மஹரும், வரும் தட்சணையும்
MUST READ
[ நீங்கள் (திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மஹர்களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள்”. என்கிறது அகிலத்தை படைத்தவனின் வேதம்.
கரும்பை விலை கொடுத்து வாங்குங்கள் என்றால் நீங்கள் கரும்பு தின்னகூலி கேட்கின்றீர்களே! நியாயமா இது?
ஒரு வேலைகாரியாகவே மாறி தனது குடும்பம் என்று உழைக்கின்ற பெண்ணுக்கு திருமணம் செய்யும்போது அவளுக்குரிய மஹரை கொடுத்துவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டால் பெயரளவில் ரூபாய் 500ம் 1000மும் கொடுத்துவிட்டு அவளுடைய வீட்டிலிருந்து வரதட்சனை என்ற பெயரில் 50 பவுனும் 50 ஆயிரம் ரொக்கம், 80 பவுனும் 80 ஆயிரம் ரொக்கம் என்று கசக்கிபிழிந்து வாங்குகின்றானே மானங்கெட்டவன் அவன். அல்லாஹ்வின் வேதனையை அச்சமற்று இருக்கின்றானா?
ஒரு பெண்ணை தனது சம்பாத்தியத்தில் வைத்து காப்பாற்ற முடியாமல் தனது உழைப்பால் அவளையும் தனது குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாதவன் அவளது குடும்பத்தில் வரதட்சனை என்ற பெயரில் பிச்சை வாங்கி சுகமாகவாழவேண்டும் என்பவனுக்கு வேறு எந்தபெயர் பொருந்தும்.
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பெண்ணை வரதட்சணை கொடுத்து கரையேற்ற முடியாமல் தனது பெண்னையே விபச்சாரத்திற்க்கு அனுப்பி திருமணம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்கள் இதற்கு காரணம் இல்லையா? இந்த குற்றத்திற்க்கு வரதட்சணை காரணமில்லையா?]
இறைவன் ஒன்றை தடுத்திருக்க அதை செய்வது இறைவன் விரும்பாததாகும். இறைவன் ஒன்றை கட்டாயம் செய்யும்படி கூறியிருக்க அதை செய்யாமலிருப்பதும் இறைவன் விரும்பாததாகும். ஆனால் செய் என்றதை செய்யாமல் விட்டு விட்டு அதற்கு நேர் எதிர் மாற்றமாக ஒன்றை செய்வது நிச்சயமாக நம்மை நரக நெருப்பில் கொண்டு சேர்க்கும்.
இறைவன் தனது இறைமறையில் கூறுகின்றான்..
நீங்கள் (திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களின் மஹர்களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள்”. (சூரத்துந்நிஸா 04:04)
மஹர் என்ற வார்த்தையை திருமணத்தின் போது முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தினாலும் மஹர் என்றால் என்ன என்பதை அதிகம் அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும் பொருளோ அல்லது தொகையோ மஹர் எனப்படும் மணக்கொடையாகும்.
திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்கிறது இறைமறை (04:21)
எனவே உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளும் மணமக்களே மஹர் பற்றி பேசி அதனை கூட்டவோ குறைக்கவோ தகுதி பெற்றவர்கள் என்றும் அதனை கட்டாயமாக கொடுத்து விடுங்கள் என்றும் கூறுகிறது இறைமறை (04:24)
எனவே இதில் மற்றவர்கள் தலையிடக்கூடாது.ஒரு பெண் தன்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருப்பில் ஆக்கிய போது தான் அந்த பெண்ணை மணம் செய்து கொள்ளாமல் நபி தோழர் ஒருவருக்கு குர்ஆனின் வசனங்களை மணமகளுக்கு கற்று கொடுப்பதையே மஹராக்கி திருமணம் செய்து வைத்ததிலிருந்து மணப்பெண்ணின் வலீ (பொருப்புதாரர்) மஹரை நிர்ணயம் செய்யலாம் என ஸஹ்ல் இப்னு ஸஃது ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதை புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களிலிலிருந்து நாம் அறிய முடிகின்றது.
மஹராக தங்கமாகவோ, ரொக்கமாகவோ, சொத்துக்களாகவோ, குர்ஆனை கற்றுக்கொடுப்பதையோ அல்லது வேறு எதையேனுமோ மணமகள் மணமகனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்
திருமணம் செய்தவர் எதோ ஒரு காரணத்தால் உடலுறவுக்கு முன்பே தன் மனைவியை தலாக் விட்டுவிட்டால் மணப்பெண் மன்னித்து விட்டு விட்டாலன்றி நீங்கள் நிர்ணயம் செய்ததில் பாதி அவளுக்குண்டு என்கிறது இறைமறை சூரத்துல்பகரா (02:237)
ஒரு பெண் தன் கணவனால் கைவிடப்படும் போதும், தன் கணவனை இழந்து நிர்கதியாக நிற்கும் போதும் தன் வாழ்க்கையை தானே சரிசெய்துகொள்ளும் வகையில் பயனளிக்கக்கூடியது தான் மஹர் எனப்படும் மணக்கொடை.
கணவன் தலாக் விட்டால் மனைவி மஹராக திருமணத்தின் போது தான் பெற்றதை திரும்பப் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் மனைவி கணவனை வேண்டாம் என்று முடிவு செய்து குல்உ (மணவிலக்கு) செய்தால் கணவனிடமிருந்து மஹராக பெற்றதை திருப்பிக்கொடுத்துவிடவேண்டும்.
அப்துல்லாஹ்வின் மகள் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹா மஹராக வழங்கிய தோட்டத்தை அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்புக்கு கட்டுபட்டு திருப்பி வழங்கி மணவிலக்கு பெற்ற நிகழ்ச்சியை அபூ ஜு பைர் அறிவிக்கின்ற தாரகுத்னி ஹதீஸ் மூலம் நாம் அறிய முடிகின்றது.
இவ்வாறு இறைவன் பெண்களுக்கு மஹரை கட்டாயமாக கொடுத்து விடுங்கள் என்று கூறியிருக்க பெயரளவிலும் ஏட்டளவிலும் கொடுப்பது போல் காட்டிவிட்டு மறைவில் வரதட்சனை என்ற பெயரில் அவர்களது சக்திக்கு மீறிய தொகையை பெற்று வருவதை நியாயமா என்று சற்று சிந்தித்து பாருங்கள்.
பெண் திருமண பந்தத்தை அடையும் வரை தன்னுடைய பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் வசித்து வருகின்றாள். தான் விரும்பியதை செய்வதற்க்கும் விரும்பாததை செய்யாமல் இருப்பதற்க்கும் உரிமை பெற்றவளாக அவ்வீட்டில் வலம் வருகின்றாள். தவறே செய்துவிட்டாலும் கடினமாக இல்லாமல் மென்மையாகவே அறிவுருத்தப்படுகின்றாள். அவள் நினைத்த நேரத்தில் உறங்கவும் விழிக்கவும் விரும்பியதை உண்ணவும் விரும்பாததை சாப்பிடாமலும் இருக்க முடிகின்றது.
அதே பெண் ஒரு ஆண் மகனால் முடிக்கப்பட்டவுடன் 18 வருடகாலமாக தன் மீது பிரியம் வைத்திருந்த பெற்றவர்களையும் சகோதர சகோதரிகளையும் பிரிந்து புது சூழலையும் புதுவிதமான ரசனையுள்ள மனிதர்களையும் எதிர்கொள்கிறாள். புது சூழ்நிலை அவளது உள்ளத்தையும் உடலையும் பாதிக்கின்றது. தலைவலி காய்ச்சல் என்றால் தாய் வீட்டில் கேள்வியில்லாமல் உறங்கி எழுந்தவள் கணவனது வீட்டில் அதே உடல் நிலையுடன் தனது பணிகளை முடித்துவிட்டே உறங்கவோ அசரவோ முடிகின்றது. தனது வீட்டில் எஜமானியாக தனது பணிகளை செய்தவள் புகுந்த வீட்டில் அனைவரையும் அனுசரித்து ஒரு வேலைகாரியை போன்றே அவரவது பணிகளை செய்து கணவன் வீட்டாரை திருப்திபடுத்துகின்றாள்.
இல்லற உறவில் கணவனும் மனைவியும் சேர்ந்தே இன்புற்றாலும் பிள்ளை பெறுவதில் உடலுறவைத் தவிர கணவனது பங்கு ஏதும் இல்லை. ஆனால் மனைவியோ 10 மாதம் அந்த கருவை சுமந்து வாந்தி, மயக்கம், சோர்வு, கால்வீக்கம் மற்றும் பிரசவ வேதனைகளை அனுபவித்தே இவனுடைய குழந்தைளை பெற்றெடுக்கின்றாள். இத்தனை வேதனைகளுடன் பெற்றெடுக்கப்பட்ட அந்த குழந்தை கூட தகப்பனின் பெயரை கொண்டே மக்கள் மத்தியில் அறியப்படுகின்றது.
குழந்தை வளர்ப்பிலாவது கணவன் எங்கேனும் உயர்ந்துவிட்டானா என்றால் அதுவும் இல்லை. பெற்ற குழந்தைக்கு பசியறிந்து பால் ஊட்டுவதும், அதன் மல ஜல அசுத்தங்களை நீக்கி உறங்கச் செய்வதும் மனைவியின் வேலையாகவே எங்கும் இருக்கின்றது.
தாய் உறங்குகின்றாள் குளியலறையில் இருக்கின்றாள் என்றா அந்த குழந்தை பார்க்கின்றது. அதற்க்கு தேவை என்றால் இரவு பகலென பாராமல் ஓடோடி வரவேண்டும் என்கிறது.
இல்லையெனில் வீட்டை தன்னுடைய அழுகையென்னும் மினி சைரனில் அலறவைக்கின்றது. இவனோ அந்த சைரனின் சத்தம் அவனை பாதிக்காது மனைவி மாத்திரமே அதற்கு பொருப்பு என்று உறங்குபவனாகவே இருக்கின்றான்.
ஆனால் பெண்ணோ உறக்கம் பாராமல் தன் குழந்தையின் தேவையை நள்ளிரவிலும் முடித்துவிட்டே உறங்கச் செல்கின்றாள். மீண்டும் காலையில் உரிய நேரத்தில் எழுந்து குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைகளையும் தயார் செய்கின்றாள்.
இப்படி ஒரு வேலைகாரியாகவே மாறி தனது குடும்பம் என்று உழைக்கின்ற பெண்ணுக்கு திருமணம் செய்யும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்துவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டால் பெயரளவில் ரூபாய் 500ம் 1000மும் கொடுத்துவிட்டு அவளுடைய வீட்டிலிருந்து வரதட்சனை என்ற பெயரில் 50பவுனும் 50ஆயிரம் ரொக்கம், 80பவுனும் 80ஆயிரம் ரொக்கம் என்று கசக்கி பிழிந்து வாங்குகின்றானே மானங்கெட்டவன் அவன். அல்லாஹ்வின் வேதனையை அச்சமற்று இருக்கின்றானா?
ஒரு பெண்ணை தனது சம்பாத்தியத்தில் வைத்து காப்பாற்ற முடியாமல் தனது உழைப்பால் அவளையும் தனது குடும்பத்தினரையும் காப்பாற்ற முடியாதவன் அவளது குடும்பத்தில் வரதட்சனை என்ற பெயரில் பிச்சை வாங்கி சுகமாக வாழவேண்டும் என்பவனுக்கு வேறு எந்த பெயர் பொருந்தும் என்று சிந்தித்து கூறுங்கள்.
இந்த அநியாய கொள்ளையில் கணவனது பங்கு பாதி என்றால் மீதி பாதி அவனது தாய்க்கும் தகப்பனுக்கும் உரியதாகவே இருக்கின்றது. தனது மகனும் மருமகளும் நன்றாக வாழவேண்டும் என்பதற்காகதான் பெண் வீட்டாரிடம் வரதட்சனை வாங்குகின்றார்களாம். தனது குடும்பத்தை காப்பற்ற வக்கற்ற ஆண் மகனை பெற்றெடுத்த இவர்கள் வாழ்வதற்க்கு வேண்டிய வழிமுறைகளை செய்து தருவதைவிட்டு விட்டு மருமகளிடம் வாங்கி இவனை வாழவைப்பது எந்த வகையில் நியாயம் என்று சிந்தித்து பாருங்கள்.
பெற்றவர்களே வரதட்சணை வாங்க வேண்டும் என்று வலியுருத்தினாலும் மணமகன் வாங்கமாட்டேன் என்றால் இவர்களால் என்ன செய்து விடமுடியும். இதில் மணமகன் எனது தாய்தந்தைதான் வாங்கிவிட்டார்கள் எனக்கு உடன்பாடில்லை என்று கூறுபவன் பிரச்சினையை சந்திக்க திராணியற்றவன். இப்படி ஒரு குடும்பத்தை கசக்கி பிழிந்து வாங்கி அந்த குடும்பத்தை படுகுழியில் தள்ளுபவன் அநியாக்காரனல்லவா?
பெண்ணை வரதட்சணை கொடுத்து கரையேற்ற முடியாமல் தனது பெண்னையே விபச்சாரத்திற்க்கு தமிழ்நாட்டின் மதுரை மாவட்டங்களில் அனுப்பி திருமணம் செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்கள் இதற்கு காரணம் இல்லையா?
இந்த குற்றத்திற்க்கு நீங்கள் வாங்கும் வரதட்சணை காரணமில்லையா? மானமுள்ளவன் பெண்குழந்தை பிறந்துவிட்டால் வரதட்சணை கொடுமைக்கு பெண்னை பலியாக்க விரும்பாமல் பிஞ்சிலேயே கள்ளிபாலையும், நெல்மணியையும் கொடுத்து கொலை செய்கின்றார்களே இந்த கொலை பாவத்தில் வரதட்சணை வாங்குகின்ற மணமகன் மற்றும் அவனது பெற்றோர்களுக்கு பங்கில்லை என்று நினைக்கின்றீர்களா? வுரதட்சணை கொடுக்க இயலாமல் திருமண சுகத்தை கள்ளதனமாக பெறுகின்ற முதிர் கன்னியின் செயலுக்கு நீங்கள் காரணமில்லையா?
கரும்பை விலை கொடுத்து வாங்குங்கள் என்றால் நீங்கள் கரும்பு தின்ன கூலி கேட்கின்றீர்களே! நியாயமா இது? அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் திருமணக்கொடையை (மஹரை) பெண்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று (04:04) கட்டளையிட்டிருக்க, கொடுப்பதாக 100ஐயும் 500ஐயும் காட்டிவிட்டு ஆயிரமாயிரமாக வரதட்சணை என்று அதற்க்கு மாற்றமாக வாங்கினால் நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்தும் வரும் தட்சணை. அவனது தட்சணை நரக நெருப்பை அன்றி வேறு எதுவாக இருக்கும்?.
இதிலிருந்து முற்றிலுமாக விலகி அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டிய நேர்வழியில் திருமணபந்தத்தை அடைந்து அல்லாஹ்வின் பொருத்ததை அடையக்கூடியவர்களாக ஆகுங்கள்.