குறிப்பாக இயக்கவாதிகள் மற்றும் பிரிவினையைத் தூண்டும் ஆலிம்கள் அனைவரும் மனதில் அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டிய அறிவுரைகள்!
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவிலிருந்து…
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.” (அல் அதபுல் முஃப்ரத்)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:
“”ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் “இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.” (அல் அதபுல் முஃப்ரத்)நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக மாட்டார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ்முஸ்லிம்)
“ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)