பெண்களுக்கு அவர்களின் உடம்பைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. இதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டும்.
மெனோபஸ் என்பது மாதவிலக்கு முற்றுப் பெறுதல் என்பதுதான். பொதுவாக சராசரி பெண்ணிற்கு 40 வயதில் மெனோபஸ் முற்றுப் பெறுகிறது. மெனோபஸ் என்பது உடலை மட்டுமல்ல மனதையும் பாதிக்கும் ஒரு நிகழ்வாகும். ஒரு பெண் 40 வயதை அடையும் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.
இளமை என்பது முடிந்து முதுமையின் சாயல்கள் தென்பட ஆரம்பிக்கும் வயதுதான் 40. இதில் மாதவிலக்கு சில மாதங்கள் வராமல், ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வந்து என சீரற்று இருப்பதுதான் மெனோபஸ் துவங்குவதன் அறிகுறி. இந்த சமயத்தில் பெண்களுக்கு மன அளவில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் மெனோபஸை எதிர்கொள்ள அச்சம் கொள்கிறார்கள்.
மெனோபஸ் ஆகிவிட்டால் உடலில் பல்வேறு வியாதிகள் வந்துவிடும் என்ற அச்சமும் பலரிடம் நிலவுகிறது. சிலருக்கு இந்த மெனோபஸ் மிக இளம் வயதிலேயே ஏற்படுவதும் உண்டு. 32 வயதில் கூட ஒரு சில பெண்களுக்கு மெனோபஸ் ஆகிவிடக் கூடும்.
தற்போதெல்லாம் படித்து வேலைக்குச் சென்றுவிட்டு வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பிறகே கல்யாணம் என்று ஒத்தக் காலில் நிற்கும் பெண்கள் ஏராளம்.
இப்படி காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு உடனடியாக கருத்தரிப்பு ஏற்பட்டுவிட்டால் பரவாயில்லை. அதுவே சில காலம் தாமதம் ஆவதும் உண்டு. 30 வயதிற்கு மேல் ஏற்படும் கருத்தரிப்பு ஆரோக்கியமாக இருக்காது என்பது பொதுவாக கருத்து. இதிலும் சிலருக்கு 32 வயதில் மெனோபஸ் ஆகிவிட்டால் அதன் பிறகு கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.
மெனோபஸ் சீக்கிரம் நிகழ காரணம் சினைப்பை செயலிழந்து விடுவதுதான். பரம்பரையாக சில குடும்பத்தில் நேரிடுகிற சினைப்பை வளர்ச்சியின்மை அல்லது சினைப்பை இல்லாமலே பிறந்திருப்பதால் இளம் வயதிலேயே மெனோபஸ் ஆகி விடுகிறது. எனினும், மெனோபஸ் ஆவதை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
பிறப்புறுப்பு வறண்டு விடுதல், உடலில் சிவப்பு சிவப்பாக புள்ளிகள் ஏற்படுவது போன்றவற்றின் மூலம் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் வெகுவாகக் குறைவதை அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
இளம் வயதில் மாதவிலக்கு முற்றுப் பெற்ற பெண்களுக்கு ஹார்மோன் மாற்றுச் சிகிச்சையின் மூலம் மாதவிலக்கை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்கிறது மருத்துவம்.
எதுவாக இருந்தாலும், பெண்கள் தங்களது உடலில் ஏற்படும் சில மாற்றங்களை உடனடியாக மருத்துவரிடம் கூறி அதற்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
தங்கள் உடலில் பெரும் பிரச்சினை ஏற்படும் வரை பொருத்திருந்து பிறகு மருத்துவரிடம் செல்லும் போது நோய் முற்றியிருக்கும். நமது நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்கள் மருத்துவரிடம் வரும் போதே முற்றிய நிலையில் இருக்கிறது.
இந்நிலை மாற வேண்டும். பெண்களுக்கு அவர்களின் உடம்பைப்பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்று. இதை ஒவ்வொரு பெண்ணும் நினைவில் கொள்ள வேண்டும்.