நாகரீக உலகின் விபரீத ஆசை!
அபூ ரிஸ்வான்
[ மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள்.
ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் ஜாக்கெட் துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suitcase) வைத்து கொடுக்க வேண்டுமாம்.
அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராக இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான்; தாயகம் திரும்பம்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரை வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார்.
இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை.
மற்றவர்களிடம் இல்லாத புதுப்புது பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள்.
பெண்களும் சரி, ஆண்களும் சரி, தனது வீட்டை மற்றவர்களின் வீட்டைவிட அலங்கரிக்க வேண்டும் எனும் மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. தற்காலத்தில் முஸ்லீம்களின் ஆடம்பரம் எல்லைக்கடந்து போய்க் கொண்டிருக்கிறது. முதலில் ]
இக்கால நாகரீக உலகில் மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. விதவிதமான ஆயத்த ஆடைகள், (Readymades) கலைநயமிக்க சேலைகள், கண்கவரும் ஆபரணங்கள், கவர்ச்சிகரமான அலங்காரப் பொருட்கள், பலவகையான வீட்டு உபயோக சாதனங்கள், பெண்களின் அழகை மெருகூட்டும் பொருட்கள்! இன்னும் விதவிதமான வாகனங்கள், கணிணி வகைகள், புதிது புதிதாக விற்பனைக்கு வரும் அலைபேசிகள்! ஆக இப்படி லட்சக்கணக்கான பொருட்களை மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரும் கடைகளிலும் மற்றும் சிறிய கடைகளிலும் தினந்தோறும் வாங்கிச் செல்கிறார்கள்.
இப்படி குவிந்தும், அடுக்கியும் ஷோகேஸ்களில் அலங்கரித்தும் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுவனவற்றையும், அவசியமானவற்றையும் வாங்குகிறார்களா என்றால் இல்லை, நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
அமெரிக்காவில் 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி தேவையில்லாமலேயே எண்ணற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் மனோநிலையை உடையவர்களாக இருக்கிறார்கள்.
இன்னுமொரு புள்ளிவிபரப்படி அமெரிக்காவில் 1.7 கோடி நபர்கள் இப்படிப்பட்ட பொருட்களை தேவையின்றி வாங்கிக் குவிக்கும் கட்டுப்பாடற்ற மனோ இச்சையால் துன்பமும் அவதியும் படுகிறார்கள். இம்மனநிலையை ‘வாங்கிக்குவிக்கும் மனஅழுத்த சீர்கேடு’ (Compulsive Shoping disorder) என்றும், ‘பொருள் வாங்குதலில் தேட்டமுடையவன்’ (Shopaholic) என்றம் அழைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மனக்கட்டுப்பாடற்ற நிலை மக்களுக்கு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோமானால் அதற்கு பல காரணங்களை கூறமுடியும்.
முதலாவது காரணம்: மக்கள் உலக இன்பங்களில் மூழ்கி சுவைத்து மறுமை இன்பங்களை மறந்திருக்கிறார்கள். உலக மக்கள் பல மதங்களை பின்பற்றக்கூடியவர்களாக இருந்தும் இறைநம்பிக்கையும், மறுமை பற்றிய சிந்தனையும், இவ்வுலக வாழ்வு மிகக்குறுகிய, நிலையற்ற வாழ்வு என்னும் உண்மையும் மனதில் ஆழப்பதியாததே! அதிலும் இளைஞர்களின் எண்ணங்கள் இன்னும் விபரீதமாய் இருக்கின்றன. ‘வாழ்க்கை வாழ்வது ஒரு முறையே’ அதனால் அவ்வாழ்க்கையில் எல்லாவிதமான இன்பங்களையும், சாதனங்களையும் அனுபவித்து மகிழ வேண்டும் என்பதுதான்.
இப்படிப்பட்ட மனநிலையிலுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டுமின்றி தேவையில்லாத பொருட்களையும் வாங்கிக் குவிக்கிறார்கள். இவர்களில் பொருளாதார வசதியுடையவர்கள்தான் இப்படி ‘பொருள் வாங்குதலில் தேட்டமுள்ளவர்’களாக இருக்கிறார்களா என்றால் அவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வசதியடையவர்களும் (Middle class) இப்படிப்பட்ட மனநிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவபரப்படி 10 பேரில் 9 பேர் பெண்களாகவும் ஒருவர் ஆணாகவும் இருந்தார் என்றால் தற்பொழுது ஆண்களிலும் இப்படிப்பட் மனோநிலையை கொண்டவர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்கிறது ஆய்வு!
இரண்டாவது காரணம்: பெருமையடிப்பது. மற்றவர்களிடம் இல்லாத புதுப்புது பொருட்கள் தன்னிடம் உள்ளது என்று தோழர்கள் மற்றும் தோழியர்களிடம் காட்டுவது. இதில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். கடைகளில் ஏதாவது புதிய மாடல் நகை விற்பனைக்கு வந்திருந்தால், பழையநகைகளை விற்றுவிட்டு அப்புதிய மாடல் நகையை உடனே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். பெருமையோடு தம் உறவினர்களிடமும், தோழியர்களிடமும் காட்டுகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு முறையும் நகைகளை மாற்றும்பொழுது எந்த அளவுக்கு பணம் வீணாக செலவாகிறது என்பதை இப்பெண்கள் உணர்வதில்லை. இம்மனநிலையை ஆய்வு செய்யும் நிபுணர்கள் இது ஒருவகையான ‘நாகரீகத்தின் மேல்படியில் நிற்பவர்கள் நாங்கள்தான் என்று காட்டும் மனநிலை’ என வர்ணிக்கிறார்கள்.
மூன்றாவது காரணம்: பொருட்களை தேவையில்லாமல் ஆசைப்பட்டவற்றையெல்லாம் வாங்கிக் குவிப்பது. ஒரு பெண்ணுக்கு ஒரு வருடத்திற்கு எத்தனை ஆடைகள் தேவைப்படும்? ஒரு நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்ணாயிருந்தால் அவருக்கு 5 முதல் 10 சேலைகள் தேவைப்படலாம். செல்வந்தராக இருந்தால் 10 முதல் 20 சேலைகள் வாங்கி அணியலாம். இவையெல்லாம் மிதமான தேவைகள். ஆனால் தற்காலத்தில் என்ன நடக்கிறது? கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்!
ஒரு மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணுக்கு 100 முதல் 120 புடவைகளும் அதற்கு ஏற்றார்போல் ஜாக்கெட் துண்டுகளும் வாங்கி ஒரு பெரிய பெட்டியில் (suitcase) வைத்து கொடுக்க வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், ஒருவர் வளைகுடா நாடுகளில் பணிபுரிபவராக இருந்தால் ஒவ்வொரு தடவையும் தான்; தாயகம் திரும்பம்போது தன் மனைவிக்கு 50 முதல் 60 சேலைகள் வரை வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறார். இவ்வளவு ஆடைகள் ஒரு பெண்ணிற்கு தேவையானதா? நிச்சயமாக இல்லை
மேலும் சில பெண்கள் திருமணத்திற்கு அழைப்பின்பால் செல்லும்போது ஒரு புதிய சேலையை அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு ஊரில் வருடத்திற்கு 25 திருமணங்கள் நடைபெறுவதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு புதுப்புடவை வீதம் 25 புடவைகளை வாங்கிக் குவிக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள்கூட இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்யக்கூடாது என்று இருக்கும்போது நடுத்தர மக்கள் இப்படிப்பட்ட வீண்விரயத்தை செய்து பொருளாதாரத்தை அழிக்கலாமா? இதை இறைவன் மறுமையில் விசாரிக்க மாட்டான் என்று இப்பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
நான்காவது காரணம்: பெண்களும் சரி, ஆண்களும் சரி, தனது வீட்டை மற்றவர்களின் வீட்டைவிட அலங்கரிக்க வேண்டும் எனும் மனஉந்தல் மிகுதமாய் இருக்கிறது. வீடு கட்டும் பொழுது அவ்வீடு அங்கு குடியிருக்கப்போகும் குடும்பத்தினருக்கு போதுமான வசதியுடையதாகவும், போதுமான அறைகள் உடையதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும். ஆனால் வீட்டின் உட்புறம் செய்யக்கூடிய வசதியைவிட வீட்டிற்கு வெளிப்புறமும் முகப்பிலும் பெரும் அலங்காரங்களைச் செய்தும், பெரிய தூண்களை கட்டியும், மேலும் ‘மார்பிள்’ போன்ற சலவைக்கற்களை சுவரெங்கும் பதித்தும் அலங்காரம் செய்வது வீண்விரயம் ஆகாதா? அதிலும் முஸ்லீம் அல்லாதவர்களின் வீடுகளைவிட முஸ்லீம்களின் வீடுகள் வீண் அலங்காரங்களின் உறைவிடமாக காட்சியளின்றன.
தற்காலத்தில் முஸ்லீம்களின் ஆடம்பரம் எல்லைக்கடந்து போய்க் கொண்டிருக்கிறது. முதலில் ஒவ்வொரு முஸ்லீம் – ஆணாகட்டும் பெண்ணாகட்டும் – தனது ஆசையென்ன? வாழ்க்கைக்கு தேவையானவை என்னென்ன? என்று உணர்ந்து கொள்ள வேண்டும். மறுமை நாளை நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லீம்கள் இந்த ஒன்றை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டால் இவ்வுலகில் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டும், அதே சமயம் வீண் விரயமும் செய்யாமலும் இறைவனுடைய உவப்பைப் பெற்று வாழலாம்.
நன்றி: ‘சிந்தனை சரம்’ (ஜூன் 2010)