Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

”ஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்!”

Posted on October 15, 2010 by admin

  ரவிக்குமார் 

உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா? அதில் இணைய வசதி செய்யப்பட்டு இருக்கிறதா? வயதுக்கு வந்த பிள்ளைகள் உங்களுக்கு இருக்கிறார்களா? அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் நிச்சயம் ‘ஃபேஸ்புக்’ பயன்படுத்துபவராக இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணைய தளம் இளைஞர்களிடையே பிரபலமாகி விட்டது.

இளைஞர்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினரும் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் மொபைல் போன் பயன்பாட்டுக்கு அடுத்தபடியாக வெகுவேகமாகப் பரவி வரும் விஷயம் இந்த ஃபேஸ்புக் தான்!

டைப் அடிக்கத் தெரியாத முதியவர்களும் இன்று கணினியைப் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். நமது நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, கணினிப் பயன்பாட்டை அதிகரித்துக்கொண்டே போகிறது. மொபைல் போன் அளவுக்கு கணினிப் பயன்பாடு இல்லையென்றபோதிலும் ஒப்பீட்டளவில் இதன் வளர்ச்சி அபாரமானதாகவே இருக்கிறது.

கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களும்கூட மின்னஞ்சல் முகவரி ஒன்று வைத்திருக்க வேண்டும் என்பது இன்றைய எதார்த்தமாக மாறியுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கின்ற எவரும் தன்னுடைய பயோடேட்டாவில் இப்போது அஞ்சல் முகவரியோடு மின்னஞ்சலையும், மொபைல் போன் எண்ணையும் தவறாமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

கணினி என்றாலே அது இண்டர் நெட்டுடன் இணைந்த ஒன்றுதான் என்று ஆகிவிட்டது.

அலுவலகங்களில் உள்ள கணினிகளும் இன்று இணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இணையப் பயன் பாட்டின் உபவிளைவுதான் ஃபேஸ்புக் போன்ற ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணைய தளங்களின் பெருக்கம். ‘மை ஸ்பேஸ்,’ ‘ஆர்குட்’ என இப்படியான இணையதளங்கள் பல இருந்தாலும் ஃபேஸ்புக்தான் இன்று எல்லாவற்றிலும் முதலிடம் பிடித்திருக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2009-ம் ஆண்டு இறுதியில் இதைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக இருந்தது. தற்போது கோடியைத்தாண்டியிருக்கும்!’

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக். தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார்.

தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும். காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.

இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி!

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள்.

இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

‘எனக்கு இன்று மனசு சரியில்லை’ என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும், குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்தி வந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.

மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் ‘சமூக மூலதனம்’ எனச் சொல்லப்படுகிற சமூக உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பு என்றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம்.

கூட்டுச் செயல்பாட்டிலிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.

ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள்.

தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.

இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமளவில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும்.

தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோஸ இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது.

இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்முடைய ‘ப்ரைவஸி’ பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதானவையாக இல்லை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 14 = 24

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb