ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று சொன்னால் அதை தீர்ப்பு என்று கொள்ள முடியாது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம். 1992 மசூதி இடிப்பிற்கு பிறகு இந்தியா டுடே ஒரு கணிப்பை தொடர்ச்சியாக நடத்தியது.
நடுநிலைமை என்ற பெயரில் அதில் கருத்துக்கூறிய அனைவரும் அந்த இடத்தில் கல்லூரி கட்டவேண்டும், கக்கூசு கட்டவேண்டும் என்றார்கள்.
மசூதியை இடித்த பார்ப்பனிய வெறித்தனத்தை மறைத்து முற்போக்கு ஆய்வாக அந்த ஏடு அந்தக் கணிப்பை வெளியிட்டது. அந்த அளவுக்கான திரை மறைப்புகள் கூட தேவையின்றி நிர்வாணமாகவே தங்கள் பார்ப்பனச் சாய்வை வெளிக்காட்டியிருக்கிறது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.
இந்திய அரசியல் சாசனம் ஒன்று 1947 ஆகஸ்ட் 15 ல் இருந்தபடியே வணக்கத்தலங்கள் பராமரிக்கப்படும் என இருக்கிறது. இது இந்துக் கோவில்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதி. ஏனென்றால் அனேக இந்துக் கோவிலகள் சமணம் பௌத்தம் உட்பட பிற மத வணக்கத்தலங்களை இடித்துக் கட்டப்பட்டவைதான். ஆனால் 1992 வரை மசூதியாக இருந்திருக்கிறது. 1951 வரை வணக்கம் நடத்தப்பட்டு வந்திருக்கிறது, அதுவும் 1949ல் மசூதிக்குள் இரவோடிரவாக திருட்டுத்தனமாக உள்ளே வைக்கப்பட்ட ராமன் சிலையின் காரணமாக ஏற்பட்ட வழக்கில் தடைவிதிக்கப்பட்டதினால் தான் 1951க்கு பிறகு வணக்கம் நடத்தப்படவில்லை. ஆனாலும் இந்த விபரங்களோ, விதியோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ராமர் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று ஒரு நீதிபதியும், ராமர் கோவில் இடிக்கப்படவில்லை ஆனால் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த கோவிலின் மேல் மசூதி எழுப்பப்பட்டது என மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பை கூறியிருக்கின்றனர். ஆனால் மூவரும் ஒன்றுபடும் இடம் அந்த இடத்தில் ஏற்கனவே கோவில் இருந்தது என்பதை தொல்லியில் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன என்பதுதான். தொல்லியல் துறை எந்த தடயங்களின் அடிப்படையில் கோவில் இருந்தது எனும் முடிவை வந்தடைந்தது?
தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்பட்டதாய் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செய்யப்பட்ட ரகசிய ஆய்வு என்றால், நாட்டின் மொத்த மக்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் ஒரு பிரச்சனையில் ரகசிய ஆய்வின் அடிப்படையில் தீர்ப்பளிப்பது என்ன விதமான நடைமுறை?
ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் கோவிலை இடித்துத்தான் அல்லது கோவில் இருந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை நீரூபித்திருக்கிறது என்றால் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?
அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதில் இரு தரப்புக்குமே சரியான ஆவணங்கள் இல்லை என தங்கள் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். ஆனால் கடைசி அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ உரிமை முஸ்லீம்களிடம் இருக்கிறது. எனும்போது இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பின் பொருள் என்ன?
அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் தேசத்தின் பெரும்பான்மை மனசாட்சியின் விருப்பத்தின் அடிப்படையில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டதே அதே அடிப்படையில் பெரும்பான்மை இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கி தீர்ப்பளிக்கப்பட்டதா?
ஆயிரமாயிரம் ஆண்டுகள் வசித்துவரும் மலைவனம் என்றாலும் பழங்குடி மக்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் ஆளும் வர்க்கங்களின் விருப்பிற்கேற்ப அந்த மலைகளும் வனங்களும் பன்னாட்டு உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தம் என்று பசுமை வேட்டை நடத்துகிறதே அரசு, அந்த அடிப்படையில் ஆளும் வர்க்கங்களின் விருப்பம் என்பதால் இந்துக்களுக்கு கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதா?
இது நல்லதொரு தீர்ப்பு. ஏதாவது ஒரு தரப்பாக தீர்ப்பளித்து நாட்டில் மீண்டும் கலவரங்களும் கொலைகளும் நடந்து அமைதி குலைந்துபோகாமல் இரண்டு தரப்பையும் அனுசரித்து நாட்டின் பொது அமைதியையும் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு என்று கூட சிலர் கருதலாம். இந்துக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் கோவில் கட்டினால், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் மசூதி கட்டினால் பொது அமைதியும் முன்னேற்றமும் பாதுகாக்கப்படும் என கருதுகிறார்களா?
ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் நியாயமான தீர்ப்பளித்தால் நாட்டின் அமைதி கெடும் என்றால் நாட்டில் அரசின் பணி என்ன? காஷ்மீரில், வட கிழக்கு மாநிலங்களில் தங்களுக்கு உரிமைகள் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என போராடும் மக்களை அமைதியை கெடுப்பதாக, நாட்டை துண்டாட நினைப்பதாக கூறித்தானே ராணுவத்தி நிறுத்தி நசுக்கி வருகிறது அரசு. என்றால் பொது அமைதி என்பதன் பொருள் என்ன? மக்களுக்கு விரோதமானதாக இருந்தாலும் அரசை எதிர்க்கக்கூடாது என்பது தான் பொது அமைதியா?
இந்தத்தீர்ப்பின் மூலம் இரண்டு சாதகமான அம்சங்களை இந்துப்பாசிசங்கள் பெற்றிருக்கின்றன. ஒன்று, புராணக் குப்பைகளை அடிப்படையாக வைத்து சேதுக்கால்வாய் பணிகளுக்கு தடைவிதிக்கவைத்த பார்பனீயம் பரப்பிவரும், வரலாற்றில் இருந்திராத கற்பனைப் பாத்திரமான ராமனுக்கு, இந்த இடத்தில் தான் அவன் பிறந்தான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருப்பது.
இரண்டு கோவில் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருப்பதன் மூலம், ஏற்கனவே இந்து வானரங்கள் காசி, மதுரா என கொக்கரித்து வரும் நிலையில் தீர்ப்புக்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது அதிகரிக்கும். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் பிற மதத்தினருடன் கலந்து பழகும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் இந்து எனும் அடைமொழிக்குள்ளே அடைபட்டுக்கிடக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
ஆயிரத்துச் சொச்சம் சதுர அடி நிலம் கிடைத்திருக்கிறது என்பதல்ல இந்தத்தீர்ப்பு. அதிகாரவர்க்கத்திலும் அரசு எந்திரத்திலும் பார்ப்பனப் பாசிசங்களின் மேலாதிக்கம் மீண்டும் ஒருமுறை நிரூபணப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்களாய் முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்புப்போர் நடத்தாதவரை இந்தப்பாசிசங்களை வீழ்த்தமுடியாது என்பதுதான் இத்தீர்ப்பின் அடிநாதமாய் ஒலிக்கிறது.