மூன்று நீதியரசர்களில், இரண்டு பேர் ஷர்மாவும், அகர்வாலும். இந்துக்கள். அதனால் அவர்கள் கொடுத்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குர்யா இடத்தில், ராமர் கூரையின் கீழ் பிறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். யாராவது நீதியரசர் என்ற பெயரில் உள்ளவர்கள் “லாம்” போட்டு ஒரு தீர்ப்பை கொடுப்பார்களா?
இவர்கள் இந்துத்துவாவாதிகளாக இருப்பது இதிலேயே தெரிகிறது. அதேபோல கான் என்ற ஒரு நீதியரசர் மட்டும், 1949 ஆம் ஆண்டு 23 ஆம் நாள்தான் ராமர் சிலையை கொண்டுவந்து மசூதிக்குள் வைத்தார்கள் என்கிறார். அவர் இந்து இல்லை என்பதனால் தைரியமாக இப்படி சொல்ல முடிகிறதா?
அதேபோல அந்த இரண்டு இந்து நீதியரசர்களும், கோவிலை இடித்துதான் மசூதியை கட்டியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இந்த அதி புத்திசாலிகளுக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்த்தது என்று சொல்லவேண்டும்.
கற்பனை கதைகளை சொல்லவும், கடவுள் அங்கே பிறந்திருக்கலாம் என்று சொல்வதற்கும் இது ஒன்றும் அந்த தாத்தாக்களின் வீட்டு பேரன்களுக்கு சொல்லும் கதை இல்லையே? இது நீதி மன்றம் என்பது அவர்களுக்கு தெரியாதா?
சொத்து யாருக்கு சொந்தம் என்று வழக்கு கேட்டால், ஆளுக்கு பாதி எடுத்துகிடுங்க என்பதற்கு இவர்கள் அப்பன் வீட்டு சொத்தா?
இவர்கள் பிரித்துக்கொடுத்தது அயோத்தியில் உள்ள நிலத்தை அல்ல,
மாறாக இந்த நாட்டு மக்களது நெஞ்சங்களை.
இவர்கள் பிரித்து கொடுத்தது இந்த நாட்டு மக்களின் உணர்வுகளை.
இந்த நாட்டு மக்களின் மனதுகளை.
இதற்கு ஒரு நீதியரசர் மற்றும் நீதிமன்றம் தேவையா?
இது ஒருமதச்சர்பு அரசு என்பது பலருக்கு தெரிவதில்லை. அதனால்தான் இங்குள்ள நீதிமன்றமும் ஒருமதச்சார்பு நீதிமன்றமாக இருக்கிறது. தியோகிரடிக் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ஒருமதச்சார்பு அரசு மற்றும் நீதிமன்றம் இருப்பது இப்படியாவது அம்பலமானதே.
தவறான தீர்ப்பு
தீர்ப்பு மிகவும் தவறு என்று வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார். 1992 இல் மசூதி இடிக்கப்பட்டது உண்மையா இல்லையா என்று கேட்டார். அப்படி இடிக்கப்பட்டது உண்மை என்றால், அந்த இடத்தின் சொந்தக்காரர்களான சன்னி வக்போர்டு தொடுத்த வழக்கை எப்படி காலாவதியானதாக கருதி தள்ளுபடி செய்ய முடியும்? என்று வினவினார்.
பிரச்னையை மிகவும் சிக்கலாகக் நீதியரசர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு அல்ல என்பதாக இதன்மூலம் சொல்லுகிறார்களா? இது ஒரு ஒருமதச்சார்பு அரசு இயந்திரம் என்று இதன்மூலம் தெரிகிறதா? தீர்ப்பு ஒரு சார்பானது என்பதை ராஜீவ் தவான் கூறினார்.
மூன்றில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கு கொடுக்கவேண்டும் என்று கூறிவிட்டு, மீதம் இரண்டு பகுதிகளை இரண்டு இந்து அமைப்புகளுக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது இரண்டு இந்து அமைப்புகளுக்கு சேர்த்து, மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்றும், ஒரு பங்குதான் முஸ்லிம்களுக்கு என்றும் தீர்ப்பு கூறுவதாக பொருள். இது ஒருமதச்சார்பு தீர்ப்பு இல்லையா?
பாபர் மசூதி கமிட்டிக்கு ஒரு பகுதியை கொடுத்தால், அதில் பாபர் மசூதியை கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களா? ஒரு பகுதியை நிர்மோகி அகாரா அமைப்பிற்கு கொடுக்க வேண்டும் என்றும், இன்னொரு பகுதியை புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு கொடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறியிருப்பதன் நோக்கம் என்ன?
இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கவா? இது கட்டப்பஞ்சாயத்து போல இல்லையா? நீதிமன்றம் ஒரு சிவில் வழக்கில், சொத்து வழக்கில் ஒனக்கும் இல்லை, அவனுக்கும் இல்லை, இரண்டு பேருக்கும் கொஞ்சம், கொஞ்சம் என்று கூறுமா?
நமக்கு தலை சுற்றுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலை சுற்றட்டும் என்று இப்படி ஒரு விளையாட்டா? எப்படியோ இந்த நாட்டு மக்களுக்குள் ஒற்றுமை இருக்கக்கூடாது என்பது ஆள்வோரின், அதாவது சட்டம் மூலம் ஆளும் நீதியரசர்களின் நோக்கமா? இப்படி குழம்பி திரிகிறார்கள் ஒற்றுமை விரும்புவோர்.
Thanks regards,
Source: http://maniblogcom.blogspot.com/2010/09/blog-post_7527.html