[”அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”. (அல்குர்ஆன் 2:245)
ஏழைகளுக்கு வழங்கும் கடன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் மறுமை நாளில் வழங்குவான். மேலும் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து நன்மை புரிந்தால் நாம் எதிர்பார்க்கும் சொர்க்கத்தைக் கூட வழங்குவான். இந்த நற்காரியத்தை எப்போதும் விட்டு விடாதீர். நன்மை இழந்து விடாதீர்.]
மனிதனை இவ்வுலகில் படைத்த அல்லாஹ், அவர்களை செல்வந்தர்களாகவும் ஏழைகளாகவும், நடுத்தர வர்க்கத்தினராகவும் படைத்துள்ளான். இவ்வாறு படைத்த இறைவன் செல்வந்தர்களாக இருப்பவர்கள், ஏழைகளாக இருப்பவர்களுக்கு உதவுமாறும் கட்டளையிட்டுள்ளான்.
”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸலிமின் சகோதரன்ஆவான்.
அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவும் மாட்டான்.
எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.
எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான்.
எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2442)
இவ்வுலகில் ஏழைகளே அதிகமாக வாழுகின்றனர். அவர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் சிரமத்துடனே கழிக்கின்றனர். இவர்களின் சிரமத்தைக் குறைக்கும் பணியில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈடுபட வேண்டும்.ஒவ்வொருவருக்கும் இருப்பிடத்திற்காக, நோய் நொடிகளுக்க ஏராளமான பணம் தேவைப்படுகிறது. இதற்காகக் கடன் பெற்றுச் செலவழிக்கும் இந்த ஏழைகள் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லது முழுமையாக கடனை திருப்பிச் செலுத்த வசதியில்லாத நிலையில் இருக்கின்றனர்.
இவ்வாறு தவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளின் கடன்களை திருப்பிக் கேட்கும் போது மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.”வாங்கும் பொழுதும், விற்கும் பொழுதும், உரிமையைக் கேட்கும் போதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2076)
இதைப் போன்று கால அவகாசம் கேட்பவருக்குக் கால அவகாசம் கொடுப்பதும், திருப்பிச் செலுத்த முடியாத ஏழைகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதும் நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியை ஏற்படுத்தும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரிடம் (உயிரைக் கைப்பற்றும்) வானவர் அவரது உயிரைக் கைப்பற்றிச் செல்ல வந்தார். அந்த மனிதரிடம் (உன் வாழ்நாளில்) ”நீ ஏதாவது நன்மை செய்திருப்பதாக அறிந்திருக்கின்றாயா?” என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர், (அப்படி எதுவும்) எனக்குத் தெரியவில்லை என்று பதிலளித்தார். (நன்மை ஏதாவது செய்திருக்கின்றாயா? என்று) சிந்தித்துப் பார் என்று கூறப்பட்டது.
அவர், ”அப்படி எதுவும் (நன்மை) செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உலக மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். அப்போது அவர்களிடம் நான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பேன். அப்போது, வசியுள்ளவருக்கு (கடனை அடைக்க) அவகாசம் தருவேன். வசதியில்லாதவரை மன்னித்து (கடனை தள்ளுபடி செய்து) விடுவேன்” என்று பதிலளித்தார்.
அதன் காரணத்தால் அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தில் புகுத்தினான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3451, அஹ்மத் 22263)
(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால் தமது பணியாளர்களிடம், ”இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும்” என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2078)
முற்காலத்தில் வாழ்ந்த ஒருவர் எந்த நல்லறமும் செய்யாமல் இருந்தும் ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கும் காரியத்தில் ஈடுபட்டதால் அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, சொர்க்கத்தில் நுழையச் செய்துள்ளான்.
ஏழைகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தால் அல்லாஹ் நமது பாவங்களை தள்ளுபடி செய்வான் என்ற அவரின் நல்லெண்ணத்திற்குக் கூலியாக அல்லாஹ் அவர் விருப்பப்படியே அவரின் பாவங்களை மன்னித்துள்ளான்.
செல்வந்தராக உள்ளவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல ஆசைப்பட்டால் ஏழைகளுக்குக் கடன் கொடுத்து உதவுங்கள். இந்தக் கடனைக் கூட இறைவனுக்குக் கொடுக்கும் கடனாக அல்லாஹ் கூறுகின்றான்.
”அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”. (அல்குர்ஆன் 2:245)
ஏழைகளுக்கு வழங்கும் கடன் மூலம் எண்ணற்ற நன்மைகளை அல்லாஹ் மறுமை நாளில் வழங்குவான். மேலும் அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்து நன்மை புரிந்தால் நாம் எதிர்பார்க்கும் சொர்க்கத்தைக் கூட வழங்குவான். இந்த நற்காரியத்தை எப்போதும் விட்டு விடாதீர். நன்மை இழந்து விடாதீர்.
posted by: Sarfu din
நன்றி: ஏகத்துவம் மாத இதழ்