42. இஸ்லாமிய இறை நம்பிக்கை: அடுத்து இஸ்லாமிய இறை நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் காரியங்களைக் கொண்டு மனிதன் இவ்வுலகில் நஷ்டமடைகின்றானா? அவன் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை இழக்கின்றானா? என்பதை ஆராய்வோம்.
இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கநெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம்.
இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் கொள்கிறானா? என்பதை ஆராய்வோம்.43. தொழுகை:
ஒரே இறைவனை மட்டும் ஏற்று முஸ்லிமாகி விட்ட ஒருவரின் முன்னுள்ள அடுத்த பிரதான கடமை தொழுகையாகும். ஐங்கால தொழுகையில்லாத ஒருவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை இழக்கின்றான். முஸ்லிம் என்றால் அதற்குரிய பிரதான அடையாளமே தொழுகைதான்.
ஆயினும் எப்படியோ இஸ்லாமிய சமுதாயத்திற்குள்ளும் புகுந்து கொண்டுள்ள புரோகிதர்கள், அந்தத்தொழுகையில் இவர்களாக பல வீணான விதிகளை அமைத்துக் கொண்டு செயல்படுத்தி வருவதால் எளிதாக உள்ள தொழுகையை மிகக் கஷ்டமான ஒரு செயலாக உருமாற்றப்பட்டுள்ளது. அது ஒரு வெறும் சடங்காக ஆக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மையினர் அந்த ஐங்கால தொழுகையை விட்டு விட்டு தங்களை முஸ்லிம்கள் என மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். தொழுகை இல்லாதவர்களை அல்லாஹ் முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் போதிய சான்றுகளாக இருக்கின்றன.
நபி வழியில் அமைந்துள்ள தொழுகை நிறைவேற்றுவதற்கு மிகவும் எளிதாக இருப்பதோடு அது மனிதனின் உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களை அகற்றி மானக்கேடான பாவகரமான செயல்களை விட்டும் அவனைப் பாதுகாக்கிறது. இவ்வுலகில் மனிதன் மனிதனாக வாழ ஐங்கால தொழுகை அவனைப் பக்குவப்படுத்துகிறது. இன்று முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையினர் மூட நம்பிக்கைகளிலும் பாவகரமான செயல்களிலும் மனித சமுதாயத்தின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் காரியங்களிலும் மூழ்கியுள்ளதற்கு அடிப்படைக்காரணம் அவர்கள் ஐங்கால தொழுகையை நிறைவேற்றாமல் அதில் பொடுபோக்காக இருந்து வருவதுதான்.
மற்ற மதவாதிகளைப் போல் முஸ்லிம்களிலுள்ள பெரும்பான்மையினரும் மதவெறி கொண்டு மனித அமைதிக்குப் பங்கம் விளைவிக்கத் துணிவதற்குக் காரணம் ஐங்கால தொழுகையைக் கடைபிடிப்பது கொண்டு அவர்கள் அடைந்து கொள்ள வேண்டிய மனித அந்தஸ்தை அடைந்து கொள்ளத் தவறியதுதான். மனிதன் மனிதனாக வாழும் பக்குவத்தை ஐங்காலத் தொழுகை தரவேண்டுமென்றால் அது இறைவனால் வழிகாட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களால் தொழுதுகாட்டப்பட்ட முறையில் கண்டிப்பாக அமைந்திருக்க வேண்டும். மனித அபிப்பிராயங்கள் நுழைக்கப்பட்டு மனிதர்களாக உண்டாக்கிக் கொண்ட தொழுகை முறைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளபடவும் மாட்டா மனிதப் பக்குவத்தையும் தரமாட்டா.
இந்த மறுக்க முடியாத உண்மைகளை மனித நேயத்தை வளர்க்கும் பண்பாடுகளை ஒருகால் நாஸ்திகர்கள் ஏற்க மறுக்கலாம். எனவே அவர்களும் மறுக்க முடியாத ஐங்கால தொழுகைகளின் உலக ஆதாயங்களை மட்டும் அறியத் தருகிறோம் சிந்தித்துப் பார்க்கட்டும்.
ஐங்கால தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு முன் நீரினால் ஒளூ செய்வது கொண்டு ஒரு தொழுகையாளி தனது உறுப்புகளில் அசுத்தம் சேர வாய்ப்புகள் அதிகமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொள்கிறார். இது அவரது ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுப்பதை நிச்சயமாக நாஸ்திகர்கள் மறுக்க முடியாது,
அதல்லலாமல் தொழுகையில் கடைபிடிக்கப்படும் செயல் முறைகள் மனித உடலுக்கு ஆரேக்கியத்தைத் தரும் தேகப்பயிற்சி முறையில் அமைந்திருப்பதையும் நாஸ்திகர்களால் மறுக்க முடியாது. மதவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள உடல் அசைவின்றி அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நிஷ்டையில் மூழ்குவதை இஸ்லாம் வழிபாடாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐங்கால தொழுகைகள் மனித உள்ளத்திற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தையும் வலுவையும் தருகின்றன என்பதை நடுநிலையாளர்கள் மறுக்கமுடியாது.
44. தமிழகத்தில் நாஸ்திகம் பரவக் காரணம்:
தமிழகத்தில் நாஸ்திக வாதம் பரவுவதற்கு அடிப்படைக் காரணமே மக்களிடையே காணப்படும் ஜாதி வேற்றுமைகளும், தீண்டாமையுமேயாகும். கடவுளின் பெயரால் மக்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி ஹரிஜனங்களை உயர் ஜாதிக்காரர்கள் (மனிதனை மனிதனே இழிவுபடுத்தும் சாதிவேற்றுமை) கொடுமைப்படுத்தும் மனித நேயத்திற்கு முரண்பட்ட கொடுஞ்செயலை சகிக்க முடியாமைதான் தமிழகத்தில் நாஸ்திகம் வளரக் காரணமாயிற்று.
ஹரிஜன மக்கள் கோவில் பூசாரிகளாக ஆவது ஆகாத செயல் என்பது ஒரு புறமிருக்க, அவர்கள் கோவிலுக்குள்ளே நுழைவதும் அனுமதிக்கப்படாத செயலாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஹரிஜனங்களில் ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டால் ஹரிஜன் என்ற (கீழ் சாதிக்காரன்) நிலைமாறி பள்ளியினுள் நுழைந்து மற்ற முஸ்லிம்களோடு தோளோடு தோள், காலோடு கால் இணைந்து நின்று தொழும் சம அந்தஸ்தைப் பெற்றுக்கொள்கிறார். அவர் முன் வரிசையில் நின்று தொழும் நிலையில் சுஜூது செய்யும்போது அவரது கால்கள் இருந்த இடத்தில் பின் வரிசையில் நின்று தொழும் ஒரு செல்வாக்குள்ள பெரும் பணக்கார முஸ்லிமின் நெற்றிபடும் நிலையைக் காணமுடியும்.
அதாவது தொழுகை மனித உள்ளங்களை ஒன்று படுத்தும் ஓர் உன்னத சாதனமாக அமைந்துள்ளது. அந்த ஐங்கால தொழுகைகளைத் தொழாமல் இருப்பதால் தான் இன்று பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயத்தவர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பிளவுபட்டு சீரழிந்து வருகின்றனர். மற்றவர்களால் இவர்கள் மீது குதிரை சவாரி செய்ய முடிகிறது பட்டும் புத்தி வராத முஸ்லிம்களபை; பற்றி என்ன சொல்லமுடியும்?.
45. வேறு எங்கும் பார்க்க முடியுமா?
இன்னும் ஒரு அதிசயத்தையும் நாஸ்திகர்கள் சிந்தித்து உணர வேண்டும். இஸ்லாத்தைத் தழுவிய ஒரு ஹரிஜன வகுப்பைச் சார்ந்தவர் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழ வைக்கும் முறைகளை முறையாகக் கற்று கொள்வாரேயானால் அவர் பரம்பரை முஸ்லிம்களுக்கு முன் நின்று இமாமாக தொழுகை நடத்தும் வாய்ப்பையும் அடைந்து கொள்கிறார்.
அவர் வேதத்தைக் கற்றுக் கொள்வதற்கும், கற்றுக்கொண்டதை செயல்படுத்துவதற்கும், தகுதி இருந்தால் முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்கும்வதற்கும் இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. இந்த வகையில் மனிதர்களிடையே மதவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ள ஜாதி வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வையும் அகற்றி மனித சமுதாயமே சமத்துவ நிலையில் செயல்படும் அரிய வாய்ப்பை இஸ்லாமிய வாழ்க்கை நெறியில் பிரதான கடமையாக அமைந்துள்ள ஐங்கால தொழுகை பெற்றுத் தருகிறது என்பதை நாஸ்திகர்கள் மறுக்க முடியுமா?
ஆள்பவன்–ஆளப்படுபவன், ஏழை–பணக்காரன், கருப்பன்–வெள்ளையன், படித்தவன்–படிக்காதவன், உயர் ஜாதியான்–தாழ்ந்த ஜாதியான் போன்ற ஏற்றத் தாழ்வுகளையும், இன, மொழி, பிரதேசம், நாடு போன்ற பாகுபாடுகளையும் ஒழித்து மனிதன் என்றாலே ஓரினம், ஓரிறைவனை மட்டுமே வணங்கக் கடமைப்பட்டவன் என்ற சிந்தனையை வளர்த்து, சமத்துவ சமுதாய அமைய, ஒற்றுமை ஓங்க, சாந்தி நிலவ, தரணி சிறக்க இத்தொழுகைமுறை வழி வகுக்கிறது என்பதையும் நாஸ்திகர்கள் சிந்திக்கக் கடமை பட்டவர்களாக இருக்கிறார்கள்.
47. பார்க்குமிடமெல்லாம் பட்டாளங்கள்:
முஸ்லிம்கள் அனைவரும் ஐங்காலத் தொழுகைகளைத் தவறாது தங்கள் மஹல்லா (ஊர்) மஸ்ஜிதுகளுக்கு வந்து ஜமாஅத்தாக தொழுது வரும்போது, அந்தப் பகுதியில் ஒரு தளபதிக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு சிறந்த படையே இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்? இப்படி நாடு முழுவதும் ஆங்காங்கே படைகள் இருந்தால் எதிரிகளால் அவர்களை முறியடிக்க முடியுமா?
எதிரிகள் தாக்கம் அபாயம் இருக்கிறது எனவே படைவீரர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையோ படைவீரர்களில் யாரும் விடுப்பில் செல்லக் கூடாது விடுப்பில் சென்றுள்ளவர்கள் அனைவரும் உடன் படைக்கு வந்து சேர வேண்டும் என்ற அறிவிவிப்போ இன்றி எப்போதும் தயாராக இருக்கும் இப்படை போன்று வேறொரு படையை யாரால் காட்ட முடியும்?
தினசரி ஐங்கால தொழுகைகளிலும் ஆஜராவது எவ்வித முன் அறிவிப்புமின்றி தயாராக இருக்கும் வாய்ப்பை அளிக்கிறது என்பதை மறுக்க முடியுமா?
ஆண்டுக்கொரு முறை ஊர்வலம் நடத்தி மாற்றாரின் உள்ளங்களில் வீண் சந்தேகங்களையும் குரோத உணர்வையும் வளர்க்காமல் அன்றாட அனுஷ்டானத்தின் மூலம் விரோதிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தாமல் அதே சமயம் எதிரிகளின் தாக்குதல்களை எந்தச் சமயத்திலும் முறியடிக்கும் தயார் நிலையிலும் இருக்கும் வாய்ப்பை இத்தொழுகை முறை அளிக்கிறது. அதல்லாமல் அன்றாட நாட்டு நடப்பையும் மஹல்லா (ஊர்) நிலைகளையும் அறிந்தவர்கள் அறியாதவர்களுக்கு அறியத் தரும் நல்ல சந்தர்ப்பத்தையும் அளிக்கிறது.
இப்படி எண்ணற்ற உலகப்பலன்களையே தொழுகை மூலம் முஸ்லிம்கள் அடைந்து கொள்கிறார்கள். அதல்லாமல் தங்கள் எஜமானன் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனுக்கு அடிபணிந்து நடந்ததற்காக மறுமையில் அவர்கள் அடையப்போகும் பாக்கியங்களை ஏட்டில் எழுதி முடிக்க முடியாது.
இன்ஷா அல்லாஹ், தொடரும்.