பாசமும், தேட்டமும்!
ஷுஐப்
பாசமும், தேட்டமும்! என்ற வார்த்தையில் அன்பினால், பாசத்தால், தேட்டமும் கவலையும், துன்பமும், இன்பமும் உண்டு! ஆனால் நாம் யார் மீது பாசம் வைத்து உள்ளோமோ அவர்களைப் பிரியும் போது நம் உள்ளம் கடுமையாக பாதிக்கவும் படலாம் என்பதை மனிதர்களாகிய நாம் யதார்த்தத்தில் அறிந்தே வைத்துள்ளோம். இருந்தாலும் சில பாசங்கள் பிரிவால் – வேதனையையும், துன்பத்தையும், தருபவையாகவே உள்ளன!
பாசத்தில் எப்படி வேதனையும், கவலையும் உள்ளது என்பதை அல்லாஹு ரப்புல் ஆலமீனுடைய சத்திய நேர்வழிகாட்டல் நூல் மற்றும் – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் மூலமும் பார்ப்போம். முதலில் யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாறு பற்றி சத்திய நெறிநூல் திருகுர்ஆன் வழியாக தனது அன்பு மகனைப் பிரிந்த யாகூப் அலைஹிவஸல்லம் பட்ட கவலைகள் பற்றி அறிவோம்; அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.
யூஸுஃபி(ன் சரித்திரத்தி)லும் அவருடைய சகோதரர்களி(ன் சரித்திரத்தி)லும் வினவுபவர்களுக்குப்(பல)படிப்பினைகள் திட்டமாக இருக்கின்றன. (அல்குர்ஆன்:12:7)
பலப்படிப்பினைகள் திட்டமாக இருக்கின்றன என்று அல்லாஹ் சொல்வதில் திருகுர்ஆனில் உள்ள இறைத்தூதர் யூஸுப் அலைஹிவஸல்லம் என்ற 12-ம் அத்தியாயத்தை படிப்பவர்கள் உணரலாம். இந்த அத்தியாயத்தில் பலப்படிப்பினைகள் இருந்தாலும் இங்கே நாம் பாசமும் தேட்டமும் பற்றிய தலைப்பில் எழுதுவதால் அதுப்பற்றி நமக்கு ஏற்படும் அனுபவப்பூர்வமான படிப்பினைகளையே குர்ஆன், நபிவழியில் “இன்ஷா அல்லாஹ்” காணப்போகிறோம்.
இறைத்தூதர் நபி யாகூப் அலைஹிவஸல்லம் அவர்களின் இளைய புதல்வரான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் தந்தை யாகூப் அவர்கள், தனது அன்பு மகனும் பேரழகுக்கு சொந்தக்காரருமான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் பிரிவை தாங்கமுடியாமல் தனது அன்பு மகனை தேடித் தேடி, துக்கப்பட்டவர்களாக, கவலையினால் அழுதழுது ரொம்பவும் சங்கடப்பட்டதாக, அல்லாஹ்வின் சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக அறியமுடிகிறது
…. (அவ்வாறே அவர்கள் தம் தந்தையிடம் வந்து கூறியபோது) “அவ்வாறல்ல! உங்களுடைய மனங்களே உங்களுக்கு ஒரு(தீய) காரியத்தை அழகாக்கிவிட்டன; (அதைச் செய்து முடித்து விட்டீர்கள் எனவே (என்னுடைய நிலை) அழகான பொருமை மேற்கொள்வதுதான்; அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வருவதற்கு அல்லாஹ் போதுமானவன். நிச்சயமாக அவன்தான் முற்றும் அறிந்தவன்; “ஞானமுள்ளவன்” என்று அவர் கூறினார்.
(பின்னர்) அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது (ஏற்பட்டு)ள்ள என்னுடைய துக்கமே! என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார். கவலையினால் (அழுதழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்துவிட்டன. (எனினும்) அவர்(துக்கத்தை) மென்று விழுங்கிக் கொள்பவராக இருந்தார். (அல்குர்ஆன்: 12:83,84)
நபி யாகூப் அலைஹிவஸல்லம் அவர்கள், தங்களது அன்பு மகனான நபி யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிகமான பாசம் உள்ளவர்களாக இருந்துள்ளதை திருகுர்ஆன் மூலம் அறிகிறோம், நமது பாசம் உள்ள ஆண், பெண், குழந்தைகள் – பாசம் உள்ள மனிதர்களுக்கு கண்குளிர்ச்சியாவார்கள்.
அந்த பாசம் உள்ள, நம் அன்பு குழந்தைகள் நமக்கு இன்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறார்கள் என்பது அல்லாஹ்வுடைய சத்திய வழிகாட்டல் நூல் மூலம் அறிகிறோம்; அது எப்படி இன்பமாகவும் துன்பமாகவும் இருக்கிறார்கள்? அந்த பாசம் உள்ள, வாசம் உள்ள நம்முடைய அன்பு குழந்கைள், நம்மோடு நம் பக்கத்திலேயே கொஞ்சி விளையாடும் போது அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் நமக்கு பெரும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது! ஆனால் நம்முடைய அன்பும், பாசமும் உள்ள, வாசம் உள்ள குழந்தைகள், நம்மைவிட்டு பிரியும் போதோ அல்லது அவர்களை விட்டு நாம் பிரியும் போதோ, நமக்கு உண்மையிலேயே துக்கமும், வேதனையும் வருகிறது. அன்பு உள்ளவர்கள் பாசம் கருணை உள்ளவர்கள் நிச்சயமாக இதை உணரவே செய்வார்கள். நபிமொழி செய்தி பேழைகளில் உள்ள அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லைப் பார்ப்போம்.
ஒருநாள் கிராமவாசி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அவர்களின் வார்த்தையில் உண்மையான அன்பு, பாசம் இல்லாதவர்களுக்கு, கடுமையான சொற்கள் உள்ளதை மேல் காணும் நபி மொழி உணர்த்துகிறது என்பதை பாசம் உள்ளவர்களும், பாசம் இல்லாதவர்களும் புரிந்து கொள்ளவே செய்வார்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீனால் மனித சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட அன்பு, கருணை, பாசம் என்பது அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் இரண்டறக் கலந்து அவர்களின் மனம் பாசத்தையும் அன்பையும் கருணையையும் பொழிந்தது என்பதை நபிமொழி செய்தி பேழைகளில் இருந்து அறிகிறோம்.
எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டால் ‘குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்து நபி அவர்கள் கருணையினாலும், பாசத்தினாலும் தொழுகையை சுருக்கி தொழுது இருக்கிறார்கள் என்பதை கீழ் உள்ள நபி மொழி உணர்த்துகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன். அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு ஏற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றொரு நபிமொழியில்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரான ஹஸன்ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முத்தமிட்டார்கள்; அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிழ்ரளியல்லாஹு அன்ஹு “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார் அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார் என்று கூறினார்கள். (நூல்: புகாரி)
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நேர்வழி காட்டி நூலில் அழகாக, அன்பாக கருணையாக கூறுகிறான்.
…. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப் பெரும் கருணை காட்டுபவன். நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன்: 2:143)
இந்த மனிதனை அழகான முறையில் படைத்து பரிபக்குவப்படுத்தி, தனது தூதர்கள் மூலம் வழிகாட்டி – இந்த மனித சமுதாயத்தின்மீது அன்பையும், அருளையும், கருணையையும் பொழிந்து, தனது இறுதித் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மூலம் அழகாக தெளிவாக வழிகாட்டினானே அந்த ரப்புல் ஆலமீன் நிச்சயமாக கருணையாளன்தான்; அல்லாஹ் தனது அன்பு, கருணை, பாசம் என்கின்ற அருளை இந்த மனித சமுதாயத்திற்கு அன்பளிப்பு செய்து தனது கருணையை பொழிந்ததின் காரணமாகவே, நாமும் அன்பும், கருணையும், பாசமும், நேசமும், தேட்டமும், கொள்பவர்களாக உள்ளோம்! அல்ஹம்துலில்லாஹ்,
இங்கே உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வையும் எழுத விரும்புகிறோம்.
உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிழ்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதுபோல ‘குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். உடனே அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்டவில்லையானால் எப்படி மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்துகொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்கமாட்டேன் என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள் உமர்ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படி என்றால் எந்த அளவுக்கு அன்புக்கும், கருணைக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது என்பதையும், அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அன்போடும், பாசத்தோடும், கருணையோடும், தேட்டத்தோடும் நினைத்து நினைத்து வாழ வேண்டும்; அல்லாஹ் நம் எல்லோருக்கும் அருள் செய்வானாக!
சத்திய வழிகாட்டல் நூல் மூலம் பாசம் என்பது எப்படி சோதனையாக வருகிறது என்பதை யாகூப் அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கையின் மூலம் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது என்பதை அன்புள்ளவர்களும், பாசம் உள்ளவர்களும், பலப்படிப்பினைகளை நிச்சயம் அறிந்து கொள்வார்கள். மேலும் யூஸுஃப் நபி அவர்களின் தந்தையவர்கள், தனது அன்பும், பாசமும் உள்ள அன்பு மகனை தேடித் தேடி சங்கடப்பட்டுக் கொண்டிருந்த தந்தையைப் பார்த்து மற்ற மக்கள் எல்லாம்,
….(இதனைக் கண்ணுற்ற அவருடைய மக்கள் தந்தையே!) “அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் (இளைத்துத் துரும்பாக) மெலிந்து போகும்வரை, அல்லது அழியக்கூடியவர்களில் உள்ளவராய் நீங்களாகும் வரை யூஸுஃபை நினைப்பவராகவே இருந்து கொண்டிருப்பீர்கள் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள்.
அதற்கு “என்னுடைய துன்பத்தையும், கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாததை(யெல்லாம்) அல்லாஹ்விடம் இருந்து நான் அறிவேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:85,86)
அடுத்து மூஸா அலைஹிவஸல்லாம் அவர்களின் தாயாருக்கும் தான் பெற்றெடுத்த அன்பு மகனை பிரியும் சூல்நிலைகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் திருகுர்ஆன் அத்தியாயம் 28. அல்கஸஸ் (பார்வையிடவும்) தெளிவு படுத்தும்போது:
இன்னும் மூஸாவுடைய தாய்க்கு நாம் வஹி அறிவித்தோம்; “அதற்கு (உன்னுடைய அக்குழந்தைக்கு) நீ பாலூட்டுவாயாக; பிறகு அ(க்குழந்)தையைப் பற்றி நீ பயந்தால் அதனை ஆற்றில் நீ போட்டுவிடு; (தண்ணீரில் மூழ்கிவிடுமோ என்று) நீ பயப்பட வேண்டாம்; (அதைப்பிரிந்திருப்பது பற்றி) கவலைப்படவும் வேண்டாம்: நிச்சயமாக நாம் அவரை உன்பக்கமே திருப்புவோம்: இன்னும் அவரை, (நம்முடைய) தூதர்களில் ஒருவராக ஆக்குவோம். (அல்குர்ஆன் 28:7)
இந்த வசனத்தில் மூஸா நபி அவர்களின் தாயாருக்கு தன்னுடைய அன்பான, பாசமான, குழந்தையை அல்லாஹ்வின் கட்டளைப்படி ஆற்றில் விட்டு விட நேர்ந்தாலும், நிச்சயமாக அவரை உன்பக்கம் திருப்புவோம் என்றும் வாக்குறுதி அளிக்கிறான். இருந்தாலும் தன்னுடைய அன்பு மகனை நினைத்து பாசத்தால் தேட்டத்தால் மூஸா நபி அவர்களின் தாயாரின் உள்ளம் வெறுமையாகிவிட்டது என்று சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக சொல்கிறான்.
(குழந்தையை ஆற்றில் போட்ட துயரத்தால்) மூஸாவுடைய தாயாரின் இதயம் வெறுமையாகிவிட்டது; அவர் நம்பிக்கையாளர்களில் உள்ளவளாவதற்காக – அவருடைய இதயத்தை நாம் கட்டுப்படுத்தி வைத்திராவிட்டால், நிச்சயமாக அதனை (அக்குழந்தையைத் தன்னுடையதென) வெளிப்படுத்த முனைந்திருப்பார். (அல்குர்ஆன்:28:10)
நீதி தவறாத வல்ல ரஹ்மான், மூஸா அலைஹிவஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் தாயாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவு செய்து தான் பெற்றெடுத்த அன்பு மகனை பாசத்தினால், தேடாமல் இருப்பதற்கும், வெறுமையாகிவிட்ட உள்ளம் மகிழ்ச்சியாகவும், கண்குளிர்ச்சியோடு பார்ப்பதற்கும்-உம்மு மூஸாவின் கவலையையும், சோதனையையும் லேசாக்கி அன்பாளன் அல்லாஹ் அன்போடு மூஸா நபியின் தாயாருக்கு அருள் செய்துவிட்டான்; அன்புள்ள சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே, தாய்மார்களே தயவுசெய்து திருகுர்ஆன் 28:11,12,13 பார்வையிடவும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது சத்திய நேர்வழிகாட்டல் நூல் வழியாக நூஹ் நபி அவர்களின் வரலாறு பற்றி அத்தியாயம் 11 வசனங்கள் 25, முதல் 49, வரை சொல்லும்போது (தயவுசெய்து குர்ஆனை பார்வை இடவும்) இங்கே இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து – வஸ்ஸலாம் அவர்களின் பாசமுள்ள மகனைப் பார்த்து,
“என்னருமை மகனே! எங்களுடன் (கப்பலில்) நீயும் ஏறிக்கொள்; நீ நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிட வேண்டாம், என்று (உரக்க) அழைத்தார். (11:42) ஆனால் தன்னுடைய தந்தையின் அழைப்புக்கு செவிசாய்க்காத பாசமுள்ள அன்பு மகன் தன் முன்னாலேயே அல்லாஹ்வின் தண்டனையின் மூலம் “அவ்விருவருக்குமிடையில் ஓர் அலை(குறுக்கே) திரையிட்டது. உடனே அவன் (வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் உள்ளவனாகிவிட்டான்” (அல்குர்ஆன்: 11:43)
தனது அன்பு மகன் தன் முன்னாலேயே வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்பட்டது பெரும் வேதனையையும், தேட்டத்தையும் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்ததையும் சத்திய நெறி நூல் மூலம் அறிய முடிகிறது.
நூஹ் தம்முடைய இறைவனை (பிரார்த்தித்து) அழைத்து, “என்னுடைய இறைவனே! நிச்சயமாக என்னுடைய மகன் என் குடும்பத்திலிருந்து உள்ளவன் தான். நிச்சயமாக (என் குடும்பத்தினரைக் காப்பாற்றுவதாக நீ கூறிய) உன்னுடைய வாக்கு உண்மையானதாகும்: நீ தீர்ப்பளிப்போர்களில் மேலான நீதிபதியாக இருக்கிறாய்” என்று கூறினார். (அல்குர்ஆன்: 11:45)
இங்கே இறைத்தூதர் நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களின் மகன் மீது ஏற்பட்ட பாசமும், தேட்டமும், சோதனையாக முடிந்துபோனது.
(அப்பொழுது) “நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தில் உள்ளவனல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயலுடையோன் ஆவான்; எனவே, எதில் உமக்கு (தெளிவான) அறிவு இல்லையோ அதனை என்னிடம் நீர் கேட்க வேண்டாம். அறியாதவர்களில் உள்ளவராக நீர் ஆவதை விட்டும் உமக்கு நிச்சயமாக நான் உபதேசிக்கிறேன்” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன் : 11:46)
தனது அருமை மகன்மீது பாசத்தால் தேட்டத்தால் அன்பு இருந்தாலும், அல்லாஹு ரப்புல் ஆலமீனின் விருப்பத்திற்கு முன்னால், அந்த பாசமும், தேட்டமும், அல்லாஹு ரப்புல் ஆலமீனால் மறுக்கப்பட்டு விட்டது! யா அல்லாஹ்! எங்களின் பாசமுள்ள, தேட்டமுள்ள மக்களையும் – எல்லா முஸ்லிம்களையும் இது போன்ற இழிநிலையில் இருந்து பாதுகாப்பாயாக! எங்களின் பாசத்தையும் தேட்டத்தையும், அழகாக்கி வைப்பாயாக!
source: http://shuhaibmh.wordpress.com