விஞ்ஞானமா, மெய்ஞானாமா?
[ விஞ்ஞானம் – மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே!]
விஞ்ஞானம், மெய்ஞானம் – இவையிரண்டில் எது உயர்வானது என்ற கேள்வி எழுமானால் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்வோர் மெய்ஞானமே உயர்வானது என்றும், நவீனவாதிகள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருப்போர் விஞ்ஞானமே உயர்வானது என்றும் சொல்வதை பார்க்கிறோம்.
ஆனால் உண்மையாக சிந்திப்பவர்களுக்கு இவையிரண்டுமே சிறந்ததுதான், இவையிரண்டையும் உருவாக்கிவன் ஒருவனே என்பது மட்டுமின்றி இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையது என்பதை விளங்கிக் கொள்வார்கள்.
என்ன இப்படி சொல்கிறீர்கள்?! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் என்றல்லவா உலகம் கருதிக் கொண்டிருக்கிறது! நெருக்கம் எப்படி ஏற்படும் என்கிறீர்களா?!
ஆம் சகோதரரே! ஏற்படும், நிச்சயமாக இவையிரண்டுக்குமுள்ள நெறுக்கமான தொடர்பை சிந்தித்தால் எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.
ஆன்மீகவாதிகள் போன்றிருக்கும் சிலரிடம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினால், பெரும்பாலும் அவைகள் மனிதனை வழிகெடுக்க ஷைத்தானால் உருவாகக்கப்பட்ட வழிகேடுகள் என்று சொல்லக்கூடியவர்களும் உண்டு. விஞ்ஞானத்தால் மெய்ஞானத்தை நெருங்கக்கூட முடியாது என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதே சமயம் அந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறுவதும் இல்லை. இது எங்குமுள்ள எதார்த்த நிலை.
இந்த உலகைப் படைப்பதற்கு முன்பே எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நிர்ணயித்து விட்டான். அவைகளை சங்கிலித் தொடராக கியாமநாள் வரை வெளிப்படுத்திக் கொண்டே வருவான். அப்படி வெளிப்படுத்தக்கூடிய ஒரு உபகரணமாகத்தான் மனிதனைப் படைத்து தனது சாம்ராஜ்யத்தில் உலவவிட்டிருக்கிறான். அப்படி அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாஹ் வழங்கிய அறிவைக்கொண்டு கண்டுபிடித்தவைகளை ‘தனது ஆற்றலால்’ என கருதிக்கொண்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என பெயரிட்டு களிக்கின்றான்.
உண்மையில் விஞ்ஞானம் – மெய்ஞானம் இவையிரண்டுமே அல்லாஹ்வை அறிவதற்காக அவனால் மனதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையே! இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மிக நெறுக்கமானது என்பதோடு ஒன்று மற்றொன்றை வலுப்படுத்தவும் செய்கிறது என்பதே உண்மை.
ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்தால் தண்ணீர்.
ஹைட்ரஜனின் எறியக் கூடியது!
ஆக்ஸிஜன் இல்லாமல் எதுவுமே எரியாது!
எரியக்கூடிய தன்மை கொண்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து தண்ணீராக மாறும்போது அது எரியும் நெருப்பை அணைக்கக் கூடியதாக மாறுகிறதே எப்படி? இது ஆச்சர்யமான முரண்பாடல்லவா? இந்த தன்மையை தண்ணீருக்குள் வைத்தவன் அல்லாஹ் அல்லவா!
மனிதனைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் தண்ணீரைப் படைத்துவிட்டானே! ஆக ஏற்கனவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டவைகளை மனிதன் சிந்தித்து ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதை தனது கண்டுபிடிப்பாக பெயரிட்டு அவைகளுக்கு விஞ்ஞானம் என்று பெயர்சூட்டி மகிழ்கின்றான் என்பதே உண்மை.
விஞ்ஞானத்தால் அனைத்தையும் அறிய முடியாது, விஞ்ஞானம் தோற்கிற அல்லது அறிய முடியாத இடங்களுக்குக்கூட மெய்ஞானம் செல்லும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்று.
பொதுவாக மனிதன், கண்களால் கண்டு அறிவால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளை விஞ்ஞானம் எனவும், ஆத்மார்த்தமான இறைநம்பிக்யை மெய்ஞானம் எனவும் விளங்கி வைத்துள்ளான்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் கண்களால் காண்பதையும் நம்புவார்கள், (கண்களால் காண முடியாத) மறைவானவற்றையும் நம்புவார்கள்’ .
மெய்ஞானம் மட்டுமின்றி விஞ்ஞானமும் இறைநெருக்கத்தை பெற்றுத்தரக் கூடியதே! அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துவதோடு, வளர்க்கக்கூடியதாகவும், இருக்கிறது’ என்பதும் உண்மை.
விஞ்ஞானத்தின் மூலம் மெய்ஞானத்தை அறியும்போது ஈமான் இன்னும் உறுதியாகிறது, வலுவடைகிறது. உதாரணமாக மரம், செடி, கொடி, மரங்கள், மலைகள் யாவும் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றன, ‘ஸுஜூது’ செய்கின்றன என்பதை திருக்குர்ஆன் மூலம் அறிந்து நம்புவது மெஞ்ஞானம் எனில் அதே மரம், செடி, கொடிகள் அந்த ஏக இறைவனை துதிக்கின்றன என்பதை மனிதனாக ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது அதற்கு விஞ்ஞானம் என்று சூட்டிவிடுவான்.
இறைவனை துதிபாடக்கூடிய அந்த மரங்களையும், பயிர்களையும் மனிதனைக் கொண்டே அல்லாஹ் பயிர் செய்விக்கச் செய்வது அவனின் மாபெரும் அருட்கொடையின் வெளிப்பாடு. மனிதர்களின்; உணவு தேவைகளுக்கு என்கின்ற நன்மைகளுக்காக என்பது மட்டுமின்றி, வளர்கின்ற பருவத்தில் அந்த பயிர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்கின்றனவே, அதை உற்பத்தி செய்த மனிதனுக்கு அந்த பயிர்கள் ‘திக்ரு’ செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளும் நிச்சயமாக கிடைக்கத்தானே செய்யும். ஏனெனில் அல்லாஹ் அருள் மழை பொழிவதில் மாபெரும் கொடையாளன் என்பதில் எவருக்கேனும் சந்தேகமுண்டா?
ஏதேனும் ஒரு நன்மையான காரியத்தை ஓருவர் துவக்கி வைப்பாரானால் அதனால் விளையக்கூடிய நன்மைகள் அனைத்திலும் அவருக்கும் பங்குண்டு என்பது நபிமொழியல்லவா! பயிர் செய்வது நன்மையான காரியம்தான். அதனால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகளை அவன் வாழும் காலத்தில் அனுபவித்து நன்மையடைகின்றான். ஆனால் அந்த பயிர்கள் அல்லாஹ்வை ‘திக்ரு’ செய்கின்றனவே அதனால் கிடைக்கும் நன்மைகளை அந்த மனிதர்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?! மனிதன் அறியாமலேயே அவனுக்கு நன்மைகளை சேர்க்கும் இறைவனின் இந்த ரஹ்மத்தை என்னவென்று சொல்வது!
மிக நெருக்கமான ஒருவர் ஒரு விவசாயியாக இருக்கும்போது தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதில்: காலை வேளை ஸுப்ஹு தொழுதுவிட்டு வயல்வெளிகளை தனியாக சுற்றிப்பார்க்கச் செல்லும்போது ஒவ்வொரு நாளும் நெற்கதிர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்புடன் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லக் கூடியவராக இருந்தார்.
வரப்புகளில் நடந்து செல்லும்போது சப்தமிட்டு கலிமாவை ஒலித்தவண்ணம் நடக்க ஆரம்பிப்பாராம். தான் ஓதியதை கேட்கும் இந்த பயிர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் சாட்சி பகரும் என்கின்ற நம்பிக்கையே காரணம் என்பதை அறியும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த சிந்தனையை அவரது உள்ளத்தில் உதிக்கச் செய்த அல்லாஹ்வை எப்படி புகழ்வது! அல்ஹம்துலில்லாஹ். இங்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அவர் மெய்ஞானத்தை காண்கிறார் என்று கூட சொல்லலாம்.
சரி, விஷயத்திற்கு வருவோம். விஞ்ஞானம் மெய்ஞானத்தை வலுப்படுத்துகிறது, ஈமானை மென்மேலும் உறுதியடையச் செய்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இஸ்லாமிய வரலாறுகளில் – குறிப்பாக நபிமார்களின் வரலாறுகளிலேயே கூட காணலாம். அழுத்தமான சான்றாக, திருக்குர்ஆன் சுட்டிக்காட்டும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும்;, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் விண்ணுலகப் பயணத்தையும் குறிப்பிடலாம்.
-எம்.ஏ.முஹம்மது அலீ
இன்ஷா அல்லாஹ், சிந்தனை தொடரும்…
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழே உள்ள “NEXT” ஐ “கிளிக்” செய்யவும்.