இலக்குகளை எட்டாவிடினும் இறுதி முடிவு இன்பம் தரும்!
மறைமுகன்
பெரிய இலக்குகளை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும்போது நாம் தவறவிடும் சில செயல்கள், இலக்குகளை அடைந்த பின்னும் நமககு மனநிறைவு ஏற்படாதிருக்க காரணமாகி விடுகிறது. மார்க்க ரீதியான அம்சங்களில் இந்நிலையை நாம் அதிக அளவில் மேற்கொள்கிறோம்.
இலக்குகளை கவனத்தில் கொண்டு முயற்சிக்குமளவு, இடைவெளியில் நாம் சந்திக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஆனால், இலக்குகளையே நிர்ணயித்துக்கொள்ளாமல் அவ்வப்போது வாய்ப்பை பயன்படுத்தி ஆன்மீகத் தளத்தின் உச்சத்தை அடைந்தவர்களையே வரலாறு நெடுகிலும் பெருமளவு போற்றப்படுகிறது.
பெருமையைப் பறைசாற்றும் உயர்ரக வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் ஒருவர் சாலையில் ஒரு கல்லையோ அல்லது மக்களுக்கு – வாகனங்களுக்கு ஊறுவிளைவிக்கும் வேறு பொருளையோ பார்க்கிறார். உடன் தன் ஓட்டுனரிடம், வாகனத்தை சாலையோரத்தில் ஓரங்கட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு, தானே இறங்கி, பாதையில் கிடக்கும் கற்களை அகற்றிவிட்டு, பிறகு தன் வாகனத்தில் ஏறி விரைந்து சென்று மறைகிறார். இத்தகைய வாகன உரிமையாளர் யாரையாவது நீங்கள் கண்டதுண்டா?
மதினா நகரச் சாலையொன்றில் இப்படி ஒருவரைப் பார்த்துவிட்டு அவரைப்பற்றி ஆச்சர்யத்துடன் எழுதுகிறார் ‘ஜிபாலல் ஹஸனாத் பிதகா இகிள் மஅதூதாத்’ நூலாசிரியர் அபூதல்ஹா முஹம்மது யூனூஸ்.
மேலும் அவர் கூறுகிறார், ‘மனிதன் தன் சகோதரன், தாய், தந்தை, மனைவி, மக்கள் என அனைத்து உறவுகளை விட்டும் விரண்டோடும் அந்த மறுமை நாளில் தனது நன்மைகளுக்கான தராசை கணக்கச் செய்யும் முகமாக சாலைகளிலும், தெருக்களிலும் அல்லவா அவர் நன்மைகளை திரட்டிவிட்டார்!
இறைத்தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நகரத்தில் தென்படும் அழகு முகங்களில் அவருடையதும் ஒன்றாகத் தென்படுகிறது. பெருமை கொள்ளத்தக்க ஆடை அணிந்திருக்கிறார். அத்துடன் இச்செயலையும் அவர் மேற்கொள்வது எவ்வளவு மகிழ்ச்சிக்குறியது!’
‘ஒரு மனிதர் பாதையில் நடந்து செல்லும்போது பாதை மீது முள்மரக்கிளை கிடக்கிறது. அதை அவர் அப்புறப்படுத்தினார். அதற்காக அவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டி, அவரின் பாவங்களை மன்னித்தான்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருளுரையை மனதில் ஏந்தியல்லவா செயல்பட்டுள்ளார்!
உடனடியாக என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, எந்த வேண்டுகோளும் இல்லாமலே துஆ – பிராரத்தனை வெளிவந்தது, ‘யா அல்லாஹ்! பாதை மீது கிடந்த முள்மரக்கிளையை அகற்றியதற்காக உன் அடியானை நன்றி பாராட்டி பாவங்களை மன்னித்து, உனது சுவனபதியில் குடியேற்றினாயே, அதுபோல இந்தச் செயல் புரிந்த இவரையும் சுவனபதியில் நுழையச் செய்வாயாக!’ ஒருவரின் உள்ளத்திலிருந்து, வேண்டுகோள் ஏதுமின்றி மற்றவருக்காக பிரார்த்தனை வெளிப்படுவது இறைவழிகாட்டுதலுக்கு உடன்பட்டுப்புரியும் செயல்களின் அபிவிருத்தியாகும்.
மற்றொரு சமயம் தனக்கே நேர்ந்த ஒரு அனுபவம் குறித்து அபூதல்ஹா எழுதுகிறார்: ‘அன்றைய தினம், எனது பணியகத்திலிருந்து சோர்வும், களைப்பும் மேலோங்கியவண்ணம், லுஹர் தொழுகைக்குப் பின் வீடு திரும்பினேன். வழக்கமான நேரத்தை விடவும் அன்று தாமதமாகவே புறப்பட்டேன்.
வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டு, குளியலறைக்குள் நுழைந்து கைகளைக்கழுவி வாய்கொப்பளித்தபோது அப்படியே உளூ செய்து முடித்துவிட்டேன். தொடர்ந்து பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி, இரண்டு ரக்அத் தொழும் சிந்தனை மனதில் வந்தது. மிஃராஜ் பயணத்திலிருந்து திரும்பிய பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இந்த வழிமுறைக்காக சுவனத்தில் அவர்கள் அடைந்த உயர்வு குறித்து ஆச்சர்யம் தெரிவித்திருந்தார்கள்.
நேர நெருக்கடி, பணிச்சுமை, களைப்பு எல்லாம் சேர்ந்து கொண்டு, தொழுவது பற்றிய சிந்தனையை செயல்படுத்துவதை கடினமாக்கிக் கொண்டிருந்தது. மீண்டும் பணியகத்திற்கு செல்லுமுன் ‘குட்டித்தூக்கம்’ போட்டு எழும் எண்ணமும் இருந்தது. அதே வேளை, ‘இது நம்முடைய அன்பளிப்பு. இதை (நன்மை அடையும் வழியில்) செயல்படுத்துங்கள் அல்லது (செயல்படுத்தாமல்) கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் கேள்வி கணக்கு எதுவுமில்லை’ என்ற திருக்குர்ஆனின் (38:39 ஆவது) வசனம் நினைவை அழுத்தியது.
தொடர்ந்து மற்றொரு வசனம் நினைவுக்கு வந்தது. ‘(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக இரு சாராருக்கும் (உலகில்) நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருக்கிறோம். இது உம் இறைவனின் கொடையாகும். மேலும் உம் இறைவனின் கொடையைத் தடுக்கக்கூடியவர் யாருமில்லை.’ (அல் குர்ஆன்: 17:20)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றான, ‘சுவனம், வெறுப்பிற்குரியவற்றாலும், நரகம் விருப்பத்திற்குரியவற்றாலும் போர்த்தப்பட்டுள்ளது’ என்ற ஹதீஸும் நினைவுக்கு வந்தது. எனக்குள், ‘இது இறைவனின் அன்பளிப்புத்தான், அருட்கொடைதான்’ என்று உறுதிபடக் கூறியவனாக, மனத்தூய்மையுடனும், ஆர்வத்துடனும் உளூவை முழுமையாக நிறைவு செய்து, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி பாராட்டும் முகமாக இரண்டு ரக்அத் தொழுது முடித்தேன். அன்று முதல் இரவிலோ பகலிலோ எப்போது உளூ செய்தாலும் அந்த இரண்டு ரக்அத்தை நிறைவேற்றாமல் விட்டதில்லை.
நமது இலக்குகளை நாம் அடைகிறோமோ இல்லையோ, இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் சரியாக, முறையாக இருந்தால், விபத்துகளை தவிர்த்து விடலாம். இலக்குகளை எட்டாவிடினும் இறுதி முடிவு இன்பம் தரும். (‘சிந்தனை சரம்’ ஜூன் 2008-ல் வெளியான கட்டுரை)