எம்.ஏ.முஹம்மது அலீ
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் எங்களிடையே உரையாற்றினார்கள், அதில், போரில் கிடைக்கும் பொருட்களைத் திருடும் பிரச்சனையைக் குறித்து பெரும் முக்கியத்துவத்துடன் எடுத்துரைத்தார்கள்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;
1. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவரது கழுத்தில் ஒட்டகம் ஒன்று அமர்ந்து உரக்க அழுதுகொண்டு இருக்க, அவர் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள்!’ (இப்பாவத்தின் விளைவிலிருந்து காப்பாற்றுங்கள்) என்று மன்றாட, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.
2. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவரது கழுத்தில் குதிரை ஒன்று அமர்ந்து கனைத்துக் கொண்டிருக்க, அவர் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட வாருங்கள்!’ என்று மன்றாட, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.
3. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவரது கழுத்தில் ஆடு ஒன்று அமர்ந்து கத்திக்;கொண்டிருக்க, அவர் அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிட வாருங்கள்! என்று கூவியழைத்துக் கொண்டிருக்க, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.
4. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவரது கழுத்தில் ஒரு மனிதர் அமர்ந்து கொண்டு முனங்கிக் கொண்டிருக்க, அவர் அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள் (இப்பாவத்தின் விளைவிலிருந்து காப்பாற்றுங்கள்) என்று மன்றாட, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.
5. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவருடைய கழுத்தில் துண்டுத்துணிகள் பறந்து கொண்டிருக்க, அவர் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள்!’ என்று முறையிட்டுக் கொண்டிருக்க, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.
6. நான் மறுமைநாளில் உங்களில் எவரையும் இந்நிலைமையில் காணக்கூடாது. அதாவது, அவரது கழுத்தில் தங்கமும் வெள்ளியும் சவாரி செய்ய, அவர் ‘அல்லாஹ்வின் தூதரே, எனக்கு உதவிடுங்கள்!’ என்று அழைத்திட, நானோ ‘சிறிதும் உனக்கு உதவிட முடியாது. உலகிலேயே இச்செய்தியை உனக்கு எடுத்துக் கூறிவிட்டேன்’ என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்பட வேண்டாம். (நூல்: புகாரி, முஸ்லிம்)
போரில் கலந்து கொள்ளுதல் என்றாலே உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. உயிரை துச்சமாக எண்ணுகின்றவர்களால் மட்டுமே போரில் கலந்து கொள்ள முடியும். அதுவும் மார்க்கப்போரில் கலந்து கொள்ளுவதின் சிறப்பைப்பற்றி சொல்லாமலே எல்லோருக்கும் புரியும். அதில் கொல்லப்பட்டால் மிக உயர்வான ஷஹீதுடைய அந்தஸ்த்தை அவ்வீரர் பெறுகிறார்.
அதே வேளையில் உயிரைப்பணயம் வைத்து போரில் கலந்து கொண்டாலும், அவர் போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் திருடினால் அவரது அத்தனை தியாகமும் வீணாகி, மறுமையில் இறை தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை மேற்கண்ட நபி மொழி கடுமையாக எச்சரிக்கிறது.
அப்படி, உயிரைத் துச்சமாக மதித்து மார்க்கத்திற்காக போர் புரிந்தும்கூட அதன் நன்மையை அவர்கள் இழக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய கைசேதம். அதுவும் ‘பாவிகளுக்கு எனது பரிந்துரைகள் உண்டு’ என்று சொன்ன பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ‘உங்களுக்கு நான் சிறிதும் உதவிட முடியாது’ என்று சொன்னார்களென்றால் பொருளைத் திருடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.அதுவும் குறிப்பாக, இன்று நிர்வாகத்தில் இருக்கும் பலர் கொஞ்சம்கூட வெட்கமின்றி பொதுச்சொத்தை தன்சொத்தாக ஆக்கிக்கொண்டு சிறிதுகூட இறையச்சமின்றி வாழ்ந்துவருவதை பார்க்கும்போது ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை!
வசூல் என்கின்ற பெயரில் இன்றைக்கு ஏராளமாக, பொதுமக்களின் பணம் ஏப்பம் விடப்படுகிறது. இதற்கெல்லாம் அவர்கள் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்கின்ற எச்சரிக்கையை அவர்களது நலன் விரும்பிகள் எடுத்துரைக்க வேண்டும். அதை விடுத்து அவர்களும், தனக்கும் அதில் ஒரு பங்கு என்று இன்பமாக இங்கு வாழ்வார்களேயானால் மறுமை அவர்களுக்கும் துன்பமாகவே அமையும். அல்லாஹ் காப்பாற்றுவானாக!
www.nidur.info