“மக்களின் நன்மைக்காக இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்“. இப்படி ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் நூலில் சொல்லியிருப்பவர் மகாத்மா காந்தி.
“தேவதைகள் தரையிறங்கி நடப்பதற்கு அஞ்சுமளவுக்கு, பிரச்சினைக்குரிய நிலத்தில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை எங்களால் முடிந்த அளவுக்கு நீக்க முயன்றிருக்கிறோம்” என்று தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி கான்.
பிரபஞ்சத்தின் அழிவு மற்றும் மறு ஆக்கம் குறித்த ரிக்வேதங்களின் சுலோகங்களை மேற்கோளிட்டு தீர்ப்பினை எழுத ஆரம்பித்திருக்கிறார் நீதிபதி அகர்வால். மொத்தம் நீளும் தீர்ப்பின் 6000 பக்கங்களில் இந்த அகர்வால் மட்டும் கிட்டத்தட்ட 5000 பக்கங்கள் எழுதியிருக்கிறார். இந்த பின்னணியில் வாசிக்கும்போது தீர்ப்பின் நிறம் தெளிவாகிறது. தீர்ப்பின் திசை இங்கிருந்து நகர ஆரம்பிக்கிறது.
சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் தெரிவித்துள்ளனர்.
அகழ்வராய்ச்சியில் பாபர் மசூதிக்குக் கீழே அங்கு ஏற்கனவே இருந்த ஒன்றின் சிதிலங்களில் தூண்கள் போன்றவை இருப்பதாகவும், வர்ணப்பூச்சுக்கள் தெரிவதாகவும், பல விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்த சிதிலங்களில் தேவனகிரி எழுத்து வடிவம் தெரிவதாகவும் சொல்லப்பட்டது. அராபிய எழுத்துக்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.
இந்து அமைப்புகளோ, அப்போதே “ஆஹா, அது ராமர் கோவில்தான் என்றும், 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்” கும்மாளம் போட்டு பரப்பின. ஜைன மதத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பு, அந்த சிதிலங்கள், தங்கள் மதத்தைச் சார்ந்தவை போலிருப்பதாகவும், எனவே தங்களுக்கு அந்த இடத்தில் உரிமையுண்டு என ஒரு மனு தாக்கல் செய்தனர். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதற்கிடையில் அயோத்தியில் அகழ்வராய்ச்சி நடத்திய குழு, அகழ்வராய்ச்சியின் விதிகளை பின்பற்றவில்லை என பணிகளை நிறுத்தவும் நேரிட்டது. பல வரலாற்று ஆசிரியர்கள், அகழ்வராய்ச்சியின் அறிக்கை மீது ஏராளமான சந்தேகங்களை அடுக்கி இருந்தனர்.
இத்தனை குழப்பங்களுக்கும் தெளிவற்றத் தன்மைகளுக்கும் மத்தியில் நீதிபதிகள் ஷர்மாவும், அகர்வாலும் திட்டவட்டமாக தங்களுக்குத் தேவையான சில அடையாளங்களை தேர்ந்தெடுத்து அது ராமர் கோவில்தான் என முடிவுக்கு வந்து தங்களது ‘நம்பிக்கை’யை நிலைநாட்டி இருக்கின்றனர்.
அகழ்வராய்ச்சியில் கட்டிட அமைப்பின் சிதிலங்கள் மட்டும் காணப்படவில்லை. மிருகங்களின் எலும்புக்கூடுகளும் காணப்பட்டு இருந்தன. இதுகுறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. ‘மிருகங்களை காணிக்கை செலுத்தும் வழக்கம் இந்துக்களிடம் இருந்ததற்கான’ ஆதாரங்களை பழம் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி அர்த்தம் சொல்லி இருக்கின்றனர் நீதிபதி அகர்வாலும், ஷர்மாவும். அவர்கள் இருவரும் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றனர்.
ஆக, அங்கு ஏற்கனவே ஒரு இந்துமதக் கோவில், அதுவும் ராமர் கோவில் இருந்த முடிவுக்கு கொண்டு வந்தாயிற்று. அடுத்த கட்டத்துக்கு அல்லது பணிக்கு தாவுகின்றனர். ‘கோயிலை இடித்துவிட்டு மசூதியைக்கட்டியது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது’ என்கின்றனர்.
இந்துமதம் மட்டுமல்ல முஸ்லீம் மதக் கோட்பாடுகளும் அத்துப்பிடிதான் போலும். ஆனாலும் இந்த இடத்தில் யாரோ திருதிருவென விழிப்பது மாதிரி இருக்கிறது. கோவில் இடிக்கப்பட்டதா, யார் இடித்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும், சான்றுகளும் நிறுவப்படாமலே ‘கோவில் இடிக்கப்பட்டது’ என்று போகிற போக்கில் சொல்லிக் கடந்து விடுகிறார்கள்.
இதற்கு மேற்கோள்காட்ட வேதங்களிலோ, உபநிடதங்களிலோ, பழம் இலக்கியங்களிலோ வார்த்தைகள் எதுவும் அகப்படவில்லை போலிருக்கிறது. அதற்கென்ன. கோவில் இருந்தது என்றாகி விட்டது. மசூதியே இல்லை என்றுமாகிவிட்டது.
இனி அடுத்த கட்டம் ஒன்றிருக்கிறது. சகிப்புத்தன்மையையும், தேசீய ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியாக வேண்டும். அதற்கு வழி காட்டப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டும் என்கிறது தீர்ப்பு. கரசேவை, மசூதி இடிப்பினை அடுத்து அயோத்திப் பிரச்சினையின் அடுத்த அத்தியாயமாய் இந்தத் தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது.
இதுவே கடைசி அத்தியாயமாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர். கலைஞர் கருணாநிதியும், செல்வி.ஜெயலலிதாவும் கூட இவ்விஷயத்தில் இணக்கமான கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
முஸ்லீம் அமைப்புகள் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது என்று அறிவித்தவுடன், இந்துமகாசபையும் ‘முஸ்லீம்களுக்கு ஒரு பங்கு கூடக் கிடையாது’ என கோர்ட்டுக்குச் செல்லப்போவதாக சொல்லி இருக்கிறது.
இருதரப்பினரையும் பா.ஜ.கவும், காங்கிரஸும் சமாதானப்படுத்தி, மேல்முறையிட்டிற்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன என்பது இன்றைய செய்தி. பெரும்பான்மையின் அரசியல் இதோ ஆரம்பிக்கிறது.
இந்துமகாசபையை மேல்முறையீடு செல்லவிடாமல் சமாதானப்படுத்தி, “நீயும் சமாதானமாகப் போ’ என முஸ்லீம் அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படும். அதற்குப் பிறகும் தங்கள் உரிமையை நிலைநாட்ட முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றால் அவர்கள் தேச ஒருமைப்பாட்டிற்கும், சகிப்புத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் என்பதாக பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படும்.
இந்து மனோபாவத்தில், முஸ்லீம் எதிர்ப்புணர்வும், வெறுப்பும் மேலும் வார்க்கப்படும். “என்ன இழவோ. பிரச்சினை முடிந்தால் சரி” என்று அமைதி விரும்புவர்களும் முஸ்லீம் சமூகத்தின் மீது அதிருப்தியடைவார்கள்.
அங்கே ராமர் கோவில் இருந்தது என்றும் அது இடிக்கப்பட்டது என்றும், அதன் மீது மசூதி கட்டப்பட்டது என்றும் பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாய் இந்த தேசத்தில் ஒரு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை.
நாளை ராமர் பாலத்துக்கும் இந்த தீர்ப்பே முன்மாதிரியாகலாம். சேது சமுத்திரத் திட்டத்தை கிடப்பில் போட வேண்டியதுதான். தொடர்ந்து இந்துமதக் கடவுள்கள் ஒவ்வொன்றாய் ஆழங்களிலிருந்துக் கிளம்பி வந்து தேசத்தை உலுக்கிக்கொண்டே இருக்கும். அதுதான் பிரச்சினை. இதை சரிசெய்ய வேண்டியது இந்த தேசத்தின் பிரஜைகள் அனைவரின் கடமை. முஸ்லீம் மக்களுடையது மட்டும் அல்ல.
“மக்களின் நன்மைக்காக இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்”. இப்படி ‘இந்திய சுயராஜ்ஜியம்’ என்னும் நூலில் சொல்லியிருப்பவர் மகாத்மா காந்தி.
source: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post.html