[ ஒவ்வாமை ஏற்படுவது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவாகும். உடலுக்கு ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால் ஒவ்வாமை உண்டாகிறது.]
ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிக ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இந்தியாவில் நகர்ப்புற மக்களையே இந்த ஒவ்வாமை அதிகம் தாக்குகிறது.சுற்றுச்சூழல் சீர்கேடும், இயந்திரமயமான வாழ்க்கை முறையும் 40 சதவீதம் பேர் ஒவ்வாமையால் அவதியுறக் காரணமாகிறது.
ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலால், ஒரு மனிதனின் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் எதிர்விளைவே ஒவ்வாமையாகும்.உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள், உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக எதிர் தாக்குதல் நடத்துகிறது. அதன் தாக்கத்தைத்தான் நாம் ஒவ்வாமையாக உணர்கிறோம்.
ஒவ்வாமையின் அறிகுறிகள் பல உள்ளன. திடீரென ஏற்படும் தொடர் தும்மல், மூக்கு, கண்களில் எரிச்சல், நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு, சில நேரங்களில் சளி பிடிப்பது கூட ஒவ்வாமையின் அறிகுறியாகும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு ஒவ்வாமை உண்டாகும். பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச்சூழலால்தான் பெரும்பாலானோருக்கு ஒவ்வாமை உருவாகிறது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் சுகாதார சீர்கேடு அதிகம் ஏற்படுகிறது. நகரத்தை சுற்றி எண்ணற்ற தொழிற் கூடங்கள் அமைந்துள்ளன. நகர வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல இலட்சங்களை தாண்டிவிட்டது. இந்த தொழிற்சாலைகளும், வாகனங்களும் வெளியேற்றும் புகையே காற்று மண்டலத்தை மாசடைய செய்துவிட்டன.
இந்தக் காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் உடலானது பலவகையில் பாதிக்கப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் ஒவ்வாமை.மாசடைந்த காற்று, சுகாதாரமற்ற குடிநீர், பூச்சிக் கொல்லி மருந்துகள் சேர்த்து பயிரிடப்பட்ட பொருட்கள், கலப்பட உணவு, தேங்கி நிற்கும் சாக்கடை நீர், நாற்றம் வீசும் குப்பைகள், மனிதக் கழிவுகள் இவற்றாலும் உடலில் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் சிலருக்கு உணவுப் பொருட்களாலும் ஒவ்வாமை உண்டாகும். முட்டை, பால், கருவாடு, கத்தரிக்காய் போன்றவற்றாலும், புளித்துப்போன பொருட்களாலும் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படும்.
சிலருக்கு வேதிப்பொருள்கள் கலந்த குளியல் சோப்பு, ஷாம்பு வகைகள் போன்றவற்றாலும், தரமற்ற ஆடைகளாலும் ஒவ்வாமை ஏற்படலாம். பிறர் பயன்படுத்திய விஷயங்களை மற்றொருவர் பயன்படுத்தினாலும் ஒவ்வாமை ஏற்படும். ஒரு சிலருக்கு சில மருந்து பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருப்பவர்கள், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மாத்திரை, மருந்துகள் இவற்றாலும் ஒவ்வாமை உண்டாகிறது.
சிகரெட் புகை, வேதிப் பொருள்கள், குளிர்காற்று உள்ளிட்ட தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் நாசிகளில் உள்ள திரவப் படலம் வீக்கம் உண்டாகி ஒவ்வாமை ஏற்படுகிறது.
வீட்டைப் பொருத்தவரை தூசு, நுண் பூச்சி, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை விரிப்பு, போர்வை இவைகளில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத மாசுப் பொருட்கள் ஒவ்வாமையை உருவாக்க காரணமாகின்றன.
கரப்பான் பூச்சி, எலிகள், கம்பளிப் பூச்சி இவைகள் சருமத்தில் ஒவ்வாமை உண்டாக்கும். தோட்டங்களுக்கு விடப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் அலர்ஜி உருவாகிறது. உணவுப் பண்டங்களை பயிரிடும் போது பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளினால் சில உணவுப் பொருட்களால் கூட ஒவ்வாமை ஏற்படுகிறது.
ஒவ்வாமை ஏற்படுவது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவாகும். உடலுக்கு ஒவ்வாத பொருட்களை அழிக்கும் தன்மையுடைய வெள்ளையணுக்கள் சக்தியின்றி இருப்பதால் ஒவ்வாமை உண்டாகிறது.
இதனால் தொடர்ந்து ஜலதோஷம், தும்மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப்பகுதியில் வலி, எந்த வாசனையைம் அறியமுடியாத நிலை, குரலில் மாற்றம், ஒற்றைத் தலைவலி, தலையில் நீர் கோர்த்துக் கொள்வது போன்றவை உண்டாகும். சிலருக்கு தோலில் அரிப்பும் ஏற்படுவதுண்டு.
மேலும் ஒவ்வாமை காரணமாக காது பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு காதுவலி உண்டாகும். நாள் செல்லச்செல்ல காதில் சீழ் வடிய ஆரம்பிக்கும்.
மூச்சுக்குழாயில் தொடர்ந்து ஏற்படும் ஒவ்வாமை காரணமாக சிலருக்கு ஆஸ்துமா நோய் ஏற்படவும் கூடும். சைனஸ், ஆஸ்துமா போன்ற நோயாளிகளுக்கு ஒவ்வாமைகளால் அதிக பாதிப்பு ஏற்படக் கூடும்.