை கொடுத்திருந்தான். ஞானம் விரிவடையும்போது பகுத்தறிவின் தரம் தானாகவே விரிவடைகிறது.
எல்லாம் தெரிந்த மனிதனும், எதுவுமே தெரியாத மானிடனும் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படித்தரத்தில் இருக்கின்றான்.]
சினமும் காமமும் உள்ளத்தின் ஆற்றல்களில் மிக முக்கியமானவை. இவை சில சமயம் உள்ளத்தின் கட்டளைக்கும் பகுத்திறிவின் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டு நடக்கின்றன. அப்போது அவற்றினால் உள்ளத்திற்குப் பெரும் பயன் கிடைக்கிறது. இந்த நேரத்தில் உள்ளம் தங்குதடையின்றி இறைவழியில் முன்னேறுகிறது.
ஆனால், எல்லா நேரத்திலும் அவை உள்ளத்திற்கு அடிபணிவதில்லை. அப்போது ஏற்படும் விபரீதங்கள் கணக்கிட முடியாதவை. உணர்ச்சிக்கு அடிமையானவர்கள் எவ்வளவு தூரம் பின்தங்கி விடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!
கோபமும், காமமும் உள்ளாற்றல்களாக இயங்கும் அதே வேளையில் அவயங்கள் வெளியாற்றல்களாகப் பயன்படுகின்றன. ஆனால் இவை மனிதனுக்கு மட்டும்தான் அருளப்பட்டிருக்கின்றன என்று எண்ணிவிட வேண்டாம். இந்த ஆற்றல்கள் மனிதனுக்கு மட்டுமின்றி, மிருகங்களுக்கும் அருளப்பட்டிருக்கின்றன.
சினம், காமம், பசி, தாகம் முதலிய உணர்ச்சிகள் மனிதனுக்கு இருப்பதுபோல் மிருகத்துக்கும் இருக்கின்றன. மனிதனின் உடலில் கண், காது, வாய் முதலிய வெளியுறுப்புகள் அமைந்திருப்பதுபோல் மிருகத்தின் உடலிலும் அமைந்திருக்கின்றன. மனிதன் தின்பதுபோல் மிருகமும் தின்கிறது. அவன் உறங்குவதுபோல் அதுவும் உறங்குகிறது.
விரோதியைப் பார்த்து மனிதன் பாய்வதுபோல் கீரியைப் பார்த்து பாம்பு சீறுகிறது. ஓநாயைக்காணும் ஆடு தப்பியோட ஆயத்தமாகிறது. ஓநாய் தன் விரோதிகளில் ஒன்று என்று ஆடு புரிந்து கொள்கிறது. மறுவினாடி உயிரைக் காத்துக்கொள்ள ஓட்டம் பிடிக்கிறது – ஆயதம் தாங்கிய எதிரியைக் கண்டதும் ஆயுதமற்ற மனிதன் ஓட்டம் பிடிப்பதுபோல!
எனவே ஐம்புலன்களாலோ உள்ளுணர்வுகளாலோ மனிதன் சிறப்படைந்திருக்க முடியாது. மனிதனின் சிறப்புக்கும் மதிப்புக்கும் காரணமான ஆற்றல் எது?
மனிதனின் உள்ளத்திற்குத் தனித்திறமை – தனியாற்றல் ஒன்றுண்டு. அந்த ஆற்றல்தான் அவனை மற்ற உயிரிணங்களைவிடச் சிறப்புள்ளவனாக்குகிறது. அந்த ஆற்றலின் விளைவால்தான் அவன் இறைவனை நெருங்குவதற்குரிய வசதியையும் வாய்ப்பையும் பெறுகிறான். மனிதனின் உள்ளத்தில் ஞானத்திற்கும் சிந்தனைக்கும் முக்கியமான இடமுண்டு. எனவே அவன் இம்மையைப் பற்றிய விபரத்தையும், மறுமையைப் பற்றிய தெளிவையும் தனக்குள் ஏற்படத்திக் கொள்கிறான்.
‘ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியாது’ என்பது ஒரு தத்துவம். அதைப் புரிந்து கொண்ட மனிதன் தன் சிந்தனைத் திறனால் அதற்குத் தெளிவு கொடுக்கிறான். இந்த தத்துவத்தை அறியும் ஆற்றல் ஐம்புலன்களில் எதற்கும் கிடையாது. உள்ளம்தான் இதை அறிகிறது. இந்த ஆற்றல் மனிதனின் உள்ளத்திற்கு மட்டுமே அருளப்பட்டிருக்கிறது. இந்த திறமை வேறு எந்த உயிரிணத்திற்கும் கிடையாது.
மனிதனின் கண்கள் ஒன்றைப் பார்க்கின்றன. அவன் செவிகள் வேறொன்றைக் கேட்கின்றன. கண்ணால் கிடைத்த அறிவையும் அவன் பகுத்தறிவு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறது. அது அவற்றிற்குப் புதியதொரு தோற்றத்தை கொடுக்கிறது.
ஒவ்வொரு காரியத்தையும் மனிதனின் உள்ளம் ஆராய்ந்து பார்க்கிறது. செயல்களின் முடிவையும் அதன் நிலையையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் உள்ளத்திற்கு கண்டிப்பாய் உண்டு.
வயதுவந்த மனிதனுக்கு பகுத்தறிவு பிறக்கிறது. சிறுவர் சிறுமியற்கு பகுத்தறிவு கிடையாது. இதனால்தான் அவர்கள் பாம்பைக்கூட பிடித்துவைத்து விளையாட ஆசைப்படுகிறார்கள், விளையாட்டின் மோகத்தில் சத்துள்ள உணவை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.
பருவவயது வந்ததும் பகுத்தறிவு பிறக்கிறது. ஆனால் அது பிறக்கும்போதே முழு ஆற்றலையும் பெற்றவிடுவதில்லை. பொது அறிவு ஏற்பட ஏற்படப் பகுத்தறிவு பிரகாசிக்கிறது. ஒரு மனிதனின் அறிவுத்திறனை ஒட்டியே அவனது பகுத்தறிவு அமைந்திருக்கிறது. ஞானம் இல்லையேல் பகுத்தறிவு பயனற்றுப் போய்விடும். இறைவனின் திருத்தூதர்கள்தான் மிகச்சிறந்த பகுத்தறிவாளர்கள். ஏனெனில் வல்ல நாயன் அவர்களுக்குப் பரந்த ஞானத்தை கொடுத்திருந்தான். ஞானம் விரிவடையும்போது பகுத்தறிவின் தரம் தானாகவே விரிவடைகிறது.
அறிவை அடைவதற்காக சிலர் கல்லூரிக்குச் செல்கிறார்கள். வேறுசிலர் அனுபவத்தாலும், சிந்தனையாலும் அறிவைப் பெறுகிறார்கள். அனுபவத்தால் அறிவைப் பெறுகிறவர்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. இவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு உண்டு. சிலரது அறிவு கடலைப்போன்றிருக்கும், சிலரது அறிவு மிகக்குறைவானதாக இருக்கும். கல்லூரியில் படித்தாலும் சரி, அனுபவத்தால் உணர்ந்தாலும் சரி, இந்த படித்தரங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும். சிலருக்கு கல்லூரி கற்றுக் கொடுத்தால், வேறு சிலருக்கு இறைவனே ஆசானாக இருந்து கற்றுக் கொடுக்கிறான்.
சாதாரண பட்டதாரியின் பகுத்தறிவுக்கும் இறைத்தூதரின் பகுத்தறிவுக்குமிடையே மிகப்பெரும் வித்தியாசம் உண்டு. சாதாரணமாக திருத்தூதர்கள் பள்ளிக்கூடம் சென்று படிப்பதில்லை. அவர்களை பட்டதாரிகள் என்று நம்மால் சொல்லவும் முடியாது. எனினும் அவர்களுக்கு ஞானோதயத்தின் மூலம் தெளிவு கிடைக்கிறது. கண்ணாடி போன்ற அவர்களின் மனம் ஞானத்தை ஈர்த்துக் கொள்கிறது.
எனவே திருத்தூதர்கள் பகுத்தறிவாளர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறார்கள். இதைவிடச் சிறந்த பகுத்தறிவை வேறு எந்தத் துறையினரிடத்திலும் காணமுடியாது. இந்தப் படித்தரத்திற்குக் கீழே எத்தனையோ படித்தரங்கள்!
எல்லாம் தெரிந்த மனிதனும், எதுவுமே தெரியாத மானிடனும் உலகில் இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு படித்தரத்தில் இருக்கின்றான்.
சிலர் பல படித்தரங்களைக் கடந்து நல்லதொரு நிலைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தம்முடைய படித்தரத்தையும் நிலையையும் நன்கு உணர்கிறார்கள்.
தனக்குக்கீழுள்ள படித்தரங்களும் அவர்களுக்கு நன்றாகத் தெரிகின்றன. அவற்றையெல்லாம் கடந்துதானே அவர்கள் இப்போதைய நிலைக்கு – படித்தரத்துக்கு வந்திருக்கிறார்கள்!
ஆனால் தமக்கு மேலுள்ள படித்தரத்தை அவர்கள் கண்டிப்பாய் உணர முடியாது. சிறுவன் ஒருவனுக்கு கல்வியின்பத்தை ஆற்றல் உண்டா என்ன?!
ஏழுவயதுச் சிறுவன் வீதியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். விளையாட்டிலுள்ள இன்பம் அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மணவாழ்க்கையில் இன்பம் நுகரும் இளைஞனிpன் நிலையை அந்தச் சிறுவனால் உணர்ந்து கொள்ள முடியுமா?!
ஓர் இளைஞன், இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்துவிட்ட அவன் இல்வாழ்க்கையில் இன்பம் காண்கிறான். இந்த இன்பத்தின் தன்மை அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. ஏனென்றால், இது இப்போது அவன் இருக்கும் படித்தரம். எனவே இந்தப் படித்தரத்தின் நிலையை சுத்தமாக உணர்கிறான். அதே சமயத்தில், ஏழுவயதுச் சிறுவனாக இருந்தபோது விளையாட்டில் அனுபவித்த இன்பத்தையும் அவன் நன்கு உணர்கிறான். ஏனெனில் ‘விளயாட்டுப்பருவம்’ என்ற படித்தரத்தை கடந்துதான் அவன் இப்போதிருக்கும் படித்தரத்துக்கு வந்திருக்கிறான். ஆனால், இந்த இளைஞனால் வயது முதிர்ந்தவர்கள் இறை வணக்கத்தில் அனுபவிக்கும் இன்பத்தை கண்டிப்பாய் உணர முடியாது. காரணம், அது அவன் இன்னும் அடையாத படித்தரம்.
சிறுவனால் இளைஞனின் நிலையை அறிய முடியாதது போல், இளைஞனால் வயோதிகரின் நிலையை உணரமுடியாதது போல் – சாதாரண மனிதர்களால் இறைத்தூதர்களின் நிலையை உணர முடியாது. இந்தப் படித்தரத்தை அடையாத எவராலும் இந்த உண்மையை அறிய முடியாது.
மூலம்: இமாம் கஜ்ஜாலி ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்களின் ‘இஹ்யா உலூமித்தீன்’ உடைய ஒரு பகுதியான ‘அஜாயிபுல் கல்பு’. மொழியாக்கம்: எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி.