விண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..!
”கடைசியாக சுவனம் செல்பவனின் இருப்பிடம் இந்த (ஒரு) பூமியளவு இருக்கும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதை இப்போது நினைத்துப்பார்த்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
நமது பூமி அடங்கும் அகிலத்தில் (Galaxy) மட்டும் சுமார் 100 பில்லியன் பூமியை ஒத்த கோள்கள் இருக்கின்றன என்றும் அதில் எவற்றிலாவது பூமியில் இருப்பது போன்ற உயிரினங்கள் வாழக்கூடிய தன்மை இருக்கலாம் என்றும் அல்லது அவ்வாறு அமையலாம் என்றும் அமெரிக்க விண்ணியல் ஆய்வு மையம் ஒன்றின் சார்பில் விஞ்ஞானிகளால் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து மனிதன் மேற்கொண்ட அவதானிப்புக்களில் இதுவரை சுமார் 300 கோள்களையே அவன் விண்வெளியில் இனங்கண்டிருக்கிறான்.
அவற்றில் பல வியாழன் கோள் போன்ற அடர்த்தி குறைந்த வாயுக் கோள்களாகும்..!அத்துடன் அவை அவற்றின் நட்சத்திரங்களை அண்மித்து சுற்றி வருவதால் அவற்றில் உயிரினங்கள் இருக்கக் கூடிய வாய்ப்பு மிகக் குறைவே. மனிதன் அவதானித்துள்ள கோள்களில் ஒரு சிலவே உயிரினங்கள் வாழத்தக்க தகவைக் கொண்டிருக்கின்றன.
மனிதனின் செயற்பாட்டால் தீவிரமடைந்திருக்கும் பூமி வெப்பமுறுதலின் விளைவாக பூமியில் உயிரினங்கள் வாழக் கூடிய சூழலை அவன் இல்லாது ஆக்கிவிடுவான் என்ற நிலை தோன்றி இருக்கும் இவ்வேளையில் அமெரிக்க மற்றும் மேற்குலக விண்ணியலாளர்கள் விண்ணில் மனிதன் வாழக்கூடிய பிற கோள்களைக் கண்டறிவதில் அதிக ஆர்வம் செலுத்துவது தெரிகிறது.
இறைவனின் படைப்பில் மனிதனின் கண்டுபிடிப்புகள் துளியளவுதான். கண்டுபிடிக்காதவைகள் கடலளவுக்கு மேல் என்பது எவ்வளவு உண்மை என்பது விளங்குகிறதல்லவா!